கருஞ்சட்டை
பொதுவாக கவி அரங்கம், மெல்லிசை உள்ளிட்ட பல இசை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷனில் நடைபெறும்.
அதை நீக்கிவிட்டு, காலை, மாலை சாவர்க்கர் தொடர்பான பாடலை யாரோ எழுத, அதற்கு மெட்ட மைத்து பாடகர்களையும், இசைக் கலைஞர்களையும் அழைத்து வந்து பாட வைத்து வருகின்றனர்.
அண்ணல் அம்பேத்கர், காந்தியார், நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ், ஜவகர்லால் நேரு உள்ளிட்ட இந்திய தேசியத் தலைவர்களின் பாடல்களை ஒரு காலத்தில் ஒளிபரப்பிக் கொண்டிருந்த தூர்தர்ஷன், தற்போது சாவர்க்கர், மோடி போன்றவர்களைப்பற்றிப் புகழ்ந்து எழுதி, அதனைப் பாடலாக்கி ஒளிபரப்பி வருகிறது.
யார் இந்த சாவர்க்கர்?
பாகிஸ்தான் பிரிவினையைக் கடுமையாக விமர் சிக்கும் ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஒன்றைத் திட்ட மிட்டு மறைக்கின்றனர். பாகிஸ்தான் பிரிவினைக்குத் தொடக்கப் புள்ளியை வைத்தவரே சாவர்க்கர்தான்.
1939 இல் லாகூர் மாநாட்டில்தான் இரண்டு தேசங்கள் (இந்தியா மற்றும் பாகிஸ்தான்)பற்றி தீர்மானம் நிறை வேற்றியது முஸ்லிம் லீக்.
ஆனால், அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே 1937 இல் இரண்டு தேசங்கள்பற்றிய தீர்மானத்தை சாவர்க்கரை தலைவராகக் கொண்ட இந்து மகாசபை நிறைவேற்றிவிட்டது.
ஹிந்துத்துவா என்பதன் சூத்ரதாரி சாவர்க்காரே! நீதிபதி ஜே.எஸ்.காபூர் தலைமையிலான விசாரணைக் குழு வின் அறிக்கையில் (ஆறாம் அத்தியாயம்)‘Backround of the Accused’ என்றொரு பகுதி என்ன கூறுகிறது?
காந்தியார் கொலையில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு விரிவாகவே பேசப்படுகிறது.
அந்தமான் சிறையில்கூட கைதிகளை இந்துக்கள், முஸ்லிம்கள் என்று பிரித்து, மித்திரபேதம் செய்தவர் தான் இந்த சாவர்க்கர்! இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில் சங்கநாதம் எழுப்புங்கள் என்று அவர் தூண்டிவிட்டார்.
அந்தமான் சிறையில் இருந்தபோது ஆங்கில அரசிடம் ஆறு முறை மன்னிப்புக் கடிதம் எழுதினார். கடைசி காலத்தில் ஆங்கில அரசுக்கு விசுவாசமாக இருந்து மாதம் ரூ.60 பென்சனும் பெற்றவர் சாவர்க்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த சாவர்க்கார்பற்றி தொலைக்காட்சி (தூர்தர்ஷன்) ‘இந்திரன் சந்திரன்’ என்று நாள்தோறும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. இந்தியாவை ஆள்வது சங் பரிவார் அல்லவா – இவர்களின் குருநாதர்களில் முக்கியமானவர் விநாயக் தாமோதர சாவர்க்கர் அல்லவா!
தூர்தர்ஷனின் இலச்சினை (லோகோ) காவி வண் ணமானதையும் இத்தோடு இணைத்துப் பாருங்கள்!