வாய்மொழிப் பயிற்சியன்றி வேறுமொழிப் பயிற்சி ஏதும் வேண்டாமா என்று கேட்கத் தோன்றும் வெளியுலகுடன் தொடர்பு கொள்ளவும், விஞ்ஞான அறிவை வளர்க்கவும் வேற்று மொழியொன்று தமிழ் நாட்டிற்குத் தேவைப்படுகிறது. இப்பொழுது தேவையான அளவு விஞ்ஞான நூல்கள் தமிழில் இல்லை. காலப்போக்கில் அவை தமிழில் வளரும் என்றபோதிலும், அந்த நிலையில் கூட வேறு மொழி யொன்று தேவைப்படும்.
வெளியுலகத் தொடர்பு
இந்த இரண்டு காரணங்களுக்கும் இந்தி ஏற்றதல்ல. இந்திமொழி தெரிந்திருந்தால் வடநாட்டில் அய்க்கிய மாகாணத்தில் மட்டும் தெளிவாகப் பேச முடியுமேயன்றி, இந்தியா முழுமையுங்கூட வழங்க இயலாது. இந்த நிலையில் வெளியுலகுடன் தொடர்பு என்று நினைக்கும்போது, இந்தி என்ற எண்ணமே எழாது. விஞ்ஞான வளர்ச்சியில் இந்தி தமிழைவிட எத்தனையோ தொலைவில் பின்னணியில் இருந்து வருகிறது. விஞ்ஞானக் கல்விக்கும் இந்திப் பயிற்சி பயன்படுவதில்லை. பண்டித நேரு இதைப் பற்றிக் கூறும்போது,
“இந்தி, உருது, இரண்டு மொழிகளும், தற்கால எண்ணங்களை, விஞ்ஞான, அரசியல், பொருளாதார, வியாபார, சில சமயங்களில் கலாச்சார கருத்துக்களைக்கூட விளக்குவதற்கு முடியாத நிலையில் இருக்கிறது”
காந்தியார்
என்று தெளிவுபடக் கூறினார். எனவே, இந்தி மொழியின் வழியாக விஞ்ஞான அறிவையும், நாம் எவ்விதத்திலும் அடைய முடியாது. அந்தத் துறையிலும் இந்தி நமக்குக் கிஞ்சிற்றேனும் பயன்படுவதாயில்லை.
விஞ்ஞான அறிவு
இற்றைக் காலங்களில் விஞ்ஞான அறிவில் மேம்பட்டு விளங்கும் ஆங்கிலம், பிரஞ்சு, ஜெர்மன் போன்ற மொழிகளே அவ்வறிவினைப் பெற பெரிதும் உதவிசெய்யும் மொழிகளாக இலங்கி வருகின்றன. அத்தகைய உயர்ந்த நிலை மற்றவைகளுக்கும் உண்டாகலாம்; இனிதான் உண்டாகவேண்டும். இப்பொழுதுள்ள நிலையில் இந்த மொழிகளில் ஒன்றின் துணையின்றி உலகிலுள்ள எந்த நாடும் விஞ்ஞான அறிவை எளிதில் பெறமுடியாது. இந்த மூன்று மொழிகளிலும் ஆங்கிலமே விஞ்ஞான அறிவு பரப்பும் சிறந்த மொழியாக விளங்குகிறது. அதுமட்டுமல்லாமல் ஆங்கிலந்தான் உலகப் பொது மொழியாகக் கொள்ளப்பட்டு, அதன்மூலம் பல்வேறு நாடுகளுக்கிடையே உறவு, பேச்சுவார்த்தை, ஒப்பந்தம், வாணிகம், பொது அறிவு விளக்கம், கலாச்சாரம் பரிமாறல் முதலிய பல செயல்களும் ஆற்றப்படுகின்றன.
இந்தியால் முடியாது.
