ஊழல் மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 96 ஆம் இடம்!
மகிழ்ச்சிகரமான தர வரிசையில் இந்தியாவுக்கு 118 ஆவது இடம்!
லண்டன், மார்ச் 21 கடந்த ஆண்டு ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 38 புள்ளிகள் பெற்று 96 ஆவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா கடந்த 2023 ஆம் ஆண்டில் 39 புள்ளிகளுடன் 93 ஆவது இடத்திலும், 2022 ஆம் ஆண்டில் 40 புள்ளிகளுடன் 85 ஆவது இடத்திலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதில் ‘100’ புள்ளிகள் பெற்ற நாடு களில் ஊழலற்ற நாடுகளாகவும், ‘0’ புள்ளிகள் என்பது ஊழல் மிகுந்த நாடுகளாக கருதப்படுகின்றன. அதன்படி, பட்டியலில் இந்தியாவின் புள்ளிகள் குறைந்து வருவதால் ஊழல் பட்டியலில் இந்தியா பின்னுக்கு தள்ளப்பட்டு வருகிறது.
தரவரிசை பட்டியலில் 90 புள்ளி கள் பெற்ற டென்மார்க், கடந்த 2018 முதல் தொடா்ந்து 7 ஆவது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது.
சட்டத்தின்படி ஆட்சி செய்து ஊழலை எதிர்த்துப் போராடும் நாடுகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ அமைப்பு, ஊழல் தரவரிசைப் பட்டியலை ஆண்டு தோறும் வெளியிட்டு வருகிறது. ஊழலற்ற நிர்வாகம் மற்றும் ஊழ லுக்கு எதிரான நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆய்வில் பங்கேற்கும் நாடுகளுக்கு புள்ளிகள் வழங்கப்படும்.
96 ஆவது இடத்தில் இந்தியா
மொத்தம் 180 நாடுகள் இடம்பெற்றி ருந்த 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 100-க்கு 38 புள்ளிகள் பெற்று 96 ஆவது இடத்தில் உள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தான் 27 புள்ளிகளுடன் 135 ஆவது இடத்திலும் இலங்கை 32 புள்ளிகளுடன் 121 ஆவது இடத்திலும் இருக்கின்றன. வங்கதேசம் 23 புள்ளி களுடன் 151 ஆவது இடத்தில் உள்ளது. 43 புள்ளிகளுடன் சீனா 76 ஆவது இடத்தைத் தக்கவைத்துள்ளது.
டென்மார்க் முதலிடம்
90 புள்ளிகள் பெற்ற டென்மார்க், கடந்த 2018 முதல் தொடா்ந்து 7 ஆவது ஆண்டாக ஊழலை எதிர்க்கும் நாடாக முதலிடத்தில் இருக்கிறது. டென்மார்க்கைத் தொடா்ந்து, 88 புள்ளிகளுடன் பின்லாந்து 2 ஆவது இடத்திலும், 84 புள்ளிகளுடன் சிங்கப்பூர் 3 ஆவது இடத்திலும் உள்ளன. நியூசிலாந்து, லக்ஸம்பர்க், நார்வே, சுவிட்சா்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அய்ஸ்லாந்து, அயா்லாந்து ஆகியவை முதல் 10 இடங்களில் உள்ளன. அமெரிக்கா 28 ஆவது இடத்தில் உள்ளது.இந்தப் பட்டியலில் தெற்கு சூடான் கடைசி இடத்தில் இருக்கிறது. தெற்கு சூடானுக்கு அடுத்து சோமா லியா, வெனிசூலா, சிரியா, ஏமன் ஆகியவை ஊழலில் மலிந்த நாடுகளாக உள்ளன.
உலகின் மகழ்ச்சிகரமான நாடுகள் தரவரிசை:
118 ஆவது இடத்தில்
உலகின் மகிழ்ச்சிகரமான நாடு களின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 118 ஆவது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், பாலஸ்தீனம், உக்ரைன், நேபாளம் நாடுகளைவிட இந்தியா பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
உலகின் மிகுந்த மகிழ்ச்சிகரமான நாடாக பின்லாந்து உள்ளது. தர வரிசையில் தொடா்ந்து 8 ஆவது ஆண்டாக இந்த நாடு முதலிடம் பிடித்துள்ளது. டென்மார்க், அய்ஸ்லாந்து, ஸ்வீடன், நெதா்லாந்து நாடுகள் அடுத்தத்தடுத்த இடங்களில் உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் பன்னாட்டு மகிழ்ச்சி நாளான மார்ச் 20 ஆம் தேதி இந்த பட்டியல் வெளியிடப்படும். அதன்படி, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மக்கள் நலன் ஆராய்ச்சி மய்யம், அய்.நா. நீடித்த வளர்ச்சிக்கான தீர்வு அமைப்பான ‘கல்லப்’ ஆராய்ச்சி அமைப்புடன் இணைந்து இந்த வருடாந்திர தரவரிசைப் பட்டியலுக்கான ‘உலக மகிழ்ச்சி அறிக்கை 2025’ அய் நேற்று (20.3.2025) வெளியிட்டது.
மக்களின் மகிழ்ச்சியில் அக்கறை, உணவைப் பகிர்ந்து கொள்வது, பகிர்வின் தாக்கம், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் தனிநபர் பங்களிப்பு, சுதந்திரம், சமூக ஆதரவு, சுகாதார எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் உலகளவிலான வாக்களிப்பு முறையில் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து, இந்த தரவரிசை அறிக்கை நிர்வாகிகள் கூறுகையில், ‘கொடையளித்தல், தன்னார்வத் தொண்டு மற்றும் அறிமுகம் இல்லாதவர்களுக்கு உதவுதல் ஆகிய மூன்று கருணைச் செயல்களின் அடிப்படையிலான நாடுகளின் இந்த தரவரிசை, அவற்றின் கலாசாரம் மற்றும் நிறுவனங்களின் வேறுபாடுகளைப் பொறுத்து மாறுபடும்’ என்றனர்.