சென்னை, மார்ச் 19- மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற்றிருந்தாலும், அந்த குடும்பத்து மகளிருக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்தார்.
சட்டப் பேரவையில்
இன்றைய கேள்வி நேரத்தின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தங்கமணி பேசும்போது, மனநலம் குன்றிய குழந்தைகளுக்கு 1,500 வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குழந்தைகளை பாதுகாக்கின்ற தாய்மார்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மறுக்கப்படுகிறது.
1,500 ரூபாய் வாங்கும் போது ஏதாவது ஒன்று கிடைக்கும் போது, இந்த உதவி கிடைக்காது என்று சொல்லி விடுகிறார்கள். ஆகவே அந்த 1,000 ரூபாய் கிடைத்தால் மொத்தம் 2,500 ரூபாயை வைத்து முழுமையாக அந்த குடும்பம் குழந்தையை பாதுகாக்க உதவிகரமாக இருக்கும். இதை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த மகளிர் நலன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் கீதா ஜீவன், “மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை பெற்றிருந்தாலும் அந்த குடும்பத்திற்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது தான் நம்முடைய முதலமைச்சர் அளித்த உத்தரவாதம், உத்தரவு” என்று குறிப்பிட்டார்.