சுந்தரம்
இந்தச் செயல்களில் ஒன்றினைக்கூட, இந்தியப் பொதுமொழியாக ஆக்க முயற்சி செய்யப்படும் இந்தியால் நிறைவேற்றி வைக்க முடியாது. ஆங்கில மொழியை வைத்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றிவர முடியும்; அதையே வைத்துக்கொண்டு இந்தியாவையும் சுற்றி வரமுடியும். ஆங்கிலம் இங்கிலாந்தைத் தவிர்த்து அமெரிக்கா, ஆஸ்திரேலியா நாடுகளில் முழுவதும் வழங்குவதுடன், கனடா, தென்னப்பிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், மலேயா, பர்மா, இலங்கை, நியூஜிலாந்து போன்ற தொடர்புடைய நாடுகளிலும் பரவியிருக்கிறது. உலகில் எந்த நாட்டிலும் எழுதப்படும் விஞ்ஞான நூலை உடனே மொழி பெயர்த்துக் கொடுக்கும் மொழி ஆங்கிலமே யாகும். கிரீக்கிய மொழிகளிலிருந்து மிகச் சாதாரண மொழி ஈறாக உள்ள பல்வேறு மொழிகளில் சிறந்து விளங்கும் இலக்கியச் செல்வங்களையெல்லாம் உலகோர் படித்தின்புறும் வண்ணம் மொழிபெயர்த்துத் தரும் மொழியும் ஆங்கிலமேயாகும். ஆயிரக்கணக்கான பதிப்புகளையும், இலட்சக்கணக்கான நூல்களையும் வெளியிடும் மொழியும் ஆங்கிலந்தான்.
மனமாற்றம்
இந்தியாவில் ஆங்கிலம் வந்து 150 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டதால் அந்த மொழியில் ஓரளவுக்கு நல்ல பயிற்சியும் மக்களுக்கு ஏற்பட்டுவிட்டது. மேற்கூறிய தன்மைகள் பொருந்திய ஆங்கிலத்தை இந்தியாவிலிருந்தே விரட்டியடிக்க வேண்டும் என்று இந்தி ஆதரிப்பாளர்களும், தேசியத் தலைவர்களும் சென்ற சிலகாலம் வரையில் சொல்லி வந்தார்கள். அப்படிச் சொல்லி வந்ததன் நோக்கம் ஆங்கிலம் இருக்கும் இடத்தை இந்தியால் நிரப்பிவிட வேண்டும் என்பதாகும். ஆனால் இந்தியா விடுதலையடைந்து; காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சிப்பீடம் ஏறிய பிறகு, உலகில் ஆங்கிலத்தின் உயரிய இடத்தை அறிந்து, அதை விட்டுவிடக் கூடாது என்றும், அதில் நல்ல பயிற்சி பெறவேண்டும் என்றும் கவர்னர் – ஜெனரலிலிருந்து கொடி தூக்கும் தேசிய காங்கிரஸ் தொண்டன் வரையில் இன்று கூறி வருகிறார்கள். ஆங்கில ஏகாதிபத்தியத்தின் மேலெழுந்த வெறுப்பின் காரணமாக ஆங்கிலம் வேண்டாம் என்று கூறுவோர் இரண்டாவது பிரிவினராவர். இந்திக்குச் சலுகை கொடுக்க வேண்டுமென்று எண்ணியவர் – ஆங்கிலம் அறவே கூடாது என்று கூறியவர் இந்த இரு சாராரும் ஆங்கிலம் அந்நிய மொழி ஆகவே அது இந்தியாவில் வேரூன்றக்கூடாது என்று வாதிட்டு, அதனை அகற்ற நினைத்தார்கள். ஆனால் ஆட்சிப் பீடம் ஏறிய பிறகு நிலைமையில் தெளிவேற்பட்டதால் அந்த எண்ணத்தை அகற்றிவிட்டனர்.
அந்நிய மொழிகள்
தமிழ் நாட்டைப் பொறுத்தவரையில் இந்தி, ஆங்கிலம் இரண்டும் அந்நிய மொழிகளே யாகும். இந்த இரண்டில் எந்த வகையிலும் ஆங்கிலமே தேவையான பயன் தரக்கூடிய மொழி. மேலும் ஆங்கிலப் பயிற்சி உயர்ந்த நிலைக்கு வந்துவிட்டது. இந்த நிலையில் ஆங்கிலப் பயிற்சியை விட்டு இந்தியை ஏற்றுக் கொள்வதென்பது தேமாங்கனியை நீக்கி விட்டு எட்டிக்காயை ஏற்றுக்கொள்வதற் கொப்பாகும். ஆங்கிலம் பயிலவேண்டிய இடத்திலும், நேரத்திலும் இந்தி கொண்டுவந்து நுழைக்கப்படுமானால் விஞ்ஞான வளர்ச்சி தடைப்படுவதுடன், வெளியுலகத் தொடர்பும் அறுபடுவதாக முடியும்.
