ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஹடவுதி மற்றும் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் பெண் குழந்தைகள் 5 ஆண்டுகள் வரைக் குத்தகைக்கு விற்கப்படுகின்றனர்.
இதற்காக இடைத்தரகர்கள் மாநிலம் முழுவதும் சென்று பெண் குழந்தைகளை அடிமைகளாக ஒப்பந்தத்திற்கு வாங்கிச் செல்கின்றனர்.
ராஜஸ்தான் மட்டுமல்லாமல், உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச மாநிலங்களில் வசிக்கும் பெரும் நிலக்கிழார்களுக்கு இவர்களை விற்று விடுகின்றனர்.
அவ்வாறு குத்தகைக்கு விற்கப்படும் சிறுமிகளும் இளைஞர்களும் உழைப்புச் சுரண்டப்பட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகின்றனர். இக் கொடுமையில் இருந்து தப்பி வீடு திரும்பினாலும், பெற்றோர்களிடமிருந்து மீண்டும் தரகர்கள் பிடித்துச் செல்கின்றனர்.
சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் விற்பனை ராஜஸ்தான் மாநிலத்தின் 10 மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. இவற்றில் சவாய்மாதோபூர், பூந்தி, பீல்வாரா, டோங்க், பரத்பூர், ஜாலாவாட், பாரான் அல்வர் மற்றும் ஜெய்ப்பூரின் சாக்சூ ஜோத்பூர் ஆகியவை இதில் அடங்கும்.
காவல்துறை மற்றும் மகளிர் ஆணையத்தின் முயற்சியால் சில குழந்தைகள் மட்டுமே வீடு திரும்புகின்றனர், ஆனால் பெரும்பாலானோர் ஒப்பந்த அடிப்படையில் கையொப்பமிட்டுள்ளதால் அவர்களை பெற்றோரே மீண்டும் திருப்பி அனுப்பி விடுகின்றனர்.
சுமார் பத்தாயிரம் சிறுமிகள் மற்றும் இளைஞர்கள் இவ்வாறு அடிமைகளாக விற்கப்பட்டுள்ளனர்.
ஜாலாவாட்டில் இருந்து 8 வயது சிறுமி டிசம்பர் 2020-இல் பூந்தி மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் 3 ஆண்டுகளுக்கு மூன்றரை லட்சம் ரூபாய்க்குக் குத்தகைக்கு விடப்பட்டார்.
இங்கு குழந்தைகளுக்குப் போதைப்பொருள் கொடுக்கப்பட்டு அடித்து உதைத்து, தினமும் 5-10 முறைப் பாலியல் வன்கொடுமை செய்யப்படும் கொடு மையை என்னவென்பது! இந்த நிலையில் ஒரு தந்தை குழந்தையைப் பார்க்க வந்தார், ஆனால் குத்தகைக்கு வாங்கியவர் குழந்தையை சந்திக்க தந்தையை அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் சமூக சேவை அமைப்பு ஒன்று சதர்க் காவல் நிலையத்தின் உதவியுடன் குழந்தையை மீட்டது. 15 வயதான அச்சிறுமி 6 மாதங்களாக மன அதிர்ச்சியில் இருந்தார். இப்போது இந்தக் குழந்தை பூந்தி மகளிர் ஆணையத்தின் பாதுகாப்பில் உள்ளார்,
பூந்தியின் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சிறுமியை, அவரது தாயே 13 வயதில் விவசாயக் கடனை அடைக்க ஆக்ராவில் உள்ள ஒப்பந்ததாரருக்குக் குத்த கைக்கு விட்டார். அங்கு அவரது வருமானத்தில் 50 விழுக்காட்டை தரகர் வைத்துக்கொண்டு, 50 விழுக் காட்டை சிறுமியின் தாயிடம் கொடுத்துள்ளார்.
பீல்வாரா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் இருந்து 13 வயது சிறுமியை அவரது தாய் வீட்டுச் செலவுக்காக மூன்று முறை குத்தகைக்கு விற்றுள்ளார்.
முதலில் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு குவாலியரில் ஓர் ஆண்டும் பின்னர் சவாய்மாதோபூரில் ஒரு ஆண்டும், பின்னர் 5 லட்சம் ரூபாய்க்கு நாக்பூரில் மூன்று ஆண்டுகளுக்கும் குத்தகைக்கு விடப்பட்டார்.
மகளிர் உரிமை ஆணையத்தின் தகவலின்படி 3 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன.
பூந்தி மகளிர் ஆணையத்தின் தலைவர் சீமி சர்மாவின் கூற்றுப்படி, மூன்று ஆண்டுகளில் 30 குழந்தைகள் அடிமைகளாக விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 6 வயது நிரம்பாத குழந்தைகள்கூட குத்தகைக்கு விடப்படுகின்றனர்.
ஆனால் ஒப்பந்த அடிப்படையில் அவர்கள் பல ஆண்டுகள் பண்ணைகளில் அடிமைகளாகவே வேலைபார்க்கும் கொடுமை நிகழ்கிறது. 100க்கும் மேற்பட்ட சிறுமிகள் பூந்தி மாவட்டத்திலும், பூந்திக்கு வெளியேயும் தரகர்களிடம் சிக்கியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலம் அல்வர்ப் பகுதியில் சில குடும்பத்தினர் பண்ணை உரிமையாளர்களிடம் செலவிற்கு வாங்கிய ரூ.7000 மற்றும் ரூ.5000-ற்கு தங்கள் மகள்களை வயல் வேலைகளுக்காகப் பண்ணை முதலாளிகளிடமே விட்டு விட்டு வந்து விடுகின்றனர். பண்ணையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம் பெயர்த் தொழிலாளர்களால் இந்தச் சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்.
பி.ஜே.பி. ஆளும் மாநிலங்களில் நடக்கும் இந்த வன்கொடுமைகளுக்குப் பிறகும்கூட, தமிழ்நாட்டைச் சேர்ந்த பிஜேபியினர் வாய் நீளம் காட்டுவதில் மட்டும் குறைச்சல் இல்லை. பிஜேபியின் சித்தாந்தப்படி பெண்கள் அனைவருமே ‘‘நமோ சூத்திரர்கள்’’ தானே!
இதில் இன்னொன்றும் கவனிக்கத்தக்கது. பிஜேபி ஆளும் மாநிலங்களில் வறுமை எந்த அளவுக்கு நிர்வாண கோலத்தில் தலை விரித்தாடுகிறது என்றால் – பெற்ற குழந்கைளை விலைக்கு விற்கும் அளவுக்கும் – பணத்துக்காக அடிமைகளாகப் பிள்ளைகளை வேலை செய்ய அனுப்பும் அளவுக்கும் – சென்றுள்ளது என்பது மன்னிக்கப்படவே முடியாத மாபெரும் கொடுமையாகும்.
மகளிர் ஆணையங்கள் இருந்து பயன் என்ன? அரசின் சட்டங்கள் எல்லாம் இருந்து பலன் என்ன? இவையெல்லாம் மதவாத பிஜேபி அரசில் குறட்டை விட்டுத் தூங்குகின்றன.
‘பாரத மாதாக் கீ ஜெய்!’ என்று இந்தியாவைத் தாயாக மதிப்பது போல ‘மாதாக்கி ஜே’ போடுவது எல்லாம் ஊரையும், உலகத்தையும் ஏமாற்றத்தான் – புரிந்துகொள்வீர்!