உத்தரப்பிரதேசத்தில் பல ஹிந்துக் கோயில்களிலிருந்து சாயிபாபா சிலைகள் அகற்றப்பட்டு வருகின்றன. குறிப்பாக வாரணாசியில் வேக வேகமாக நடைபெறுகிறது.
கோயிலுக்குள் புகுந்து நீண்ட காலமாக இருந்து வந்த சாயிபாபா சிலைகளை அகற்றுவதற்கு, இவர்களுக்கு அதிகாரம் கொடுத்தவர்கள் யார்?
சாமியார் ஆட்சி உத்தரப்பிரதேசத்தில் நடப்பதால் சங்கிகள் சட்டத்தைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வது எத்தகைய கேடு கெட்டத்தனம்!
துவாரகா பீடத்தின் சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி அழைப்பின் பேரில் ‘தர்மசம்சத்’ மாநாடு இரண்டு நாட்கள் சத்திஸ்கரில் நடைபெற்றது. அங்கு ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷிர்டி சாய் பாபாவை ‘ஸநாதன தர்மத்தினை’ப் பின்பற்றுபவர்கள் தெய்வமாக வணங்கக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
சத்தீஸ்கரின் கபீர்தாம் மாவட்டத்தில் நடைபெற்ற தர்ம சம்சத்தின் (மத மாநாடு) ஊடகப் பொறுப்பாளர் ராஜேஷ் ஜோஷி கூறுகையில், ‘காசி வித்வத் பரிஷத்’ சாய் பாபா கடவுளும் அல்ல, குருவும் அல்ல, எனவே அவரை வணங்க முடியாது என்று முடிவு செய்துள்ளது என்றார்.
சாய் பாபாவின் வழிபாட்டை எதிர்த்து சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சர்ச்சையை ஏற்படுத்திய பின்னர், இந்த விவகாரத்தை விவாதிக்க கவர்தாவில், இங்கிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில், திவ்ய சதுர்மாஸ் மஹோத்சவ் சமிதி இந்த மாநாட்டை ஏற்பாடு செய்தது.
13 அகாராக்களின் பிரதிநிதிகளும் மற்ற மத தலைவர்களும் இந்தப் பிரச்சினையை விவாதித்தனர்.
அயோத்தியில் ராம மந்திர கட்டுமானம், பசுக்களின் பாதுகாப்பு போன்ற பிற விடயங்களிலும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக ஜோஷி தெரிவித்தார்.
சாயிபாபா தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர் சுரேஷ் ஜோஷி கூறும்போது,
‘‘அவர் பெயர் சந்த் முகமது, அவர் அல்லாவை வணங்கக்கூடியவர், அவர் மாட்டிறைச்சி உண்பவர். அவர் ஸநாதன தருமத்தின் எந்த ஒரு வரைமுறைக்குள்ளும் வராதவர்; அவரது பக்தர்கள் என்று கூறுகிறவர்கள் ஸநாதன விரோதிகளுக்கு தங்களை அறியாமலேயே உடந்தையாக இருக்கின்றனர். சாயிபாபா வழிபாட்டை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்லவேண்டும்’’ என்று கூறினார்
தெற்கு டில்லியைச் சேர்ந்த ஷாப்பூர் ஜத் எனும் இடத்தில் கோவிலுக்குள் இருந்த சாய்பாபா சிலை உடைக்கப்பட்டிருக்கிறது. சாய்பாபா சிலை உடைக்கப்பட்டு அந்த இடத்தில் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்திருக்கிறார் அந்த செய்தியாளர். இது குறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த பத்திரிகையாளருக்கு இதன் பின்னணி குறித்த வேறு சில தகவல்களும் கிடைத்துள்ளன.
சிலை உடைப்பின் போது அருகில் இருந்து வழிகாட்டுதல் கொடுத்துவிட்டு, சிலையை இடித்த பின்னர், சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதியைச் சந்தித்து ஆசிர்வாதம் பெற்ற நபரின் பெயர் பதம் பன்வார். சாமியார் யதி நரசிங்கானந்த் சரஸ்வதி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசியபோது, “அவரது (சாய்பாபா) உண்மையான பெயர் சந்த்கான். அவர் ஒரு ஜிகாதி. அவர் ஒரு ஒழுங்கற்றக் கொள்ளைக்காரன். நமது இந்துக்களின் முட்டாள்தனம் காரணமாக அவர் நமது கோவில்களில் இருக்கிறார்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எப்படி இருக்கிறது? இதன்படிப் பார்த்தால் சிறீரங்கத்தில் பகல்பத்து விசேஷம் நடக்கும்போது, ரெங்கநாதருக்கு இஸ்லாமியர்கள் அணியும் கைலியைக் கட்டுகிறார்களே – அதனையும் தடை செய்வார்களா? அதே கோயிலில் துலுக்க நாச்சியார் சன்னதி இருக்கிறதே – அதனை என்ன செய்ய உத்தேசம்?
சிறீரங்கம் ரெங்கநாதனை திருச்சி உறையூரில் இருக்கும் துலுக்க நாச்சியார் வீட்டுக்குச் சுமந்து கொண்டு போவதும் தடை செய்யப்படுமோ?
மதுரை அழகரும் இவ்வாறு செய்வதுண்டே! இவற்றை எல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்?
ஹிந்துக்கோயில் கடவுள்களுக்குள்ளும் கலவரத்தை ஏற்படுத்தப் போகிறார்களா?
அட மதவாதமே உனக்கு மரணம் வந்து சேராதா?