ஏபிளாஸ்டிக் அனீமியா நோய் ஹைபோபிளாஸ்டிக் அனீமியா, போன் மார்ரோ ஃபெய்லியர் என்றும் அழைக்கப்படுகிறது.
போன் மார்ரோ எனப்படும் எலும்பு மஞ்ஜை போதிய அளவில் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய முடியாமல் போகும் நிலையே ஏபிளாஸ்டிக் அனீமியா. எலும்புக்குள் இருக்கும் மெல்லிய திசுப் பகுதியே எலும்பு மஞ்ஜை. இதுதான் ரத்த சிவப்பணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், ரத்த தட்டுக்களை உற்பத்தி செய்யும்.
ரத்த ஸ்டெம் செல்களில் ஏற்படும் சேதங்களால் ஏபிளாஸ்டிக் அனீமியா ஏற்படுகிறது. ஸ்டெம் செல்கள் என்பது எலும்பு மஞ்ஜையில் உள்ள முதிர்ச்சியடையாத செல்கள் ஆகும், அவை அனைத்து இரத்த அணு வகைகளையும் அதாவது சிவப்பு இரத்த அணுக்கள், வெள்ளை இரத்த அணுக்கள் மற்றும் ரத்த தட்டுகளையும் உருவாக்குகின்றன. ஆனால், ஸ்டெம் செல்களில் ஏற்படும் காயம் இந்த இரத்த அணு வகைகளின் உற்பத்தி குறைவதற்கு காரணமாகிறது.
இவை ஏற்படக் காரணங்கள்..
சில மருந்துகள், சில வேதிப்பொருள்களின் பயன்பாடு.
அணுக்கதிர் வீச்சுகள், கீமோதெரபி
நோயெதிர்ப்பு சக்தியில் ஏற்படும் குறைபாடு
கருவுற்றிருப்போருக்கு
சில நுண்ணுயிரி தொற்றுகள் காரணமாகின்றன. ஆனால், சில வேளைகளில் இதற்கு எந்த அடிப்படைக் காரணமும் கண்டறியப்படுவதில்லை. இந்த நேரங்களில் இதனை இடியோபாதிக் ஏபிளாஸ்டிக் அனீமியா என்கிறார்கள்.
சிவப்பணுக்கள் குறைவதால்..
மயக்கம்
உடல்தளர்வு
இதயத் துடிப்பு அதிகரிப்பு
உடல் பலவீனம்
நிற்கக் கூட முடியாத நிலை.
வெள்ளை அணுக்கள் குறைபாடு தொற்றுநோய்கள் எளிதாக தாக்கும் அபாயம் ஏற்படும்.
ரத்தத் தட்டுகள் குறைபாடு
பல் ஈறுகளில் ரத்தக் கசிவு
எளிதாக காயங்கள் ஏற்படுதல்
மூக்கில் ரத்தக் கசிவு
தோலில் சிவப்பு தடிப்புகள்
மோசமான தொற்று பாதிப்புகள் ஏற்படலாம்.
மருத்துவப் பரிசோதனைகள் மூலம் கிடைக்கும் முடிவு
சிவப்பு அணுக்கள் குறைபாடு (அனீமியா)
வெள்ளை அணுக்கள் குறைபாடு (லூகோபீனியா)
ரெட்டிகுலோசைட் எண்ணிக்கை குறைபாடு (இளம் சிவப்பு அணுக்கள்)
ரத்தத் தட்டுகள் குறைபாடு – (த்ரோம்போசைட்டோபீனியா)
இதன் அடிப்படையில், எந்தவிதமான பாதிப்பு என்பது கண்டறியப்படும்.
சிகிச்சைகள்
ரத்த அணுக்கள் குறையும் போது ஆரம்பக் கட்டத்தில் ரத்த அணுக்கள் மற்றும் ரத்த தட்டுகள் உடலில் ஏற்றப்படும். அது வேலை செய்யாத போதுதான் உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்படும்.
எலும்பு மஞ்சை அல்லது ரத்த அணுக்கள் உற்பத்தி மய்யம் கொடையாகப் பெறப்பட்டு பொருத்தப்படும். இது இளம் வயதினருக்கு மட்டுமே செய்யப்படும் சிகிச்சை. இதற்கு, கொடை பெறுபவருக்குப் பொருந்தக் கூடிய எலும்பு மஞ்ஜை கிடைக்க வேண்டும். இதில்தான் பெரும் சவால் இருக்கிறது.