‘தமிழைக் காட்டுமிராண்டி மொழி’ – என்று பெரியார் சொன்னார் என்று நாடாளுமன்றம் வரை நா முழக்கம் செய்து வருகின்றனர் பார்ப்பனர்கள்.
தமிழில் உள்ள பதினெண் புராணங்களும், இதிகாசங்களும், தல புராணங்களும் தமிழை அரித்துத் தின்னும் கரையான்கள். அவற்றைப் படிப்பதால் என்ன பயன்? தமிழ் அறிவியல் மொழியாக்கப்பட வேண்டும் என்ற அக்கறையால் தந்தை பெரியாரால் சொல்லப்பட்டது அது.
தாயைப் புணர்ந்து தந்தையாகிய பார்ப்பனரைக் கொன்றவனுக்கு மோட்சம் கொடுத்ததாக (திருவிளையாடல் புராணம் ‘மகாபாதகம் தீர்த்த படலம்’ – பரஞ்சோதி முனிவர்) வெல்லாம் புராணம் தீட்டப்பட்டுள்ளதை – நல்லொழுக்கம் உள்ள பகுத்தறிவாளர் எவரால்தான் ஏற்க முடியும்?
தந்தை பெரியாரை இந்தப் பார்வையில் பார்க்க முடியாதவர்கள் தான் தூற்றுகின்றனர் – தொடை தட்டுகின்றனர் என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
தமிழைப் போற்றுவது போல பாசாங்கு செய்யும் பார்ப்பனர்கள், பிறப்பின் அடிப்படையில் நான்கு வருணத்தைப் பிரித்ததோடு நிற்கவில்லை.
தமிழ் எழுத்துக்களிலும் இலக்கணத்திலும் கூட தங்கள் கேவலமான புத்தியைக் காட்டியுள்ளனர்.
பாட்டியலில் பன்னீருயிரும், முதலாறு மெய்யும், பார்ப்பன வருணமாம், அடுத்த ஆறு மெய்கள் அரச வருணமாம். நான்கு மெய்கள் வைசிய வருணமாம், பிற இரண்டும் சூத்திரன் வருணமாம்.
‘வச்சணந்தி மாலை’ என்னும் நூலில் இவ்வாறு கேவலப்படுத்தியுள்ளனர்.
பார்ப்பனரை வெண்பாவாலும், அரசனை ஆசிரியப் பாவாலும், வணிகரை கலிப்பாவாலும், சூத்திரரை வஞ்சிப் பாவாலும் பாட வேண்டும் என்று இலக்கணத்தில் விதியாகப் புகுத்துவது எவ்வளவு பெரிய விபரீத வேலை!
பா வகையில் தலை சிறந்ததாகத் கருதப்படும் வெண்பாவால் பார்ப்பனர்களை மட்டும் பாட வேண்டுமாம்! என்ன கொடுமை! கொடுமை!!
பாக்களைக் கலந்து பாடும் கலம்பகத்தில் தேவர்களுக்கு 100, பார்ப்பனருக்கு 95, அரசருக்கு 90, அமைச்சருக்கு 70, வணிகருக்கு 50, மற்றவருக்கு 30 என்று செய்யுள்கள் பாட வேண்டுமாம்! இந்தப் பார்ப்பனத் தனத்தை என்னவென்று சாற்றுவது!
திருக்குறள்பற்றி பார்ப்பனர்களின் மதிப்பும் – தொண்டும் எத்தகையது என்பதற்கு “செந்தமிழ்ச் செல்வி” இதழில் (மார்ச் 2000) வெளிவந்த “குறளும் அயோத்திதாசரும்” என்ற தலையங்கமே தக்க சான்று கூறும்.
அது வருமாறு:
“1796இல் சென்னைக்கு அரசுத் துறையில் பணியாற்ற வந்த எல்லீஸ் துரை அவர்கள் தமிழ் படிக்க விரும்பினார்.
அவருக்குத் திருக்குறள் ஏட்டுச் சுவடியொன்றைத் தாம் வேலை பார்த்து வந்த வெள்ளைக்காரர் வழி சேர்ப்பித்தவர் அயோத்திதாசரின் பாட்டனாரான கந்தசாமி என்பவர்.
“எல்லீஸ் தனக்குத் தமிழ் கற்றுக் கொடுக்க வந்த பிராமணர்களிடம் கந்தசாமி திருக்குறள் கொடுத்தாரென்றார். அதற்கு அவர்கள், அவர் தீண்டத்தகாதவர், அவர் கொடுத்த திருக்குறள் தீண்டத்தகாதது என்றனர்! காரணம் வள்ளுவர் புலச்சியின் மகன் என்பது அவர்கள் எண்ணம்.
