* குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்
உலகில் தீயவர்களும், கெட்டவர்களும் அரக்கர்களும், அசுரர்களும் பெருகும்போது கடவுள் அவதாரம் எடுத்து அவர்களை அழித்து ஒழிப்பது சம்ஹாரம் செய்வது வழக்கமாம், பழக்கமாம். அதன்படி இறைவன் அவதார எடுத்ததாகப் பல கதைகள் நாட்டில் வழங்கப்பட்டு வருகின்றன. சிவ சமயத்தில் அவ்வப்போது காலதேச வர்த்தமானத்திற்கு ஏற்ப 63 நாயன்மார்கள் தோன்றியதாகவும், வைணவ சமயத்தில் 12 ஆழ்வார்கள் தோன்றியதாகவும் நிறைந்த கதைகள் அடுக்கடுக்காக சொல்லப்படுகின்றன. உலகைக் காக்கும் பொறுப்பை ஏற்ற மகாவிஷ்ணுக் கடவுளே துஷ்டர்களைச் சம்ஹரிக்க 10 அவதாரங்கள் எடுத்தாராம். அதுதான் தசாவதாரம் என்று சொல்லப்படுகிறது 10 அவதாரங்கள் போதும் என்று ஆண்டவனும், மக்களும், உலகமும் தீர்மானித்து விட்டனர் போலும்! எனவே இனி 11 ஆவது அவதாரப் பிறப்புக்கு வேலை இல்லை போலும்! இன்னொரு சிறப்பான செய்தி என்னவெனில், இந்த அவதாரப் பிறப்புகள் எல்லாம் கடந்த 5 நூற்றாண்டுகட்கு முன்னரே நடந்து முடிந்தவைகள் ஆகும் என்பதே. ஆம் 14,15 ஆம் நூற்றாண்டுக் காலங்களில் மக்கள் சிந்திக்கவும், எண்ணவும், ஆய்வும், ஆராய்ச்சி செய்யவும் முனைந்துவிட்டனர். துணிந்துவிட்டனர். எனவே, அப்போது எல்லாம் அவதாரக் கதைகள் எடுபடாதுதானே! மேலும் இது பெரியார் காலம், நிச்சயம் உறுதியாக எடுபடாதுதானே!
மேலும், ஓர் ஆய்வுச் சிந்தனை: பிறப்பு என்பது மனிதர்க்கு மட்டுமே உண்டு. ஆனால், அவதாரம் என்பது சுடவுளுக்கு மட்டுமே உண்டு, மேலுலகில் உள்ள கடவுள் கீழுள்ள மக்கள் நலம் பெற வேண்டி மேலிருந்து கீழே இறங்கி வருவது அவதார் – அவதாரம் எனப்பட்டது. இந்நிலையிலேயே மகாவிஷ்ணு கடவுள் எடுத்த 10 பிறப்புகள் அவதாரம் எனப்பட்டன.
இராவண அரக்கனைச் சம்ஹரிக்க இராம அவதாரம் மாமன் கம்சனை அழித்தொழிக்க கிருஷ்ணாவதாரம். இரண்யனை வென்றழிக்க நரசிம்மவதாரம் என அடுக்கடுக்காகப் பக்தர்களால் கதை சொல்லப்படுகின்றது. இந்தக் கதை வரலாறுகள் எல்லாம் தமிழ்நாடு, திராவிட நாடு என்றும், இதனை மிஞ்சிப் போனால் வடநாடு, வட இந்தியா மற்றும் மொத்த இந்தியா மட்டுமே ஆகும் இதில் உலக நாடுகட்கொன்றும் சம்மதம் கிடையாது. சம்பந்தமும் கிடையாது.
உலகத்தையும் மக்களையும் காப்பாற்றி ரட்சிக்க இதுகாறும் 10 அவதாரங்கள் எடுத்த மகா விஷ்ணுப் பெருங்கடவுள் தன்னையே அவமானப்படுத்தும் அசிங்கப்படுத்தும் தந்தை பெரியாரையும், அவர்தம் தன்மான சுயமரியாதை இயக்கத்தவர்களையும் சம்ஹரிக்க ஏன் இதுகாறும்- அவதாரம் எடுக்கவில்லை? 11 ஆவது அவதாரம் எடுக்கக் கூடாதா, என்ன? எடுக்கமாட்டார். எடுக்கக்கூடாது. எடுக்க முடியாது – காரணம், இஃது அறிவுக்காலம், ஆய்வுக்காலம், ஆராய்ச்சிக் காலம், விஞ்ஞான யுகம், உண்மைக்காலம், ஏய்ப்புக்காலம் கிடையாது. இது சிந்தனைக்காலம், எதையும் கிண்டிக் கிளறி கேள்விக் கேட்டுத் துளைக்கும் காலம். இப்போது உண்மை புரிந்துவிட்டது அல்லவா பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது அல்லவா? பெரியார்க்காலமாகிய இன்று பொய்மைப் புரட்டு வெளிப்படாது அல்லவா!
கடவுளின் பொய்ப்புரட்டுக்கும், மதத்தின் பொய்ப்புரட்டுக்கும் கரோனா நோய் ஒன்று போதுமே! கரோனா நோய் அனைத்துக் கடவுளர்களையும், அனைத்து மதங்களையும், அனைத்து வல்லரசு நாடுகளையும் அடக்கி ஆட்டிப் படைத்து ஓர் ஓரத்தில் அமர வைத்துவிட்டதல்லவா? அனைத்து மதத் தலைவர்களும் விழி பிதுங்கிக் கிடந்தனரே!
கோயில் கோயில் என்னும் பேச்சு காணாமற்போச்சு; கடவுள் கடவுள் என்னும் பிரார்த்தனை கதிகலங்கிப் போக எங்கும் எங்கும் மூலை முடுக்கெங்கும் கரோனா என்பதே பேச்சாயிற்று.
ஆக, சர்வமதக் கடவுள்கள் எல்லாம் ஒன்று கூடி விவாதித்து முடிவு செய்து கரோனாவை ஒழிக்க ஏன் ஓர் அவதாரக் கடவுளாகப் பிறந்திருக்கக்கூடாது? அவசியம் பிறப்பார்களாக! கரோனாவை ஒழிப்பார்களாக!
(குறிப்பு புத்தர் அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர். எனவே அவரை இந்தக் கடவுள் கூட்டணியில் சேர்க்கவில்லை ) 1930–1935 ஆம் ஆண்டளவில் தந்தை பெரியாரைத் தம் தலைவராக ஏற்றுக் கொண்ட அறிஞர் அண்ணா அவர்கள் சொல்லின் செல்வர் ராபி சேதுப்பிள்ளை அவர்களிடமும், மதுரைப் பசுமலை நாவலர் சோமசுந்தர பாரதியாரிடமும் இராமாயணத்தைப்பற்றி எதிர்த்துப்பேசி அஃது அவசியம் எரிக்கப்பட்ட வேண்டிய நூல் என்று வாதிட்டாரே, அப்போது அண்ணாவைச் சம்ஹரிக்க ஏன் மகாவிஷ்ணுக் கடவுள் அவதரிக்கவில்லை? ஆவேசம் கொள்ளவில்லை! ஆத்திரம் கொள்ளவில்லை! பக்த கோடிகள் எனும் கேடிகள் சிந்திப்பார்களாக தெளிவார்களாக!