முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்
சென்னை, மார்ச் 21 இதுவெறும் கூட்டம் மட்டுமல்ல, நாட்டின் எதிர்காலத்தை வடிவமைக்கக் கூடிய ஒரு இயக்கத்தின் தொடக்கம் என தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக் குழு கூட்டத்திற்கு தலைவர்களை வரவேற்று சமூக வலைதளத்தில் காட்சிப்பதிவு வெளியிட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இது இந்திய கூட்டாட்சிக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என தெரிவித்துள்ளார்.
அதில், தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டுக் குழு கூட்டத்தில் எங்களுடன் இணையும் கேரளம், கருநாடகம், ஆந்திரம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்களை நான் மனதார வரவேற்கிறேன்.
தென்மாநிலங்கள் பாதிக்கும்!
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடந்தால் தமிழ்நாடு, ஆந்திரம், கேரளம், கரு நாடகம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் பாதிக்கும்.
அப்படி நடந்தால், நாட்டின் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்தின் மதிப்பும் இருக்காது. நாடாளுமன்றத்தில் நம் குரல் நசுக்கப்படும். நம் உரிமைகளை நிலைநாட்ட முடியாது.
மக்கள்தொகையை கட்டுப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தண்டனை கொடுக்கக்கூடாது.
மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை!
இது உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்த பிரச்சினை மட்டும் கிடையாது; நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சினை. அதனால் தான் தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பாக தலைமைச் செயலகத்தில் எனது தலைமையில் மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்துக் கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தினோம். இதில், பாஜக தவிர, திமுக, அதிமுக, திராவிடர் கழகம், காங்கிரஸ், பாமக, தேமுதிக, விசிக, இடதுசாரி கட்சிகள், நடிகா் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், உலகத் தமிழர் பேரமைப்பு உள்பட தமிழ்நாட்டின் பதிவு செய்யப்பட்ட மொத்தம் 59 கட்சிகள் தங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக ஓரணியில் நின்றது ஒரு மைல்கல் தருணமாகும். இந்த மிகப்பெரிய ஒருமித்த கருத்து, தமிழ்நாட்டின் ஜனநாயகம் மற்றும் நீதிக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பைப் பிரதிபலித்தது.
அதில், இந்தத் தொகுதி மறு சீரமைப்பால் பாதிக்கப்பட உள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடி வெடுத்தோம்.
இந்த வரலாற்று ஒற்றுமையை கட்டியெழுப்ப, ஆந்திரம், கருநாடகம், கேரளம், தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம், பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதலமைச்சர்களுக்கும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் இருக்கின்ற அந்த மாநிலங்களைச் சார்ந்த அனைத்து கட்சிகளின் தலை மைக்கும் நான் கடிதம் எழுதினேன்.
தொலைபேசியில் பேசினேன்!
அந்தக் கடிதங்களை ஓர் அமைச்சர் மற்றும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழு, அவர்களை நேரில் சந்தித்து நமது கூட்டுத் தீர்மானத்தை கொடுத்து விளக்கம் அளித்தார்கள். அனைத்து மாநில முதலமைச்சர்களிடமும் நானே தொலைபேசியில் பேசினேன்.
இதைத் தொடர்ந்து, சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் ஏற்கெனவே ஒத்துக்கொண்ட நிகழ்ச்சிகள் காரணமாக தங்களுடைய பிரதிநிதிகளை அனுப்பு வதாகவும் கூறினார்கள்.
ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது!
தமிழ்நாட்டில் முன்முயற்சியாகத் தொடங்கிய இந்த இயக்கம் தற்போது ஒரு தேசிய இயக்கமாக மாறியுள்ளது, நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் நியாயமான பிரதிநிதித்துவத்தைக் கோர கைகோர்த்துள்ளன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள காட்சிப்பதிவில் கூறியுள்ளார்.