சந்திரயான்-4 மற்றும் 5 ஆகிய விண்கலன்களின் வடிவமைப்பு நிறைவடைந்துவிட்டதாகவும், அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார்.
நிலவில் தரையிறங்கிய சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயாரித்து அனுப்பிய சந்திரயான்- 3 விண்கலத்தின் ‘விக்ரம்’ லேண்டர் பாகம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 23ஆம் தேதி வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது.
அதில் இருந்து ரோவர் பத்திரமாக நிலவின் தரைப்பகுதிக்கு கொண்டுவரப்பட்டது. இதன்மூலம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு எனும் பெரு மையை இந்தியா பெற்றது.
அதன்பின் லேண்டர்தரை இறங்கிய இடத்தில் இருந்தபடியும், ரோவர் நிலவின் மேற்பரப்பில் ஊர்ந்து சென்றும் 14 நாள்கள் ஆய்வு மேற்கொண்டு பல்வேறு அரிய தகவல்களையும், படங்களையும் வழங்கின.
அடுத்தகட்டமாக சந்திரயான்-4 மற்றும் சந்திரயான்-5 திட்டங்களை செயல்படுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது. சந்திரயான்-4 திட்டத்தில் ரோபோட்தொழில்நுட்பத்திலான ரோவர் மற்றும் லேண்டரை நிலவுக்கு அனுப்பி ஆய்வு செய்வதுடன், நிலவின் மேற்பரப்பில் உள்ள மாதிரிகளை சேகரித்து பூமிக்கு கொண்டுவரவும் திட்டமிடப்பட்டுள்ளது.
5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்கள்
இந்த நிலையில் சந்திரயான்-4 மற்றும் சந்திர யான்-5 ஆகிய விண்கலன்களில் வடிவமைப்பு நிறைவடைந்து விட்டதாகவும், அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார்.
டில்லியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் மற்றும் இந்திய விண்வெளி சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சோமநாத் நிகழ்ச்சி யின் முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோது இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:-
நிலவுக்குச் செல்வதற்கான தொடர் பயணங்கள் உள்ளன. சந்திரயான்-3 முடிவடைந்தது. இப்போது, சந்திரயான் 4 மற்றும் 5-க்கான வடிவமைப்பு நிறைவடைந் துள்ளது. அரசின் ஒப்புதலைப் பெற உள்ளோம். அடுத்த 5 ஆண்டுகளில் 70 செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
இதில் அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறைந்த பூமி சுற்றுப்பாதை செயற்கைக் கோள்களும் அடங்கும்.
மின்சார உந்துவிசை அமைப்புகள் மற்றும் குவாண்டம் விசை வினியோக தொழில்நுட்பங்களை நிரூபிக்க ஓசன் சாட் வரிசை செயற்கைக்கோள்கள் மற்றும் தொழில்நுட்ப விளக்க செயற்கைக்கோள்கள் 01 மற்றும் 02 ஆகியவற்றை உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
அதோடு, ககன்யான் பணிக்கான டேட்டா ரிலே செயற்கைக் கோள்களையும், இணைய இணைப்பை வழங்குவதற்கான உயர் செயல்திறன் செயற்கைக் கோள்களையும், ‘ஸ்பேஸ்எக்ஸ்’ன் பால்கன் ராக்கெட்டில் அனுப்புவதற்காக அமெரிக்காவிற்கு அனுப்பத் தயாராகி வரும் ஜிசாட் செயற்கைக்கோளையும் இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
டிசம்பரில் ககன்யான் திட்டம்
அடுத்த 5 ஆண்டுகளில் புவி கண்காணிப்பு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது.
ஆய்வுக்காக விண்வெளி வீரர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் முதல்படியாக, ஆளில்லா விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பி சோதிக்கும் பணியை வருகிற டிசம்பரில் தொடங்க திட்ட மிட்டுள்ளோம்.
ராக்கெட்டின் அனைத்து நிலைகளும் ஏற்கனவே சிறீஅரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மய்யத்தை அடைந்துவிட்டன. திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மய்யத்தில் விண்வெளி வீரர்களை சுமந்து விண்கலம் தயாராகி வருகிறது.
பெங்களூருவில் உள்ள யு. ஆர்.ராவ் செயற்கைக்கோள் மய்யத்தில் சேவை தொகுதி ஒருங்கிணைக்கப்பட்டு வருகிறது. அடுத்த 1½மாதங்களில் அனைத்து அமைப்பு களும் சிறீஅரிகோட்டாவை அடையும், அங்கு இறுதி சோதனை மற்றும் ஒருங்கிணைப்பு நடக்கும்.
– இவ்வாறு சோம்நாத் கூறினார்.