நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று (21.3.2025) பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ் குறித்து அக்கறை யோடு பேசுவது போல பேசினார்.
பாஜக கூட்டணி ஆட்சி அமையும்போது பொறியியல் மற்றும் மருத்துவப் படிப்புகளை தமிழில் படிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று பேசினார். உடனே நிர்மலா சீதாராமன் மேஜையைத் தட்டி வரவேற்றார்.
ஆனால் உண்மை என்னவென்றால் பொறியியல் பட்டப்படிப்பை முதன்முதலில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் முதலமைச்சர், கலைஞர் 2010-ஆம் ஆண்டிலேயே அறிமுகப் படுத்தி விட்டார். மாநில மொழிகளில் தமிழ் மட்டும் தான் பொறியியல் படிப்பை நடத்திக்கொண்டு இருக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக பொறியியல் படிப்பினைத் தாய்மொழியில் கற்க ஏற்பாடு செய்து, அண்ணா பல்கலைக்கழகத்தில் கட்டட (சிவில்) மற்றும் இயந்திரப் (மெக்கானிக்கல்) பொறியியல் படிப்புகளைத் தமிழில் அறிமுகம் செய்து, தி.மு.க. ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழில் பொறியியல் கல்வி இன்றும் நடைமுறையில் உள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழில் பொறியியல் படிப்பு நடைமுறையில் உள்ளது
தமிழில் பொறியியல் கல்வி படித்து பி.இ., பட்டம் பெற்ற தமிழ்நாட்டு இளைஞர்கள் இன்றைக்குப் பொதுப்பணித்துறை, வீட்டு வசதி வாரியம், மெட்ரோ ரயில் திட்டம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், நெடுஞ்சாலைத்துறை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் போன்ற பல துறைகளில் பொறியாளர்களாகவும், பல பன்னாட்டு நிறுவனங்களின் உயர்பதவிகளை அலங்கரிப்ப வர்களாகவும் பணியாற்றி வருகிறார்கள்.
ஏன், அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ்வழியில் பொறியியல் படிப்பில் பட்டம் பெற்ற செல்வி. அய்ஸ்வர்யா அவர்கள்தான் 2020-ஆம் ஆண்டு குடிமைப் பணித் தேர்வில் (IAS) வெற்றி பெற்றவர் ஆவார். 2022-2023-ஆம் ஆண்டு முதல் பட்டயப் படிப்புகளிலும் மேற்காண் பாடப்பிரிவுகள் தமிழ்வழியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் தொடங்கப் பட்டுள்ளன. அதற்காகப் பொறியியல் பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள் தமிழ்வழியில் வெளியிடப்பட்டுள்ளன. பொறியியல் பட்டப் படிப்பு சிவில், மெக்கானிக்கல் என்பதையும் தாண்டி, கணினி அறிவியல் பிரிவும் தமிழில் தொடங்கப்பட்டுள்ளது. தமிழர் மரபும், தமிழரும் தொழில்நுட்பமும் நடப்பாண்டில் பொறியியல் கல்லூரிகளில் ஏற்ெகனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சரி ஹிந்தி மொழியில் மருத்துவம் பொறி யியல் உள்ளிட்ட தொழிற் கல்விக்கு நூல்கள் இருக்கிறதா? என்றால் இன்றுவரை இல்லை.
ஏனென்றால் மருத்துவம் பொறியியலுக்கு நிகரான சொற்கள் ஹிந்தியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எந்தத் தகவலையும் தரவுகளையும் சரி வரத் தெரிந்து கொள்ளாமல், குறைந்தபட்சம் அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அக்கறையும் இல்லாமல், வாய்ப் புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்ற முறையில் உயர் பதவியில் இருக்கக் கூடியவர்கள் பேசுவது ஆரோக்கியமானதுதானா?
உள்துறை அமைச்சரின் இந்தப் பேச்சு நாடாளுமன்ற ஆவணத்தில் பதியப்படும் என்ற பொறுப்புணர்ச்சி இருக்க வேண்டாமா?
உள்துறை அமைச்சர் தவறாகக் கூறும் தகவலை ஆதரிக்கும் வகையில் ஒன்றிய நிதி அமைச்சர் மேசையைத் தட்டி உற்சாகப் படுத்துவதை எல்லாம் எந்தப் பட்டியலில் சேர்ப்பது?