புதுடில்லி, செப்.28- பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக் கோரிய குஜராத் அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ஆம் ஆண்டு கலவரம் வெடித்தது. அப்போது, பில்கிஸ் பானு என்ற கர்ப்பிணியை 9 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. அவருடைய 3 வயது குழந்தை உள்பட அவருடைய குடும்பத்தை சேர்ந்த 7 பேர், வன்முறை கும்பலால் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 11 பேர் பிடிபட்டனர். குஜராத்தில் நடந்த இவ்வழக்கு, பின்னர் மராட்டிய மாநிலத்துக்கு மாற்றப்பட்டது. 11பேருக்கும் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இதற்கிடையே, 11 பேரில் ஒருவர் தங்களை முன்கூட் டியே விடுதலை செய்யக்கோரி குஜராத் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். அதை விசாரித்த நீதிமன்றம், தண்டனை குறைப்பை பரிசீலிக்க வேண்டிய உரிய அரசு, குஜராத் மாநில அரசுதான் என்று உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து, குஜராத் அரசிடம் 11 பேரும் மனு அளித்தனர். அதன்பேரில், அதே ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி சுதந்திர நாளன்று 11 பேரையும் குஜராத் மாநில அரசு விடுதலை செய்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மேல்முறையீடு செய்தார். அதைவிசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம், 11 பேர் விடுதலையை ரத்து செய்தது. மேலும், குற்றவாளிகளுடன் குஜராத் அரசு கைகோர்த்து செயல்படுவதாக விமர்சனம் செய்தது. அதன் அடிப்படையில், 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர். அதே சமயத்தில், தீர்ப்பில் மாநில அரசுக்கு எதிரான கருத்துகளை நீக்கக்கோரி குஜராத் மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தது. அந்த மனு, நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. குஜராத் மாநில அரசின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முந்தைய தீர்ப்பில் எந்த தவறும் இல்லை என்று அவர்கள் கூறினர்.