ஆங்கிலத்தால் கிடைத்தவை
இந்தியாவில் வளர்ந்த விடுதலை வளர்ச்சி, சுதந்திரம், அரசியல் பொருளாதாரம், சமூகக் கருத்துக்கள், விஞ்ஞான வளர்ச்சி அனைத்தும் ஆங்கிலப் பயிற்சியால் கிடைத்தவைகளே. இந்த வளர்ச்சியால் தொடர்ந்து நன்மை பெறுவது அறிவுடைமையாகுமேயன்றி குறுகிய விருப்பு-வெறுப்புக்களால் நம்மை நாமே இருட்டறையில் அடைத்துக்கொள்ளக் கூடாது. எனவே உலகப் பொதுமொழியாக விளங்கும் ஆங்கிலம் இந்தியாவுக்கும்-திராவிடத்துக்கும்-தமிழகத்துக்கும் பொது மொழியாக ஏற்றுக் கொள்ளப்படலாம்; கூடும் – முடியும் – வேண்டும்.
சமஸ்கிருத மறுமலர்ச்சிக்கு முயற்சியா?
மிகக் குறுகிய காலத்தில் உண்டான மொழி, இலக்கண இலக்கிய வளமில்லாத மொழி, வெளியுலகத் தொடர்பற்ற மொழி, விஞ்ஞான வளர்ச்சிக்கு உதவாத மொழி – இந்தப் பொதுப் பண்புகளனைத்தையும் கொண்டுள்ள இந்தி பொதுவாகத் தென்னாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் வலியுறுத்தப்படுகிறது.
கலாச்சார மோதல்
இவ்வாறு வலியுறுத்துவது வடநாடு -தென்னாடு என்ற பிளவை மேலும் அதிகப்படுத்துவதாகத்தான் இருக்கிறது. வடக்கிலும் தெற்கிலும் நிலவும் கலாச்சாரங்களிடை மோதுதலை உண்டாக்குவதாக முடியும் என்பதில் அய்யமில்லை. வட நாட்டில் தோன்றிய இந்தி-உருது பிரச்சினை இந்து-முஸ்லிம் வேற்றுமையைக் கிளப்பி நாட்டின் வேதனையைப் பெருக்கியது போல, தமிழ்-இந்திப் போராட்டமும் மொழியளவில் மட்டும் நிற்குமா என்பது சந்தேகந்தான்! இரண்டு இடங்களிலும் மாறுபட்ட கலாச்சாரங்கள் வழங்குவதாலும், கலாச்சாரங்களைத் தாங்கியே மொழிகள் அமைத்துள்ளபடியாலும் இரண்டிற்கும் மோதுதல் ஏற்படாமல் பாதுகாப்பதே அறிவுடைமையாகும்.
பிரிவினைக்கு வித்து
வேறுபாடு – முரண்பாடு – பிணக்கு – மோதுதல் இவைகளுக்குள்ள கலாச்சாரங்களில் ஒன்று மற்றொன்றின் மேல் படையெடுக்கும்போது போராட்டம் நாட்டுப்பிரிவினை வரையில் கொண்டுபோய் விடும் என்பது பாகிஸ்தான் பிரிவினையால் தெள்ளத் தெளிய உணரலாம். அதுபோல இந்தியை நுழைப்பதன் மூலம் தமிழ்-இந்தி, தமிழ் கலாச்சாரம்-வடநாட்டுக் கலாச்சாரம் தென்னாடு-வடநாடு என்ற போராட்டங்களைத் துவக்குவது திராவிட நாட்டுப் பிரிவினைக்கு வித்திடுவதாகத் தான் முடியும். அது ஒரு வகையில் நம்மனோரால் வரவேற்கத்தக்கதுதான் என்றாலும், அந்த முடிவு சமர் முறையாலல்ல, சமாதான முறையில் ஏற்படவேண்டும் என்பது நமது அவா!
