தாம்பரம், ஜூலை 31- தாம்பரம் அருகே நடந்த தீ மிதி திருவிழாவில் தீக்குண்டத்தில் தவறி விழுந்து அ.தி.மு.க. மேனாள் கவுன்சிலர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
சென்னை தாம்பரம் அடுத்த இரும்புலியூர் திலகவதி நகரில் உள்ள நாகவல்லி அம்மன் கோவிலில் ஆடி மாதம் 2ஆவது வார திருவிழா 28.7.2024 அன்று நடந்தது. மாலையில் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதில் காப்பு கட்டி நோன்பு இருந்த ஆண், பெண் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினார்.
அப்போது அ.தி.மு.க. மேனாள் கவுன்சிலரும், தாம்பரம் நகர அ.தி.மு.க. பொருளாளருமான மாணிக்கம், அவருடைய மனைவி தனலட்சுமியுடன் தீ மிதித்தார்.
அப்போது திடீரென மாணிக்கம், தனலட்சுமி மற்றும் இவர்களுக்கு பின்னால் வந்த அன்பழகன் ஆகிய 3 பேரும் நிலைதடுமாறி தீக்குண்டத்தில் விழுந்து விட்டனர். இதை கண்டு அங்கிருந்த பக்தர் கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கு இருந்த பக்தர்கள், கோவில் நிர்வாகிகள் தீக்குண்டத்தில் விழுந்த மேனாள் கவுன்சிலர் உள்பட 3 பேரையும் மீட்டனர். படுகாயமடைந்த 3 பேரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் கோவில் திருவிழாவில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிகழ்வு குறித்து பீர்க்கன்காரணை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.