சென்னை, ஜூன் 7- புறநகரில் பெய்த மழையால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 545 கன அடி நீர் வந்துள்ளது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.
சென்னை மாநகருக்கு பூண்டி, சோழவரம், புழல், கண்ணன் கோட்டை தேர்வாய்கண்டிகை, செம்பரம்பாக்கம் மற்றும் வீராணம் ஏரிகளில் இருந்து பெறப்படும் நீர் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இதில், தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநில அரசுகள் செய்து கொண்ட கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 டி.எம்.சி. நீர் வழங்க ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டில் உள்ள பூண்டி ஏரிக்கு நீர் திறக்கப்படுகிறது. இதுதவிர பருவகால மழை மூலம் பெறப்படும் நீரும் ஏரியில் சேமிக்கப்படுகிறது.
இந்நிலையில் தற்போது பூண்டி ஏரியில் பராமரிப்புப் பணிகள் நடந்து வருகிறது. இதனால் கிருஷ்ணா நிதி நீர் திட்டத்தின் கீழ் நீர் திறப்பது தற்போது ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. இதனால் பூண்டி ஏரி யில் தற்போது 5.48 சதவீதம் மட்டுமே நீர் இருப்பு உள்ளது. அதேபோல், கடந்த சில மாதங்களாகவே வீராணம் ஏரி வறண்டு கிடந்தது. தற்போது அந்த ஏரியிலும் 40.20 சதவீதம் நீர் நிரப்பப்பட்டுள்ளது.
இதற்கிடையே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முந்காதைய தினம் லை 8 மணியில் இருந்து நேற்று (5.6.2024) காலை 8 மணி வரை உள்ள 24 மணி நேரத்தில் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதனடிப்படையில் பூண்டி ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் 2 மில்லி மீட்டர் அளவு மழை பெய்துள்ளது. அதேபோல் சோழவரம் 5, புழல் 20.4, செம்பரம்பாக்கம் 80 மில்லி மீட்டர், கொரட்டூர் அணைக் கட்டு 4, நுங்கம்பாக்கம் 27,மீனம்பாக்கம் 59.8 மில்லி மீட்டர் என்ற அளவில் மழை பெய்துள்ளது.இதன் மூலம் ஏரிகளின் மொத்த இருப்பு 5 ஆயிரத்து 922 மில்லியன் கன அடி (5.9 டி.எம்.சி.) இருப்பு உள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 7 ஆயிரத்து 85 மில்லியன் கன அடி (7 டி.எம்.சி.) இருப்பு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது என்று நீர்வளத்துறை அதிகாரிகள் கூறினர்.