மாறுபட்ட பல கலாச்சாரங்கள் வழங்கும் ஒரு பெரிய துணைக்கண்டத்தில் ஏதாவது ஒரு கலாச்சாரந்தான் இருக்கவேண்டும் என்ற நீதியில்லை. இரண்டு கலாச்சாரங்களிருந்தால் அவற்றைச் சச்சரவின்றிப் பாதுகாப்பதே சமாதான அரசியலமைப்புக்கு அடையாளமாகும்.
மொழிக் கிளர்ச்சி
தென்னாட்டில் குறிப்பாகத் தமிழ் நாட்டில் மொழிக்கிளர்ச்சி பல ஆண்டுகளாக நடைபெற்று வருவது அரசியலார் அறியாததல்ல. வடமொழி-தென்மொழி பேதம் பற்றிய ஆராய்ச்சிகளை அவர்கள் கேட்காமலில்லை. வடமொழி – தமிழ்த் தகராறு பேராசிரியர் சுந்தரம் பிள்ளை காலத்திலிருந்தே வளர்ந்து வருகிறது.
சமஸ்கிருதத்திற்கும், தமிழுக்கும் ஒத்துக்கொள்ளா தன்மைகள் பல இருப்பதையும், அவை ஆரியர் – திராவிடர் என்ற கலாச்சார வேற்றுமையைக் கிளப்புவதையும் அரசியலார் உணர்ந்திருக்க வேண்டும். இந்திப் பிரச்சாரத்தின் இடையில் சமஸ்கிருதத்தின் மேன்மையையும், சமஸ்கிருதம் மிகுந்த இந்தியின் அவசியத்தையும் பேசக் காண்கிறோம். இது சமஸ்கிருதம் – தமிழ் வேற்றுமையை வலியுறுத்துவதுடன், தமிழுக்கு எதிராக சமஸ்கிருதத்தைச் சார்ந்து இந்தி வருகிறது என்ற எண்ணத்தையும் பரப்புகிறது.
சமஸ்கிருத செல்வாக்கு
இந்தியைப் புகுத்துவது சமஸ்கிருதத்தின் செல்வாக்கை மிகப்படுத்துவதற்கேயாகும் என்ற கருத்தை தோழர் சி. இராஜகோபாலாச்சாரியார், முன்னாள் சென்னை முதலமைச்சராயிருந்த காலத்தில் வெளியிட்டார். இந்தி ஆதரிப்பாளரில் பெரும்பாலோரைக் காணும்போது, அவர்கள் சமஸ்கிருதத்தைத் தங்கள் தாய்மொழியாகக் கொள்பவர்களாகவும், சமஸ்கிருதத்திற்கு எவ்வகையிலும் உயர்வு தேடுபவராகவும் இருக்கக் காண்கிறோம். இந்த எண்ணமே இந்தி ஆதரிப்பாளர் பலருக்கு முக்கிய காரணமாக இருக்கிறது.
இந்த உள் எண்ணத்தைக் காந்தியாரே கண்டித்திருக்கிறார். இந்துஸ்தானி மொழியைப் பற்றிய கட்டுரையில், உருதுச் சொற்களைத் தள்ளிவிட்டுத் தூய சமஸ்கிருதச் சொற்களை நுழைக்கப் பாடுபடுபவர்களைக் குறித்து எழுதும்போது,
ஆரிய மயமாக்கல்
“இந்த நண்பர்கள், வாழ்கிற, வழங்குகிற மொழியைப் பற்றிய பிரச்சாரத்தை விட்டு, இந்திய வாழ்வை ஆரிய மயமாக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது”
என்று குறிப்பிட்டுள்ளார். சமஸ்கிருதச் சொற்களுக் காகவும், சமஸ்கிருதம் மிகுந்த இந்தி மொழிக்காகவும் செய்யப்படும் முயற்சிக்குக் காந்தியார் தரும் பெயர், “இந்திய வாழ்வை ஆரிய மயமாக்கும் வேலை” என்பதாகும்.
இன்று திராவிட மொழிகளிடை வருவது சமஸ்கிருதம் மிகுந்த இந்தி மொழி. காந்தியார் கூற்றுப்படி திராவிடக் கலாச்சாரத்தை ஆரிய மயமாக்கும் வேலை. ஆகவே இது வெறும் மொழிச் சண்டை மட்டுமல்ல; கலாச்சாரங்களைப் போராட்டத்துக்குத் தூண்டும் தீச்செயலுமாகும். இதற்குக் காந்தியாரே சாட்சி கூறிவிட்டர்.
