தமிழ்நாட்டைப் பின்பற்றி கருநாடகத் திலும், கேரளாவிலும் ஹிந்தி எதிர்ப்பு உணர்வு வெடித்துக் கிளம்பி விட்டது.
நாடாளுமன்றத்தில் ஹிந்தி மொழியில் மட்டுமே பதில்கள் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநிலங்களவை உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் ஒன்றிய ரயில்வே மற்றும் உணவு பதப்படுத்தும் துறை இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டுவுக்கு மலையாள மொழியில் பதிலடிக் கடிதம் எழுதியுள்ளார்.
கேரளா மாநில பிறந்தநாளை கொண்டாடிய மறுநாளே பிரிட்டாஸ் இந்தக் கடிதத்தை அனுப்பினார்.ஹிந்தி மொழியின் பயன்பாடு வேண்டுமென்றே திணிக்கப்படுவதாகவும் தனது கடிதத்தில் விமர்சித்துள்ளார், மேலும் மலையாளத்தில் பதிலளிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தென் மாநிலங்களைச் சேர்ந்த கருநாடக, ஆந்திரா மற்றும் தெலுங்கானா உறுப்பினர்களும் இதேபோன்ற பிரச்சினைகளை எழுப்பியுள்ளனர்.
அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு, உறுப்பினரின் கேள்விகளுக்கு ஹிந்தியில் மட்டுமே பதிலளிக் கிறார். நாடாளுமன்ற நடவடிக்கைகளில் பிற மொழிகள் பேசும் உறுப்பினர்களின் உரிமையைப் பொருட்படுத்தாத நிலையை – கவலையைத் தெரிவித்து ஜான் பிரிட்டாஸ் குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங் களைவைத் தலைவர் ஜக்தீப் தன்கருக்கும் அனுப்பியுள்ளார்.
“தென்னிந்திய மாநிலங்களில் ஹிந்தி யைத் திணிக்கும் முயற்சிக்கு எதிராக நாங்கள் எப்போதும் போராடி வருகிறோம். தென்னிந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது ஹிந்தியைத் திணிக்க வேண்டுமென்றே முயற்சி நடக்கிறது. இந்த குறிப்பிட்ட அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு எனக்கு மட்டுமல்லாமல் அனைத்துத் தென்னிந்திய எம்.பி.க்களுக்கும் தொடர்ந்து ஹிந்தியில் கடிதங்களை எழுதி வருகிறார். இத்தகைய ஹிந்தி கடிதங்களின் பின்னணியில் ஒரு நோக்கம் இருப்பதாக நாங்கள் கருதுகிறோம். அமைச்சர்களின் இத்தகைய முறையற்ற செயல்களுக்கு நமது சொந்த மொழியில் பதிலளிப்பதே ஒரே வழி என நாங்கள் கருதுகிறோம். இது ஒரு எதிர்ப்பு மட்டுமல்ல, ஒரே வழியும் கூட… அமைச்சர் மக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்…” என்று பிரிட்டாஸ் தெரிவித்தார்.
இதே போன்ற ஒரு கடித்ததிற்கு – திமுக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எம். அப்துல்லா ரவ்னீத் சிங் பிட்டுவிற்கு தமிழிலேயே கடிதம் எழுதி இருந்தார். அதற்கும் இன்றளவு பதில் அளிக்காத நிலையில், அதே போன்று ஹிந்தியில் ஹிந்தி தெரியாத தென் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ரயில்வே இணை அமைச்சரும் ஹிந்தியில்தான் எழுது கிறார்.
தேசிய ஒருமைப்பாடுபற்றி ஒன்றிய பிஜேபி வாய் நீளம் காட்டுகிறது. எங்கு பார்த்தாலும் ‘பாரத் மாதா கீ ஜெ!’ என்ற முழக்கங்களை எழுப்பி வருகிறது.
உண்மையிலேயே அவர்கள் கூறும் ‘பாரத மாதா’ ஒன்றுபட்டு நீடிக்க வேண்டுமானால் பல மொழிகள் பேசும் மாநிலங்களின் தாய் மொழியை மதிக்க வேண்டும். மாநில மக்களின் தாய்மொழியைப் புறந் தள்ளி, ஒரே நாடு என்ற நோக்கத்தின் அடிப்படையில் ஹிந்தியை எல்லா வகையிலும் திணித்துக் கொண்டு இருப்பார்களேயானால், எதிர் விளைவு தான் ஏற்படும் என்பது யதார்த்தம்!
ஒரு பக்கத்தில் பிரிவினையை எதிர்த்துப் பேசிக் கொண்டே, பிரிவினையைத் தூண்டும் குற்றத்தைச் செய்வது ஒன்றிய பிஜேபி அரசே!