17.7.2024 அன்று சுயமரியாதை வீரர், திராவிடர் இயக்கத் தோழர் ‘பாசறைமுரசு’ ஆசிரியர் மு.பாலன் அவர்கள் பெரம்பூரில் நடத்திய கொள்கை பரப்பு விழாவில் அன்புத் தோழர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் (மேனாள் எம்.பி.), பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இவர்களுடன் நாமும் கலந்து கொண்டோம். சிறப்பான அரங்க கூட்டத்தில் இரண்டு நூல்களை வெளியிட்டு உரை நிகழ்த்தினோம்.
உரையாற்ற வந்தோருக்கு, டொமினிக் லேப்பியர் மற்றும் லேரி காலின்ஸ் ஆகிய இரண்டு சிறந்த ஆய்வாளர்கள் எழுதிய (1975–1976 – நெருக்கடி கால பிரகடனத்திற்கு சற்று முன்னதாக) “Freedom at Midnight” என்ற தலைப்பிட்ட அந்நூல் – இந்திய நாட்டிற்கு சுதந்திரம் வருவதற்குக் காரணமான பல நிகழ்வுகள்பற்றிய – ஓர் அரசியல் வரலாற்று நூலாகும். 1976இல் அந்நூல் பற்றிய விளம்பரங்கள் வெளிவந்தன. அதன் தமிழாக்கத்தை ‘நள்ளிரவில் வந்த சுதந்திரம்’ என்ற தலைப்பில், அலைகள் வெளியீட்டகம் சார்பில் தமிழில் பிரபல எழுத்தாளர்களும், மொழிபெயர்ப்பாளர்களுமான வி.என். ராகவன், மயிலை பாலு ஆகியோர் – அருமையாகத் தந்துள்ள அந்நூலை ‘பாசறை முரசு’ மு. பாலன் எங்களுக்கு அன்புடன் தந்தார்!
்அந்த நூலின் மூலமான ஆங்கில நூலை நான் ஆழமாகப் படித்து, அகலமாக விளக்கும் வாய்ப்பின் வரலாறே கூட – ஒரு தனி நூலாக எழுதப்பட வேண்டிய அளவுக்கு என்னை நான் நினைவுக் குதிருக்குள் தள்ளி வெளியே கொட்ட நினைக்கிறேன்.
ஆங்கில நூல் பற்றிய மதிப்புரைகளை 1976 ஜனவரியில் படித்தவுடன் நூலை வாங்கிட, அண்ணா சாலை ஹிக்கின் பாதம்ஸ் புத்தக சாலைக்குச் சென்றேன். வந்த நூல்கள் உடனடியாக விற்றுத் தீர்ந்து விட்டதாகவும், அடுத்து வரவிருப்பதாகவும் தெரிவித்தனர். ‘‘நீங்கள் ஒரு ஆர்டர் பதிவு செய்து விட்டுச் செல்லுங்கள் – தருகிறோம்; வந்தவுடன் தகவல் கொடுக்கிறோம்’’ என்றனர் அங்குள்ள விற்பனையக நண்பர்கள்! மகிழ்ச்சியுடன், பதிவு செய்து விட்டு வந்து விட்டேன்.
நாடெங்கும் அவசர நிலை அமலில் இருந்தாலும் தமிழ்நாட்டில் அதனை செயல்படுத்த வாய்ப்பில்லை என்று அன்று முதுகெலும்புள்ள முதலமைச்சராகத் திகழ்ந்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி கூறியது அனைவரும் அறிந்ததே!
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் தலைமையில் கழக இயக்கம் வீறு நடைப் போட்ட கால கட்டம் அது!
1976 ஜனவரி 30ஆம் தேதி காலை எனக்கு ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடையிலிருந்து தொலைபேசி மூலம் “Freedom at Midnight” புத்தகம் வந்து விட்டது – வந்து எடுத்துப் போங்கள்’’ என்று தகவல் வந்தது.
அன்று மாலை திண்டிவனத்தில் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் திரு. சம்பந்தம், திரு. தாஸ் போன்றவர்கள் ஏற்பாடு செய்த கூட்டம் –அன்னையாருடன் வேனில் சுமார் 3 மணி அளவில் புறப்பட ஆயத்தமாகும் முன் – நான் அவசரமாக ஹிக்கின் பாதம்ஸ் புத்தகக் கடைக்குச் சென்று அந்த நூலை வாங்கி, எனது பெட்டியில் வைத்தேன் படிப்பதற்கு – பெட்டியில் ஒரே ஒரு செட் உடைதான் அதில் இருக்கும் (பயணப் பெட்டி). அம்மா அவர்களுடன் புறப்பட்டோம். மாலையில் திண்டிவனம் காந்தி திடலில் அம்மா பேசிக் கொண்டிருக்கும்போது தொலைபேசியில் செய்தி வந்தது –சென்னைத் தோழர்களிடமிருந்து!
தி.மு.க. அரசு கலைக்கப்பட்டு விட்டதாகத் தகவல் கூறினர். அதனை அன்னையார் கூட்டத்தில் அறிவித்து, ‘‘கழகப் பொறுப்பாளர்கள் இதனை பொறுப்புடனும் கடமை உணர்வுடனும் அணுக வேண்டும் – எதையும் ஏற்க ஆயத்தமாகி, வருங்கால நடவடிக்கைகளை எதிர் நோக்கி அமைதி காத்திட வேண்டும்’ என்று கூறினார்.
சென்னை திரும்பும் வழியில் சாரம் என்ற இடத்தில் சாலையில் வைத்து உணவு எங்களுக்குப் பரிமாறினார் (‘சாலை உணவு’ – தோழர்கள் வீட்டிலிருந்து வந்தது!).
இரவு 1.30 மணிக்குத் திரும்பி பெரியார் திடலுக்கு வந்தோம்; எங்கும் சுமார் 500, 600 காவல்துறையினர் முற்றுகை – சாலையில் – புரிந்து விட்டது. அம்மாவை அழைத்துச் சென்று உள்ளேயே அவரது இருக்கையில் அமர வைத்தோம்.
காவல் அதிகாரிகள் என்னையும், நண்பர் சம்பந்தம், தியாகராசன் ஆகியோரையும் ‘மிசா’ கைதியாக கைது செய்து கமிஷனர் அலுவலகம் – பிறகு சென்னை சென்ட்ரல் ஜெயிலில் விடிந்தபின் அடைத்தனர். ‘சடங்கு, சம்பிரதாயங்கள்’ முடிந்து பெட்டியில் ஒரேயொரு செட் உடை மற்றும் புதிய புத்தகம் – இவையெல்லாம் எங்களிடம் தரப்படாமல் அங்கேயே சிறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு உடுத்திய உடையோடு 9ஆம் நம்பர் பிளாக் என்ற பெரு வியாதிஸ்தர்கள் பகுதியை காலி செய்து எங்களை அதில் அடைத்தனர். இந்த புத்தகமே எங்களுக்குத்
தரப்படாமல் சிறையில் எங்கோ வைக்கப்பட்டது!
பிறகுதான் எங்களுக்கு எங்கள் சுதந்தரம் நடு நிசியில் பறிக்கப்பட்ட விந்தை புரிந்தது!
அடுத்து அந்தப் புதிய நூல் எங்களுக்கு எப்போது, எத்தனை மாதம் கழித்துத் தரப்பட்டது தெரியுமா?
நாளை எழுதுகிறேன்.
(தொடரும்)