ஆளுநர் அப்பட்டமான அடாவடித்தனமான அரசியல் செய்வதற்கு அய்யா வைகுண்டரையும் விட்டு வைக்கவில்லை. இந்தப் பசப்பு பொய் புனை சுருட்டு வார்த்தையெல்லாம் அய்யாவழி மக்களிடம் எடுபடாது. அய்யா படைத்த அகிலத் திரட்டு ஏட்டில் அடிப்படை கொள்கையை 6 ஆண்டுகள் தவம் (தவசு) இருக்கும்படி நாராயணர் அய்யாவுக்கு கட்டளை இட்டதாக வருகிறது.
முதல் இரண்டு ஆண்டு கலியுகத்தை அழித்து தர்மயுகம் படைக்க மன்னரின் மற்றும் ஆதிக்க ஜாதிகளின் சர்வாதிகார கலியுகத்தை ஒழித்து (சமதர்ம யுகம் காண்பதற்கு) அடுத்த 2 ஆண்டு தவசு ஜாதியை ஒழிப்பதற்கு (பிராமணியத்தை எதிர்த்த சமத்துவம் படைக்க) மூன்றாம் இரண்டு ஆண்டு தவசு பெண் விடுதலை அடைவதற்கு – ஸநாதனத்தில் இந்த நோக் கங்களா இருக்கின்றன?.
ஜாதி அடுக்கு கொண்ட நால்வர்ண ஸநாதனத்திற்கு எதிராக “தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்” அழுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை உயர்த்தி விடுவதே லட்சியம் என்ற தத்துவ வெளிச்சம் ஸநா தனமா? மக்களை வாட்டி வதைக்க 200 வகையான வரிகளைப் போட்ட மன்னனின் கொடுமைகளை அகிலத்திரட்டு ஏட்டில் அம்பலப்படுத்தி மக்களை உத்வேகப்படுத்தியது ஸநாதனமா?
விவசாயக் கூலித் தொழிலாளர்களுக்கு “கொத் தைக் குறையாதே குறை மரைக்கால் வையாதே” அறு வடைக்கு கூலியான நெல்லைக் குறைக்காதே என்று அறைகூவல் விட்டது ஸநாதனமா? மனிதர்களில் பாகுபாடு வேண்டும் என்று முன்வைத்த ஸநாதனத்தை நொறுக்கும் விதமாக அய்யாவின் கடைசி வார்த்தை கள்தான் பதிகளில் (அய்யாவுக்கு பணிவிடை செய்யும் வழிபாட்டிடம்) அய்யாவழி மக்கள் உச்சரிக்கும் வழி பாட்டு வரிகள். ஒண்ணு சொன்னதை ஒண்ணு கேட்டு ஒருவருக்கொருவர் நிரப்பாய் (சமமாக) இருந் திடுங்கோ” சிந்தனையை விதைத்து விட்டுச் சமாதி யானவர் அய்யா. ஆன்மீக வழி முறையில் மக்களை புளுப்பூச்சி போல் நலித்திய பிராமணிய ஸநா தனத்தை உதைத்து உடைத்து விரட் டியதற்கு ஆயிரமாயிரம் எடுத்துக் காட்டுகள் அகிலத் திரட்டு ஏட்டிலும் அருள் நூலிலும் எடுத்துச் சொல்ல முடியும்.
“ஆயும் கலைத்தமிழும் அருகு போல் வளரும்” என்ற அய்யாவின் அகிலத்திரட்டு வரிகள் ஸநாதன சமஸ்கிருதத்தில் உண்டா? “என் மக்கள் சான்றோர்கள் (நாடார் இனப் பெண்கள்) இடுப்பில் எடுத்த குடம் ஏண்டி இறக்கென்றானே சிவனே அய்யா” என்று அய்யாவின் சாட்டு நீட்டோலை பாடுகிறது. பெண்கள் தலையில் குடம் சுமந்தால் ஆதிக்க ஜாதிக்காரர்கள் பெண்களின் அங்கத்தை ரசிக்கும் கொடுமையை அம்பலப்படுத்துகிறார்.
“பூமக்கள் நீதமுடன் போட்ட தோள் சேலை தன்னை போடாதே என்றடித்தான் சிவனே அய்யா” என்று பெண்கள் மார்புச் சேலை அணிவதைத் தடுத்த கொடுமையை சாட்டு நீட்டோலையில் சாடுகிறார் அய்யா. ஒருவரிகூட அய்யாவின் நூல்களில் படிக்காமல் திமிர்த்தனமாக ஆளுநர் ரவியும் அண் ணாமலையும் ஆதிக்க கட்டுக்கதைகளை அள்ளி விடுவதை அன்புக்கொடி மக்களாகிய அய்யா வழி மக்கள் சகித்துக் கொள்வார்களா?
நன்றி: ‘அங்குசம்’ மார்ச் 16-31 (2024), பக்கம் 15