இங்கே பெரியாரை வேண்டு மென்றே மிகவும் கொச்சைப் படுத்திச் சேற்றில் புரளும் பன்றிகளைப் பற்றிப் பொருட்படுத்தப் போவதில்லை.
புரியாமல் பேசுபவர்கள் தெரிந்து கொள்வதற்கு மட்டுமே சில வரலாற்று உண்மைகள்.
பெரியார் அவருடைய அப்பாவின் மண்டிக்கடையில் பெரும் பொருள் ஈட்டிச் செல்வந்தராக இருந்தார்.
29 பதவிகள் – ஈரோட்டு நகரத் தலைவர் முதல் பல்வேறு பதவிகளை வகித்தார். காலராவின்போது மக்கள் பிணங்களைத் தொட அஞ்சியபோது அவரே முன் வந்து பிணங்களை அகற்றினார்.
ஈரோடு மக்களுக்குக் குடிநீர் தொட்டி அன்று அவர் கட்டியது இன்றும் நீர் வழங்குகின்றது. அவருடைய சுகாதாரப் பணியாளரை சேலத்திற்குத் தரச் சொல்லி அவரது நண்பர் சேலம் நகரத் தலைவர் ராசகோபாலாச்சாரியார் கேட்டார்.
ஆச்சாரியாரும், உயர்திரு வரதராசுலு அவர்களும் வந்து கேட்டுக் கொண்டதற்கு இணங்கி 29 பதவிகளையும் துறந்து காங்கிரசில் சேர்ந்தார்.
கடுமையாக உழைத்துக் கதர் மூட்டை தூக்கி விற்றார். (உ.வே.சா. அய்யகோ செல்வச் சீமானான உங்களுக்கா இந்தக் கதி் என்று ரயிலில் ஒரு மணி நேரம் இலக்கியப் புலம்பல் செய்ததற்கு ஒரு பதிலும் சொல்லாமல் இறங்கியவர்).
கள்ளுக் கடை போராட்டத்திற்காகத் மிக்க வருமானம் தந்த தென்னை மரங்களை வெட்டினார். தமிழ்நாடு காங்கிரசு என்றாலே நாயுடு, நாயக்கர், முதலியார் கட்சி (வரதராசுலு, ஈ.வெ.ராமசாமி, திரு.வி. கல்யாண சுந்தரனார்) என்று வந்து விட்டது.
வைக்கம் போராட்டம், சேரன் மாதேவி குருகுலம், மாநாடுகளில் ஆதிக்கம் என்ற பார்ப்பன ஆதிக்கம், அதற்குக் காந்தியாரும் துணை நின்றதை எதிர்த்துக் காங்கிரசை ஒழிப்பேன் என்று வெளி வந்தார்.
நீதிக் கட்சியினர் இவர் சிறையி லிருந்த போது இவரைத் தலைவர் ஆக்கினார்கள். மூன்று முறை பிரதமர் (அப்போது முதல்வர் மெட்ராசு பிரசிடென்சியின் பிரதமர் என்றழைக்கப்பட்டார்.) பதவி வேண்டாம் என்று சொன்ன பெருந் தகை வேறொருவர் உண்டா?
அவருடைய நண்பர் ராச கோபாலாச்சாரியார் வேண்டியும் பதவி வேண்டாம் என்று சொல்லி விட்டார்.
செல்வச்செழிப்பில் வாழ்ந்தவர் மிகவும் சிக்கனமாக வாழ்ந்தார். காடு மேடு என்று அலைந்தார். சொல்லடி, கல்லடி முதல் மலம், செருப்பு, பாம்பு அனைத்தையும் தாங்கிக் கொண்டார்.
அவர் எந்தச் சமுதாயத்திற்காக உழைத்தாரோ அவர்களே இப்படிச் செய்ததுதான் வியப்பு!
இன்றும் படித்ததாகச் சொல்லிக் கொள்ளும் பட்டங்கள் வாங்கியவர்கள் சொல்வது போலத்தான்.
பெரட்ரண்டு ரசல், கார்ல் மார்க்சு, இங்கர்சால் மற்றும் பல உலக அறிஞர்களின் நூல்களை அனுமதியுடன் குறைந்த விலைக்கு அச்சிட்டு வெளியிட்டார். பல இதழ்கள் வெளியிட்டார். அவற்றில் புதிய கருத் துகளை வெளியிட்டார்.
மூட நம்பிக்கைகளைத் தகர்த்தார்.
