பிணை வழங்குவதுபற்றி உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்புக்கு மாறாக, தொடர்ந்து பிணையை மறுப்பது, பிணை வழங்க வேண்டிய பட்சத்தில், புதிய வழக்குப் போட்டு சிறையில் தள்ளுவது தனி மனித உரிமைக்கு எதிரானது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உச்சநீதிமன்றத்தின் சரியான அறிவுறுத்தல் ஆணையாக Prevention of Money Laundering Act (PMLA) வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் தொடர் பிணை மறுப்பு என்பது, அவர்களது தனி மனித சுதந்திர வாழ்வுரிமையின் பறிப்பே! அவ்வழக்குகளில் வாதாடும் அத்துறையினருடைய பொறுப்பாகும்.
நீதிமன்றங்களில் அவர்களுக்குப் பிணை (ஜாமீன்) வழங்குவதற்குத் தொடர் மறுப்பு அல்லது உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் தந்துள்ள பிணையை செயல்படுத்தவிடாமல், ஒரு புதுவகை வழக்கில் திடீர் கைது போன்ற நடவடிக்கைகள் (வெளிப்படையாக அவை குற்றத் தடுப்புக்குப் பயன்படும் நோக்கத்தைவிட) அவர்கள்மீது வன்மத்தோடு ஏவிவிடப்படும் புதிய வழக்குகள் அரசியல் பின்னணியின் காரணமாக அமைகிறதோ என்ற கருத்துப் பரவலாக ஏற்பட்டு வருவது, நடுநிலை பிறழ்ந்த, ஒரு சார்பு பழிவாங்கும் மனப்போக்கே அடிநீரோட்டமாக உள்ளது என்பதையும் காட்டுகிறது.
இரண்டு முக்கிய கேள்விகளை அண்மைக்கால இந்த ரக வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட (PMLA) தன்மைபற்றி உச்சநீதிமன்றம் எழுப்பியுள்ளது மிகவும் கவனிக்கத்தக்கது; பின்பற்றப்பட வேண்டியது.
உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கன்னா கருத்து
உச்சநீதிமன்றத்தின் ஜஸ்டிஸ் சஞ்சீவ் கன்னா தலைமையிலான அமர்வு, ‘இந்த சட்டத்தின் அடிப்படையில் கைது செய்துள்ள அமைப்பு, அதன் அடிப்படை தேவை – கைது நடவடிக்கைகள்பற்றி சரியான காரணங்களை முன்வைத்தாகவேண்டும்’ என்று கூறியுள்ளது.
‘‘One concerned the question whether an officer arresting a person on money-laundering charges should demonstrate the necessity for arrest for the action to be deemed valid; and the other voiced shock and revulsion at the ease and quickness with which courts were staying reasoned orders granting bail.”
இதன் தமிழாக்கம் வருமாறு:
‘‘ஒரு கேள்விக்கு ஆதங்கமாக கருதப்படுவது, பண மோசடித் தடுப்புச் சட்டத்தின்படி ஒரு அதிகாரி கைது செய்யப்படும்பொழுது, கைதிற்கான காரணத் தேவை என்பதைச் சொல்லாத நிலைதான் – அத்தகைய கைது சரியெனக் கருதிடும் சூழலும் உருவாகிறது. அடுத்த கேள்வியாக – எளிதாகவும், விரைவாகவும் நீதிமன்றங்கள் பிணைக்கு தடை விதிப்பது, ஒப்பீட்டளவில் அதிர்ச்சியாகவும், வெறுப்பையும் அளிப்பதாகவும் தோன்றுகிறது.”
அண்மையில் டில்லி யூனியன் பிரதேச முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு அளிக்கப்பட்ட பிணை, அதனை உடனடியாக மற்றொரு நீதிமன்றம் நிறுத்தி வைத்து (Stay), அவருக்கு அளிக்கப்பட்ட பிணை, இரண்டாவது தடவை பிணை செயலற்றுப் போகுமாறு செய்ததையே சுட்டிக்காட்டியுள்ள 64 பக்கம் உள்ள அந்தத் தீர்ப்பில்,
இதுபற்றி அந்த நீதிபதி ‘‘மேலும் பல நீதிபதிகள் கொண்ட பெரிய அமர்வின்மூலம் ஒரு சரியான நிலையான தரவுகளுடன் கூடிய தீர்வு உருவாக்கப்படவேண்டும்‘‘ என்று ஒரு யோசனையையும் தெரிவித்துள்ளார்.
பொதுவாக சட்டத்தின் மொழியில் ஒரு முக்கிய கருத்துரை உண்டு.
‘‘Bail is a general rule
Jail is an exception’’
பொதுவான உரிமை (குற்றம் சுமத்தப்பட்டோரின் பிணை (ஜாமீன்) என்பதே உரிமை! (Rights). சிறை என்பது அதற்கான விதிவிலக்கு போன்றதே) என்பதே அது!
மேலும் அது நீதிபதிகள் முழு சுதந்திரத்தையொட்டிய தன்னுணர்வின் வெளிப்பாடு (Discretionary Power) என்பதாகும்.
ஆனால், தற்போது நீதிமன்றங்களில் காணும் காட்சிகள் என்ன?
பாதிக்கப்பட்டவர்களுக்குத் தொடர்ந்து
பிணை மறுப்பு என்பது சரியல்ல!
பல வழக்குகளில், வழக்கு தாக்கல் செய்யும் அரசு தரப்பில் கூறப்படும் வாதங்களைக் கேட்டு, அதன்படி பிணை உரிமையை (Right to get bail) பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுப்பது, அதுவும் தொடர்ந்து மறுப்பது சரியானதல்ல.
முந்தைய பல தீர்ப்புகளில் கீழமை நீதிமன்றங்களில் ‘‘மெக்கானிக்கலாக‘‘ (மனதை ஆழ்ந்து செலுத்திப் பாராமல்) பிணை மறுப்பது கூடாது என்ற எச்சரிக்கை ஆணையை, உச்சநீதிமன்றம் தந்துள்ளது – மனித சுதந்திரக் காப்பின் முக்கியத்துவம் வாய்ந்த முத்திரை தீர்ப்பு.
அருள்கூர்ந்து இதனை நடைமுறைப்படுத்தி – அரசியல் பழிவாங்கும் வழக்குகளில் சிறையில் வாடுவோர் – அதன் தன்மைகளை நடுநிலையோடு ஆராய்ந்து சரியாகப் பயன்படுத்திடவேண்டும்.
நிரபராதிகள் தண்டிக்கப்படவே கூடாது – குற்றவாளிகள் தப்பினாலும்கூட என்பதுதானே, கிரிமினல் சட்டத்தின் முக்கிய கோட்பாடு!
நியாயங்கள் நிலைக்கட்டும்!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
18.7.2024