சென்னை, மார்ச் 24 தென்சென்னை மாவட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ‘ஹிந்தி மொழியை திணிக்காதே! தமிழ்நாட்டின் நிதியை வழங்க மறுக்காதே!’ என்பதை வலியுறுத்தி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ,க. அரசை கண்டித்து 100 அடி பேனர் கையெழுத்து இயக் கத்தில் தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி 23-03-2025 அன்று மாலை 5.30 மணியளவில் சென்னை-பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது.
இவ்நிகழ்வு புரட்சியாளர் பகத்சிங் நினைவு நாளான நேற்று (23.3.2025)ஒருங்கிணைக்கப்பட் டதால் அவருடைய படத்திற்கு தோழமைக் கட்சித் தலைவர்கள் மலர் வைத்து மரியாதை செலுத்தி வீரவணக்கத்தை செலுத்தி னார்கள். நிகழ்ச்சியின் தொடக் கமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.கே.சிவா அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். கட்டாய ஹிந்தித் திணிப்பை எதிர்த்து 100 அடி பேனரில் கையெழுத்து இயக்கத்தை தோழமைக் கட்சித் தலைவர்கள் தங்களது தமிழ் வாழ்க! தமிழ் மொழி வாழ்க! என்று குறிப்பிட்டு தங்களது கையழுத்திட்டு தொடங்கி வைத்தனர்.
திராவிடர் கழகத்தின் சார்பில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன் றன் கையெழுத்திட்டு பின் அவர்தம் உரையில் ‘‘மிக தேவையான காலகட்டத்தில் ஒருங்கிணைப்பட்டுள்ள எழுச்சிப் போராட்டமாகும். இன்று மாவீரர் பகத்சிங் தூக்கிலிடப்பட்ட நாள் மட்டும் அல்ல; உலக நாத்திகர் நாளாகவும் முன்னெடுத்து வருகிறோம். மொழியை பொருத்தவரை அவரவர் தாய்மொழியை படிக்கிறார்கள். ஆனால் ஒரு மொழியை திணிப்பது என்பது எப்பொழுதும் ஏற்புடையது அல்ல; கட்டாயம் ஒரு மொழியை திணிப்பது என்பது வேறு மற்ற மொழிகளின் வரலாறு, பண்பாடு, கலச்சாரத்தையும் அழிப்பதற்கான திட்டமாகும். அதனை ஒரு போதும் அனுமதிக்கமட்டோம்.
இன்று கூட ஒரு செய்தி வந்துள்ளது கருநாடகாவில் 10ஆம் வகுப்புத் தேர்வில் மூன்றாவது மொழியான ஹிந்தியில் 90,000 பேர் தோல்வியடைந்துள்ளனர். சுயமரியாதை உணர்வு, மொழி மானம், பகுத்தறிவு உணர்வு, அறிவியல் மனப்பான்மையை வளர்ந்தெடுக்கும் முயற்சியில் தொடர்ந்து செயல்படுவோம்’’ என்றும், நிகழ்வை திறம்பட ஒருங்கிணைத்து நடத்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் எஸ்.கே.சிவா அவர்களுக்கும், தோழர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்து தனது உரையை முடித்தார்.
கையெழுத்து இயக்த்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தகைசால் தமிழருமான தோழர் இரா.நல்லகண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் எம்.பி., மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், மே 17 இயக்கத் தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், மருத்துவர் எ.ஆர்.சாந்தி, டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் பேராசிரியர் தீபக் நாதன், பத்திரிக்கையாளர் கவிதா முரளிதரன் மற்றும் தோழமைக் கட்சித் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் பெருமளவில் பங்கேற்றனர்.