தன்னுடன் வர முடியாது, கொள்கை கள் மிகவும் கடினமானவை என்று நெருங்கிய நண்பர்கள் சொன்னபோது நான் தனியாகவே போராடுவேன் என்று தொடங்கினார். ஆனால் அவர் பின்னால் பெரிய படையே வந்தது.
பாமரர்கள், பெரும் படிப்புப் படித்தவர்கள், பெருஞ்செல்வந்தர்கள் என்று வந்து குவிந்தனர்.
அவர்களுக்கெல்லாம் பரிசுகள் போராட்டங்களும், சிறைத் தண்டனை களுந்தான்! எத்தனைப் போராட்டங்கள், எத்தனை எத்தனை மாநாடுகள், பெண்கள் படையின் சாதனைப் பட்டியல்.
பெரியாரை வசைபாடும் பிறவி களே உங்கள் சாதனை என்ன? ஒரு துரும்பைக்கூட நகர்த்தாத தூசிகள் தானே நீங்கள்.
அவர் தமிழர் இல்லை என்று வசை பாடும் சின்னப்புத்திகளே, ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்றது யார்?
திருக்குறளை அறிஞர்களை அழைத்து மாநாடு நடத்திப் பரப்பியது யார்?
தமிழ்ப் புலவர்களை நேருக்கு நேர் கடிந்து கொண்டு காட்டுமிராண்டி புராணங்களை விட்டுப் புதுப் படைப்புகளைப் படைக்கச் சொன்னது யார்?
பல புதிய படைப்புகளை உருவாக்கி வெளியிட்டது் யார்?
பட்டி தொட்டிகளுக்குச் சென்று பரப்பி, மேலும் பரப்புவதற்கு இளைஞர் படையைத் தயாரித்து ஊக்குவித்தது யார்?
இட ஒதுக்கீடு, கல்வி, வேலை வாய்ப்பு, பெண் ணுரிமை, மூட நம்பிக்கை ஒழிப்பு என்று என்னதான் செய்யவில்லை.
நாய்களாக நன்றியுடன் இருக்க வேண்டாம். ஆனால், குரைக்காதீர்கள்.
அவருடைய சொத்து முழு வதையும் உங்கள் யார் மேலும் நம்பிக்கையில்லை என்று துணிச்சலாக நேருக்கு நேரே சொல்லி இந்தத் திருமணம் ஒரு சட்ட அமைப்பு என்று இன்னும் பச்சையாக உறைக்கும்படிச் சொல்லி அறக்கடளைகளை உரு வாக்கிச் சென்றார்.
அதில் யாரும் கை வைக்க முடியாதே!
பார்ப்பனர்களே கடவுள் இல்லை யென்று சொல்ல வைக்கும் வழிதானே அனைவரும் அர்ச்சகராகும் திட்டம்!
திராவிடம் என்ற சொல்லுக்கும் தமிழன் என்ற சொல்லுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை அலசும் பிசிறுகளே
எந்தப் பார்ப்பானாவது தன்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்வானா?
உங்கள் சிறு மூளைக்கு இது கூடப் புரியவில்லையா?
தமிழன் என்றும் ஆண்ட பரம்பரை என்றும் பெருமை கூறிக்கொள்ளும் அறிவிலிகளே – நீங்கள் இன்னும் சட்டப்படி சூத்திரர்கள் என்பதை மறக்காதீர்கள். உலகம் இன்று பெரியாரைப் போற்றுகின்றது. பல பல்கலைக் கழகங்கள் அவரை ஆராய்ந்து வெளியிடுகின்றன.
உங்கள் குரைத்தல் அன்றும் சரி, இன்றும் சரி அவர் கால் தூசிக்குக் கூடச் சமமில்லை. இன்று ஏமாறும் இளைஞர்கள் ஒரு நாள் உங்கள் ஏமாற்று வேலையைப் புரிந்து எள்ளி நகையாடுவார்கள். காலம் நன்கு பதில் சொல்லும்.
திராவிட மாடல் மனித நேயத்தின் மாண்பு. அதை உலகு தொழும். உங்களைக் கழுதைகள் கூடச் சட்டை செய்யாது . நீங்கள் ஈட்டும் பொருளே உங்களை அழித்துவிடும்.
பெரியார் பெரியார்தான். தூசிகள் தூசிகள்தான்!
-மருத்துவர் சோம.இளங்கோவன்