கோவை, மார்ச் 24- கோவையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
இரா.முத்தரசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு என்ற வீண் முயற்சியை மேற்கொண்டு வருகிறது.
இது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருமுன் காப்போம் என்ற அடிப்படையில் தடுத்து நிறுத்த தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினார்.
தற்போது தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படும் மாநிலங்களை ஒருங்கிணைத்து கூட்டம் நடத்தியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு என்பது ஒரு கட்சியின் பிரச்சினையோ அல்லது ஒரு மாநிலத்தின் பிரச்சினையோ அல்ல. ஒட்டுமொத்தமாக நாட்டிற்கே உரிய பொதுவான பிரச்சினை.
பாஜவினர் கருப்புக்கொடி எதற்கு காண்பித்தார்கள் என தெரியவில்லை. கருப்புக்கொடி யாருக்கு காட்ட வேண்டும்? தமிழ்நாட்டின் நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க முயலும் பிரதமர் மோடிக்குதான் காட்ட வேண்டும்.
அண்ணாமலை தமிழ்நாட்டில்தான் இருக்கிறாரா? தமிழன்தானா? என கேட்கிறேன். இப்பிரச்சினையை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் திசை திருப்ப பாஜ முயற்சிக்கிறது.
அண்ணாமலை, தமிழிசை வீட்டில் மட்டும்தான் கருப்புக்கொடி ஏற்ற முடியும். வேறு எங்கும் கருப்புக்கொடி ஏறாது.
இவ்வாறு அவர் கூறினார்.