‘ஏன் இப்படி பிராமணர்கள் கருதுகிறார்கள்’ என்று கந்தசாமியை அழைத்து எல்லீஸ் துரை கேட்க, “எங்களுக்கும் இவர்களுக்கும் விரோதம்.”
எங்கள் வீதிக்குள் பிராமணர்கள் வந்தால் “உங்கள் பாதம் பட்ட இடம் பழுதாகிவிடும்” என்று சொல்லிக் கொண்டு இவர்களைத் துரத்தி பிராமணர்கள் வந்த வழியிலும். சென்ற வழியிலும் சாணத்தைக் கரைத்துத் தெளித்து சாணச் சட்டியையும் உடைத்து வருகிறார்கள்” என்று கூறினாராம்.
உண்மையான காரணத்தைப் புரிந்து கொண்ட எல்லீஸ் துரை திருக்குறளை ஆழமாகப் படித்து அதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்தார்.
1819-இல் துரை திடுமென மறைய நேர்ந்ததால் நூல் முழுவதும் மொழி பெயர்க்காமல் போயிற்று.”
இவ்வாறு “செந்தமிழ்ச் செல்வி” கூறுகிறது.
ஆண்டாளின் “திருப்பாவை”யில் “தீக்குறளைச் சென்றோதோம்” என்ற பாடல் வரிக்குப் பச்சைப் பார்ப்பனரான மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் திருவாளர் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன பொருள் கூறினார்? தீய திருக்குறளை ஓத மாட்டோம் என்று கூறவில்லையா?
ஆண்டாள் சொன்ன ‘குறளை’ என்பது அய்கார ஈற்றுப் பெயர்ச் சொல்: அதன் பொருள் கோள் சொல்லுதல், கோள் சொல்லுதல் என்னும் தீய பழக்கத்தை அங்கும் இங்கும் சென்று சொல்ல மாட்டோம் என்பதுதான் அதன் பொருள்.
இதனைப் புரிந்திருந்தும் திருக்குறளை ஓத மாட்டோம் என்று சங்கராச்சாரியார் பொருள் கூறுவது – தமிழ் மொழியின் மீது அவாளுக்குள்ள அடக்கவே முடியாத “துவேஷமும்” வன்மமும்தானே?
ஆட்சி மொழிக் காவலர் கீ.இராமலிங்கனார் அவர்களுடன் ‘உண்மை’ இதழுக்காக கலி. பூங்குன்றன் 27.11.1980 அன்று பேட்டி கண்டார். அந்தப் பேட்டி (1-15,12.1980) ‘உண்மை’ இதழில் (பக்கம் 38-42) வெளி வந்துள்ளது.
கீ.இராமலிங்கனார் காஞ்சிபுரத்தில் ரேஷனிங் அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது அலுவலர்கள் சங்கராச்சாரியார் மடத்துக்கும் சென்று கணக்கு எடுத்தார்கள். அதற்கு மடத்தினர் ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை; மாறாக அதிகாரியான கீ.இராமலிங்கனாரை நேரில் பார்க்க வேண்டும் என்று சொன்னார்களாம்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் நிர்வாக அதிகாரியாக நரசிம்ம அய்யர் என்பவர் இருந்தார் இராமலிங்கனாரை அழைத்துச் செல்ல ஒரு வண்டியோடு வந்தார். இருவரும் சங்கராச்சாரியார் இருந்த இடத்திற்குச் சென்றார்கள். சங்கராச்சாரியார் வரதராஜப் பெருமாள் கோயிலில் இருந்தார்.
அப்பொழுது நடந்தது என்ன? இதோ இராமலிங்கனார் பேசுகிறார். “சங்கராச்சாரியார் பிரகாரத்தில் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அந்த நரசிம்மய்யர் என்னைச் சீண்டுகிறார். “நமஸ்காரம் பண்ணுங்க, நமஸ்காரம் பண்ணுங்க” என்கிறார். விழுந்து கும்பிடச் சொல்கிறார். நான் ஒன்றும் செய்யவில்லை.
பிரகாரத்தில் ஒரு பக்கத்தில் ஓரமாக சங்கராச்சாரியார் நின்று கொண்டார். வலக்கை பக்கமாக நானும், நரசிம்மய்யரும் நின்று கொண்டோம். இடது பக்கம் ஒரு சமஸ்கிருத ஆசிரியர் நின்றார். இவர் கேள்வி கேட்கிறார். ‘ரேஷனிங்’ பற்றி – அது என்ன, இது என்ன என்று கேட்கிறார். கேள்வி கேட்கிறதை சமஸ்கிருதத்தில் கேட்கிறார். அதை சமஸ்கிருத ஆசிரியர் தமிழில் சொல்கிறார் எனக்கு, தமிழில் பதில் சொல்கிறேன் நான்.
