கோவை, அக்.15- தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வி துறைக்கான நிதியை எந்தவிதக் காரணமும் இன்றி ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது ஏன்? என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கேள்வி எழுப்பினார்.
தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொது தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (14.10.2024) காலை வெளியிட்டார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர் களிடம் கூறியதாவது: தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசின் நிதி முதல் தவணையாக ரூ.573 கோடி வராமல் உள்ளது. இதனால் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் 32,292 பேருக்கு ஊதியம் வராமல் இருக்கிறது. ஒன்றிய அரசு நிதி தராமல் இருப்பதால் தமிழ்நாடு அரசே நிதியைப் பார்த்துக் கொள்கிறோம் என்று முதலமைச்சர் உறுதி தெரிவித்துள்ளார்.
ஒன்றிய அரசு பல்வேறு காரணங் களை தெரிவித்து மாநிலத்துக்கு வழங்க வேண்டிய நிதியை நிறுத்தக் கூடாது என பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடர்ந்து டில்லி சென்று துறை செயலரை வலியுறுத்தி வருகிறோம். மலைப்பிரதேசத்தில் பள்ளிக் குழந்தை களை அழைத்துச் செல்வதற்கான ‘எஸ்கார்ட்’ என்ற திட்டம் மூலம் 32 ஆயிரம் குழந்தைகள் பயன்பெற்று வருகின்றனர். சிறப்புக் குழந்தைகளுக்கான செயல்பாடுகள், பள்ளிகளில் கலை பண்பாட்டுத் துறை கொண்டாட்டம், ‘எண்ணும் எழுத்தும்’ திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய அரசுடன் இணைந்து மாநில அரசு செயல்படுத்தி வருகிறது. திடீ ரென அந்த நிதியை எந்தவித காரணமும் இல்லாமல் நிறுத்தி வைத்தது ஏன்?
ஒட்டுமொத்த இந்தியாவில் தமிழ் நாட்டில் மாணவர் சேர்க்கை சதவீதம் 62 சதவீதத்தை தாண்டிச்செல்லும் மாநில மாக இருக்கிறது. ஒன்றிய அரசு சொல்லும் 20 வகையான கூறுகளில் 18இல் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் உள்ளது. ஆனால், ஒன்றிய அரசு தனது கொள்கைகளை சேர்த்துக் கொண்டால் மட்டுமே நிதி தர முடியும் என்பது எந்த விதத்தில் நியாயம்?
மேலும் ‘பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு’ திட்டத்தின் மூலம் ரூ.7,500 கோடி ஒதுக்கீடு செய்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வகுப்பறைகள், கழிப்பறைகள், சுற்றுச்சுவர்கள், ஆய்வகங்கள் கட்ட தீர்மானித்து இதுவரை 3,500- வகுப்பறைகள், ஆய்வகங்கள் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. கூடுதலாக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகின்றன. சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கல்விக் கட்டணம் தொடர்பாக மாநில அரசு தொடர்ந்து கண்காணிக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.