கோத்ரா. ஜூன் 27- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சி.பி.அய் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் குஜராத், ராஜஸ்தான், பீகார் மாநிலங்களில் காவல்துறையினர் பதிவு செய்த வழக்குகளை தன்வசம் எடுத்து விசாரித்து வருகின்றனர். இந்த விசாரணையின் ஒரு பகுதியாக குஜராத் மாநிலத்தில் நீட் தேர்வு நடந்த மய்யங்களில் நேற்று (26.6.2024) அவர்கள் சோதனை நடத்தினர். குறிப்பாக பஞ்ச்மகால் மாவட்டத்தின் கோத்ரா மற்றும் கேதா மாவட்டத்தின் வனக்போரியில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் அவர்கள் சோதனை நடத்தினர். இந்த பள்ளிகள் நீட் தேர்வு மய்யங்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பள்ளிகளில் தேர்வு நடந்த வகுப்பறைகளை ஒளிப்படம் எடுத்துக்கொண்ட அதிகாரிகள், அங்குள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். கோத்ராவில் நீட் தேர்வு எழுதிய 27 மாணவர்களுக்கு உதவ முயற்சித்ததாகவும், இதற்காக ரூ.10 லட்சம் பெற்றுக் கொண்டதாகவும் 3 பேர் மீது காவல்துறையினர் கடந்த மே 8ஆம் தேதி வழக்குப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பிஜேபி ஆளும் குஜராத்தில் நீட் மோசடி : இரண்டு தனியார் பள்ளிகளில் சிபிஅய் சோதனை
Leave a comment