வேதகால இந்தியா
இந்திப் பிரச்சாரத்தில் சமஸ்கிருதத்தைத் திரும்ப உயர்ந்த நிலைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், ஓரிருயிடங்களில் சமஸ்கிருதமே பொது மொழியாக வேண்டும் என்றும் கூறப்படுகின்றன. சமஸ்கிருதம் என்று கூறும்பொழுது, வேதகால இந்தியா, அதன் மேன்மை, விக்கிரம சகாப்தத்தின் பொற்காலம், உபநிஷத்துக்கள் சட்டமாக்கப்பட வேண்டிய அவசியம், சமஸ்கிருதக் கல்லூரிகள் ஏற்படவேண்டிய அவசரம் முதலியவை முதன்மைப்படுத்தி பேசப்படுகின்றன.
சமஸ்கிருதத்திற்குப் பள்ளிப் பாடத்திட்டங்களில் சிறந்தவொரு இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று செல்வாக்குப் படைத்த பார்ப்பன அறிவாளிகள் அனைவரும் ஒருமித்துக் கூறுகின்றனர்; ஓயாது கூறுகின்றனர். இப்படியாக சமஸ்கிருத மறுமலர்ச்சிக்குப் பாடுபடுபவர்களின் போக்குக்குத் தலையாட்டும் பொம்மைகளாகவே இன்றைய அரசியலாரும் இருந்து வருகின்றனர்.
பெருமைக்குரிய பண்புகள்
சமஸ்கிருத மொழி பேச்சு வழக்கில் இல்லாது போனதால், அன்றாடக் கருத்துக்கள் அதில் இடம் பெற வழியில்லாமல் பழைமை மொழியாகவே நின்றுவிட்டது. வழக்காற்றிலுள்ள தமிழ் போன்ற ஏனைய சிறந்த மொழிகளைப் பின்னுக்குத் தள்ளும் அளவுக்கு அதற்கு ஆதிக்கம் தேட முயற்சி செய்யப்படுகிறது.
சமஸ்கிருத மொழி வளர்ச்சி தமிழின் தனிப்பெரும் பண்புகளை இதுவரையில் மாய்த்து வந்ததோடல்லாமல் இன்னும் மாயச் செய்வதற்கும், வேதகால சனாதன வர்ணாசிரம பழைமையின் பிடியை வலுப்படுத்துவதற்கும் பயன்படுவதாகவே முடியும். மேலும் தமிழின் சிறந்த இலக்கியங்களாகக் கருதப்படும் சங்க கால இலக்கியங்களில் காணப்படும் அறம், காதல், உலகியல், வாழ்வின் உண்மை போன்ற பெருமைக்குரிய பண்புகளுக்கு மாறாக, சமஸ்கிருதத்தின் வேத உபநிஷத்துக்கள் கூறும் கற்பனை வாழ்வு, குருட்டு நம்பிக்கை, மடமைக் கொள்கை ஆகிய இவை சமஸ்கிருத மறுமலர்ச்சியால் மேன்மேலும் வளர ஆரம்பிக்கும்.
பிரிவினை
தமிழ்நாட்டில் தமிழிலக்கியத்தைத் தாழ்த் தும் வகையில் சமஸ்கிருதத்துக்கு ஆதரவு காட்டப் படுமானால் அது தமிழிலக்கியப் பண்பாட்டைக் கெடுத்து வேதகால மத சம்பந்தமான மாய வாழ்க்கைக்கு மக்களைக் கொண்டு போய்ச் சேர்க்கும். ஒரு பழைய மொழி என்ற அளவில் ஆராய்ச்சிக்காக சமஸ்கிருதம் பயிலப்பட வேண்டுமேயொழிய, வேத காலத்தையும், விக்ரம சகாப்தத்தையும் திரும்பப் பெறுவதற்கு முயலும் வழியாக அமையக் கூடாது.
மாறாக அமையும்படி செய்யப்படின், கலாச்சாரப் போராட்டம் மூண்டெழுந்தே தீரும். அது வடநாடு – தென்னாடு பிரிவினையின் அவசியத்தை அருகே அழைத்து வந்து சேர்ப்பதாகத் தான் முடியும்.