காங்கிரஸ் கட்சி கண்டனம்
புதுடில்லி, ஏப். 27- டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் கட்சியின் பொதுச் செயலர் ஜெய் ராம் ரமேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேலையில்லாத் திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார சமமின்மை ஆகிய முக்கிய பிரச்சினைகளின் அடிப்படையில் தேர்தல் களத்தில் செயல்பட்டு வருகிறது காங்கிரஸ். மாறாக, பா.ஜ.க. உருவாக்கிய ஆடுகளத்தில் நாங்கள் ‘விளையாட’விரும்பவில்லை.
உண்மையான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப பொய்களை பரப்புகிறார் மோடி. ‘பொய்மையே வெல்லும்’ என்பதே அவரது தாரக மந்திரம். இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் மக்கள்தொகை கணக்கெடுப்பை அவரது அரசுதவிர்த்து வருகிறது.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைக்கு முதலில் மதவாத சாயம் பூசிய பிரதமர், இப்போது அதில் இல்லாத விஷடயங்களை இருப்பதாக பொய் பிரச்சாரம் செய்கிறார். “மோடியின் உத்தரவாதம்’ என்ற முழக்கத்தை கைவிட்ட அவர், மக்களை பிளவு படுத்தும் பேச்சு நடையை பயன்படுத்த தொடங்கியுள்ளார்.
சொத்து வாரிசுரிமை வரி குறித்து தேர்தல் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்பட வில்லை. இந்த வரியை ஒழித்தவர் மறைந்த மேனாள் பிரதமர் ராஜீவ் காந்தி.அதே நேரம், மறைந்த பா.ஜ.க. மூத்த தலைவர் அருண் ஜேட்லி, மற்றொரு மூத்த தலைவர் ஜெயந்த் சின்ஹா ஆகியோர் இந்த வரிக்கு ஆதரவாக பேசியிருக்கின்றனர். உண்மையில், சொத்து வாரிசுரிமை வரியைஅமலாக்க வேண்டுமென்பது பா.ஜ.க.வின் கொள்கை என்றார் ஜெய்ராம் ரமேஷ்.