நாடாளுமன்ற எல்லாக் குழுக்களிலும் பிரதமரோடு ராகுலும் அங்கம் வகிப்பார்!
தன்னிச்சையாக மோடி நடப்பதற்குக் கடிவாளம்!
புதுடில்லி, ஜூன் 27 நாடாளுமன்ற மக்களவையில் கடந்த 10 ஆண்டுகளாக காலியாக இருந்த எதிர்க்கட்சித் தலைவர் இருக்கையை, நடந்து முடிந்த 18 ஆவது மக்களவைத் தேர்தல் மூலம் காங்கிரஸ் நிரப்பியிருக்கிறது. மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சியாவதற்கு மொத்தமுள்ள நாடாளுமன்ற இடங்களில் குறைந்தபட்சம் 10 சதவிகித இடங்களையாவது, அதாவது 55 இடங்களையாவது பெற வேண்டும். ஆனால், 2014, 2019 என பா.ஜ.க தனிப்பெரும்பான்மையாக வெற்றிபெற்றதால் எதிர்க்கட்சித் தலைவர் என்ற தகுதி யாருக்கும் கிடைக்கவில்லை.
மக்களவையில் காங்கிரஸ் குழுவின் தலைவராக ஆதிர் ரஞ்சன் சவுத்ரியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக மல்லிகார்ஜுன கார்கேவும் கடந்த ஆட்சியில் செயல்பட்டனர். இத்தகைய, சூழலில் நடந்த முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் 240 இடங்களுடன் தனிப்பெரும்பான்மையை இழந்த பா.ஜ.க, தேசிய ஜனநாயக கூட்டணியாக 293 இடங்களை வென்று ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டது. அதேசமயம், இந்தியா கூட்டணியாகக் களமிறங்கிய காங்கிரஸ் தனியாக 99 இடங்களை வென்று, மக்களவையில் வெற்றிடமாக இருந்த அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி இடத்தை நிரப்பியது.
இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தியை எதிர்க்கட்சித் தலைவராக நேற்று (26.6.2024) காங்கிரஸ் அறிவித்தது. இதன் மூலம், காங்கிரஸ் வரலாற்றில் மூன்றாவது எதிர்க்கட்சித் தலைவரானார் ராகுல் காந்தி. இதற்கு முன்னர், 1989-1990 இல் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் இவரின் தந்தை ராஜீவ் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அதன்பின்னர், 1999-2004 இல் வாஜ்பேயி ஆட்சிக்காலத்தில் இவரின் தாய் சோனியா காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.
இவர்களுக்குப் பிறகு காங்கிரசில் ராகுல் காந்தி தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவியை அலங்கரிக்கிறார். இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தனது முதல் உரையில், “எதிர்க்கட்சிகளை பேச அனுமதிப்பதன் மூலம், இந்திய அரசமைப்புச் சட்டத்தைக் காக்கும் உங்கள் கடமையைச் செய்வீர்கள்” என மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் ராகுல் காந்தி வலியுறுத்தினார்.
கேபினட் அமைச்சர் பதவிக்குச் சமமான தகுதியுடைய எதிர்க்கட்சித் தலைவரை, நிழல் பிரதமர் என்று அழைக்கப்படும் சொல்லாடலும் உண்டு. ஏனெனில், ஆளும் அரசாங்கம் கவிழும் பட்சத்தில் அடுத்து ஆட்சிப்பொறுப்பேற்க உரிமை கோரும் இடத்தில் எதிர்க்கட்சித் தலைவர் இருப்பதால் இவ்வாறு கூறப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரமும்,
அவையில் அவரின் பங்கும்!
*அரசாங்க கொள்கைகளை எதிர்க்கட்சித் தலைவர் கேள்விக்குட்படுத்தலாம்.
*முக்கியமான பிரச்சினைகளில் ஆளும் அரசு பதிலளிப்பதிலிருந்து விலகும் வேளையில், எதிர்க்கட்சித் தலைவர் அதன்மீது விவாதம் கோரலாம்.
*வெளிநாட்டு உறவுகள் மற்றும் பாதுகாப்புக் கொள்கை போன்ற விஷயங்களில், பிரதமர் சில சமயங்களில் உறுதிமொழி எடுப்பதற்கு முன், எதிர்க்கட்சித் தலைவரைக் கலந்தாலோசிக்கலாம்.
குழுக்களில் உறுப்பினர்
*மத்திய விஜிலென்ஸ் கமிஷன் (CVC), மத்திய தகவல் ஆணையம் (CIC), மத்திய புலனாய்வு அமைப்பு (CBI), இந்திய தேர்தல் ஆணையம் (ECI), இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையம், லோக்பால் ஆகிய சட்டப்பூர்வ அமைப்புகளின் தலைமை அதிகாரிகள்/ஆணையர்களை நியமிக்கும் பொறுப்புக் குழுக்களில் பிரதமர், ஒரு ஒன்றிய அமைச்சருடன் எதிர்க்கட்சித் தலைவரும் இடம் பெறுவார்.