சென்னை அய்.அய்.டி.யில் இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது அம்பலமாகி உள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் மணி எழுப்பிய கேள்விக்கு சென்னை அய்.அய்.டி. பதில் அளித்துள்ளது. எஸ்.சி-15 விழுக்காடு, எஸ்.டி-7.5 விழுக்காடு, ஓ.பி.சி-27 விழுக்காடு ஆகிய ஒன்றிய அரசின் இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படுவதாக அய்.அய்.டி தகவல் தெரிவித்துள்ளது.
ஆசிரியர் பணியில் ஒ.பி.சி-26, எஸ்.சி-17, எஸ்.டி-6 ஆகிய ஆசிரியர்களும், ஒதுக்கீடு அல்லாமல் 78 பேரும் நேரடி நியமனத்தில் பணி கிடைத்துள்ளது. ஆசிரியரல்லாத பணியில் ஓ.பி.சி-47, எஸ்.சி-31, எஸ்.டி-6 மற்றும் ஒதுக்கீடு அல்லாமல் 144 பேரும் நேரடி நியமனத்தில் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். 2019 முதல் பின்பற்றப்படும் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீட்டின் கீழ் நியமிக்கப்பட்டவர்கள், முன்னேறிய வகுப்பினர் பிரிவில் நியமிக்கப்பட்டவர்கள் குறித்த தகவல்களையும் சென்னை அய்.அய்.டி. வழங்கவில்லை.
மொத்த நியமனத்தில் ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி ஆகியோர் 40.9 விழுக்காடு, ஒதுக்கீடு அல்லாமல் 59.07 விழுக்காடு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 8,000 மாணவர்கள் பயிலும் சென்னை அய்.அய்.டி.யில் பேராசிரியர், இணை, உதவி பேராசிரியர்கள் என 550க்கும் மேற்பட்டோர் உள்ளனர். நிர்வாக பணியில் சுமார் 1,250க்கும் மேற்பட்டோர் உள்ளதாக சென்னை அய்.அய்.டி. இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், மிக சொற்பமான எண்ணிக்கை மட்டுமே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் “இந்தியாவில் உள்ள அய்அய்டிகளில் 2023 – 2024 கல்வி ஆண்டில் எத்தனை முனைவர் பட்ட மாணவர்கள் அனுமதிக்கப்பட்டார்கள், அவர்களில் எத்தனைப் பேர் எஸ்.சி, எஸ்.டி, இதர பிற்படுத்தப்பட்டோர் என்பதை துறைவாரியாக தருமாறு நாடாளுமன்றத்தில் 10.2.2025 அன்று கேள்வி எழுப்பி இருந்தார்
அப்போதே இட ஒதுக்கீட்டின் வாயிலாக மாணவர்கள் பெற்ற அனுமதி விவரங்களை, பிரிவு வாரியாக, துறைவாரியாக, நிறுவனவாரியாக அமைச்சர் தரவில்லை. முழு விவரங்களைத் தருவது இட ஒதுக்கீட்டு அமலாக்கத்தில் உள்ள இடைவெளிகளை அம்பலப்படுத்தும் என்பதால் திட்டமிட்ட நோக்கத்துடன் மறைக்கப்பட்டு இருக்கிறது அமைச்சர் தந்துள்ள அரைகுறை விவரங்களைக் கொண்டே இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என்பது உறுதியாகிவிட்டது
ஆயிரக்கணக்கான எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி.யினர் தங்களின் கல்வி எதிர்காலத்தை இழந்துள்ளனர். ஒன்றிய அரசு இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் விவரங்களை தராததன் மூலம் அரசு முறைகளை மீறி இருக்கிறது இதன் மூலம் அய்.அய்.டி. நிறுவனம் உயர்ஜாதியினரின் புகலிடமாக உள்ளது என்பது மீண்டும் உறுதியாகி உள்ளது.
சமூகநீதி இடஒதுக்கீடு என்பது சட்டப்படியான ஒன்று. அதனை ஓர் அரசு நிறுவனம் கடைப்பிடிக் கவில்லை என்றால் அதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படியான நடடிக்கை எடுக்கப்பட வேண்டாமா?
அய்.அய்.டி. நிறுவனமா – அய்யர் அண்ட் அய்யங்கார் நிறுவனமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் வெடித்துக் கிளம்பும் நிலை ஏற்படும்.
சதவிகித கணக்கிற்கும் பணியமர்த்தப்பட்ட வர்களின் எண்ணிக்கைக் கணக்கிற்கும் பொருத்தப்பாடில்லாததாக இருக்கிறது. மேலும் தகவல் அறியும் உரிமை சட்டத்தி்ல கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றிற்குப் பதில் இல்லை – மதுரை மக்களவை உறுப்பினர்
சு. வெங்கடேசன் மக்களவையில் எழுப்பிய கேள்விக்கும் சம்பந்தப்பட்ட அமைச்சர் துறைவாரியாக நிறுவன வாரியாக விவரங்களை அளிக்கவில்லை.
பிஜேபி அரசு என்பது ஆர்.எஸ்.எஸ் கொள்கையின் அடிப்படையில் நடக்கக் கூடியது; ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையோ இடஒதுக்கீட்டுக்கு எதிரானது என்பது தெரிந்த ஒன்றே!
சமூகநீதியில் அக்கறையுள்ள அனைத்துத் தரப்பினரும் ஓரணியாக உருக்கு மலையாக நின்று மக்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தினாலொழிய இதற்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
போராடுவோம் – வெற்றி பெறுவோம் என்று கிளர்ந்து எழுந்தாக வேண்டும் சமூகநீதியில் வெற்றியில்லை என்றால் சமூகமே சவக் குழிக்குப்போக வேண்டியதுதான்.