பேச்சு முடிந்து வெளியில் வந்தோம். வெளியே வரும்பொழுது அந்த நரசிம்மய்யரைக் கேட்டேன். “என்ன அய்யா அவர்தான் தமிழில் சொன்னா தெரிஞ்சிக்கிறாரே… பின்னே ஏன் அவர் சமஸ்கிருதத்தில் கேட்கிறார்” என்று கேட்டேன். அதற்குச் சொன்னார். “இதிலே பாருங்கோ. இந்தப் பன்னிரெண்டரை மணிக்கெல்லாம் சந்திர மௌலீஸ்வரர் பூஜை இருக்கோல்லியோ, அது வரைக்கிலும் எந்த நீஷப் பாஷையிலும் பேச மாட்டார் என்றார்” எனக்கா அறைந்து விடலாமென்றிருந்தது.
இது இராமலிங்கனார் அவர்களின் பேட்டியில் உள்ள வாசகம்.
தமிழுக்குப் பார்ப்பனர் தொண்டு செய்யும் தகுதி இதுதான்.
தமிழர்களை அரக்கர்கள், ராட்சதர்கள், குரங்குகள், கரடிகள், அசுரர்கள் என்பவர்களும், அவர்களின் தாய்மொழியை நீசப் பாஷை என்பவர்களும் வெறுக்கத்தக்கவர்களா – இல்லையா?
மறைந்த மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் மட்டுமல்ல; மடத்தை விட்டு, தண்டத்தையும் போட்டு விட்டு இரவோடு இரவாக ஓடிப்போய், மடத்தின் சம்பிரதாயங்களுக்கு விரோதமாக, அத்துமீறி மீண்டும் ஓடி வந்து மடத்துக்குள் புகுந்த ஜெயேந்திர சரஸ்வதியின் தமிழ்ப் ‘பற்றுக்கும்’ ஒரே ஓர் எடுத்துக்காட்டு!
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக இருந்த டாக்டர் சி.பாலசுப்பிரமணியனார் அவர்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற (25.121980) தமிழ் வழிபாட்டு உரிமை மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு தகவலைச் சொன்னார். அவரின் அந்த உரை ‘விடுதலை’யிலும் (27.12.1980 பக்கம் 2) வெளிவந்துள்ளது.
”ஆளுநர் கே.கே.ஷா அவர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் புதிய பெரியவாள் சங்கராச்சாரியாரைப் பார்க்கப் போயிருந்தோம்.
அப்போது அங்கிருந்தவர் ஆளுநருக்கு இவர்தான் தமிழ் சொல்லிக் கொடுத்தவர் என்று அறிமுகப்படுத்தினார்.
உடனே காஞ்சி பெரியவாளுக்கு வந்ததே கோபம்!
நீங்கள்தான் இவருக்கு தமிழ் சொல்லிக் கொடுத்ததா? என்று குய்யோ முறையோ என்றார். உங்களை யார் இந்த வேலைகளையெல்லாம் செய்யச் சொன்னது என்றார். இதெல்லாம் அவரைக் கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு வெளியே வந்து விட்டோம்.
நமது தாய்மொழி இந்த அளவுக்கு ஒரு சிறுபான்மையரால் ஒதுக்கப்பட்டு, தாழ்த்தப்பட்டுப் பேசப்படுவதை எண்ணும்போது இந்த மாநாட்டிலேயே ஒரு முடிவு செய்ய வேண்டும்” என்றார் பேராசிரியர் டாக்டர் சி. பாலசுப்பிரமணியனார்.
ஆட்சி மொழிக்காவலர் கீஇராமலிங்கனாரோ, பேராசிரியர் டாக்டர் சி.பாலசுப்பிரமணியனாரோ திராவிடர் இயக்கத்தைச் சேர்ந்தவர்களல்லர்; ஆனால் தமிழர்கள். அவர்களின் பார்வையிலும் பார்ப்பனர்கள் வெறுக்கத்தக்கவர்களாகத் தானே இருக்கிறார்கள்?
தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று தந்தை பெரியார் சொன்னது – அது விஞ்ஞான மொழியாக்கப்பட வேண்டும் என்ற பொருளில் சங்கராச்சாரியார் தமிழை நீஷப் பாஷை என்று சொன்னது தமிழை இழிவுப்படுத்துவதாகும். பார்ப்பனரல்லாதார் புரிந்து கொள்ளட்டும்! சுயமரியாதையைப் பங்கப்படுத்துவதாகும்?