100 வேஷம் போட்ட ஆர்.எஸ்.எஸ்.சும்
ரகசியம் இல்லாத சுயமரியாதை இயக்கமும்!
கி.வீரமணி
சுயமரியாதை இயக்கம் தந்தை பெரியாரால் தோற்றுவிக்கப்பட்ட அதே ஆண்டு, புனேயில் மஹாராஷ்டிர மாநிலத்தில் டாக்டர் ஹெட்கேவர் என்கின்ற சித்பவன் பார்ப்பனரால் தொடங்கப்பட்டது ஆர்.எஸ்.எஸ். ஆகும். ‘சித்பவன்’ பிரிவு மகாராஷ்டிரப் பார்ப்பனர்களிலேயே ஒரு உயர் தனிப் பிரிவு ஆகும்.. டாக்டர் மூஞ்சே, பாலகங்காதர திலகர், வி.டி.சாவர்க்கர், நாதுராம் விநாயக் கோட்சே போன்ற பிரபலமான ஹிந்துத்துவவாதிகள் அனைவருமே இப்பிரிவினர் ஆவார்கள்; ஆர்.எஸ்.எஸ். முக்கியத் தலைவர்கள் வரிசையில் ஹெட்கேவர் தொடங்கி, கோல்வால்கர், பால சாகிப் தேவ்ரஸ் ஆகிய பலரும் இதே பிரிவைச் சேர்ந்தவர்கள் – இடையில் ராஜேந்திர சிங் என்ற ஒருவர் வந்தார் – உடனே மாற்றப்பட்டு மறுபடியும் பழைய வரிசை – உயர்ஜாதியினரே தொடர்கின்றனர்.
அதன் தத்துவகர்த்தா (Ideologue) என கருதப்படுபவர் மாதவ் சதாசிவ் கோல்வால்கர் என்ற இரண்டாவது தலைவர். அவர் எழுதிய ஞான கங்கை நூலில் (Bunch of Thoughts) ஜாதி முறையை வெகுவாகப் பாராட்டி,ப் பெருமைப்படுத்தி எழுதியதோடு, ஜாதி – வர்ண பேத ஏற்பாட்டை எதிர்ப்பவர்கள் மூடர்கள் என்ற கருத்துடன் கடுமையான ஜாதி ஆதரவாளராக ஆர்.எஸ்.எஸ்.சின் கொள்கையை விளக்கியுள்ளார்.
தீண்டாமை ஒழிப்பு என்ற உதட்டளவிலான உச்சரிப்புக்கூட – ஜாதி ஒழிப்பு என்று கூறாமல் மழுப்புவதற்கேயாகும். வெளிப்படையாகவே ஜாதி தான் நாட்டின் ஒற்றுமையை சமூக இணக்கத்தைக் கட்டிக் காக்கும் சிறந்த நல் ஏற்பாடு என்றும் கூறி வருகிறார்கள். (ஆனால் தற்போதுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர், சமயத்திற்கேற்ப தனது ராகத்தை மாற்றிக் கொண்டாலும், ஜாதியைக் கண்டிப்பது போன்று மென்மையாகப் பேசுகின்றார்.) ஆர்.எஸ்.எஸ். அதிகாரப்பூர்வ ஹிந்தி ஏடான “பாஞ்சன்யா”வில் அண்மையில் ஜாதியை வலியுறுத்தி (Caste is India’s unifying factor: RSS – linked weekly goes all out to justify caste system” என்று Indian Express ஏடு சாடியுள்ளது. அதன் ஆசிரியரான ஹித்தேஷ் ஷங்கர் என்பவர் முக்கிய தலையங்கத்திலேயே எழுதியிருக்கிறார்.
“படையெடுத்த முகலாயர்களும் மதமாற்றம் செய்ய வந்த கிறிஸ்தவ மிஷனரிகளும் சீர்திருத்தம் என்ற போர்வையில் ஜாதி – வர்ணதர்மத்தை அழிக்கவே பல்லாண்டுகளாக முயற்சித்தனர்!
பிறகு வந்த பிரிட்டிஷ்காரர்கள் நம்மை பிரித்தாளும் முறையை Divide and Rule – உண்டாக்கி நம்மை அடிமையாக்கினர்” என்கிறார்கள்.
ரிக் வேதத்தின் புருஷ சுக்தம் என்பதை எந்த வெள்ளைக்காரன் எழுதினான் என்று இந்த காவிக் கனவான்கள்தான் நமக்கு விளக்க வேண்டும்!
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் வெளிப்படையானது எதுவும் கிடையாது.
1. Open Agenda – வெளிப்படையில் கூறும் – பேசும் திட்டம் ஒன்று.
2. Hidden Agenda – மறைமுகமாகச் செய்யும் ரகசியத் திட்டம் மற்றொன்று.
இதுதான்!
அதுவல்லாமல், அவ்வப்போது நிறத்தை ‘அவர்கள் மாற்றிக் கொண்டு வித்தையையும் வியூகத்தையும் வகுப்பார்கள்.
அவ்வியக்கத்தின் நூற்றாண்டும் நடைபெற இருக்கும் இதே கால கட்டத்தில் – இந்த நூறாண்டு வரலாற்றில் அது ஏன் மூன்று முறை ஒன்றிய அரசால் தடை செய்யப்பட்டது.
எத்தனை முறை சிறையிலிருந்தும் வெளியே இருந்தும் விளக்கங்களும் பல்வேறு கடிதங்களும் எழுதி – பல்வேறு உத்திகளைக் கையாண்டு, பல பிரிவுகளை பரிவாரங்களாக்கி, எப்படியோ அந்த வெறியை மூலதனமாக்கி – அதைக் காட்டாமல் வளர்ச்சி முகமூடி அணிந்து ஆட்சியை பிடித்து, உள்ளே இடஒதுக்கீடு ஒழிப்பு, வெளியே அதற்கு ஆதரவுக் குரல் என்று வெளி வேஷம் போட்டு தசாவதாரங்களைத் தாண்டி நூறு அவதாரங்கள் எடுத்துக் கொண்டவர்கள் அவர்கள்.
ஆனால் சுயமரியாதை இயக்கமோ ரகசியமே இல்லாத திறந்த புத்தகம் / பிறகு விளக்குவோம்.