சுரதா (23 நவம்பர் 1921 -– 20 ஜூன் 2006) இயற்பெயர் இராசகோபாலன் தமிழ் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார்.
கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்னம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்னதாசன் என்று மாற்றிக் கொண்டார்.
தன் மாற்றுப் பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர்.
இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். புரட்சிக்கவிஞர் உடனிருந்து பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளைக் கவனித்தல், பாவேந்தரின் நூல் வெளியீட்டிற்குத் துணை நிற்றல் எனப் பல நிலைகளில் பாவேந்தருடன் சுரதாவுக்குத் தொடர்பு இருந்துள்ளது.
சுரதாவின் ‘சொல்லடா’ என்னும் தலைப்பில் அமைந்த கவிதையைப் புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த பொன்னி என்னும் இதழ் 1947 ஏப்பிரல் திங்கள் இதழில் வெளியிட்டு இவரைப் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞராக அறிமுகம் செய்தது.
பாவேந்தரின் புரட்சிக்கவி நாடகம் தந்தை பெரியார், கலைவாணர் முன்னிலையில் நடைபெற்ற பொழுது அந்த நாடகத்தில் அமைச்சர் வேடத்தில் நடித்த பெருமைக்கு உரியவர் சுரதா. அரசவைக் கவிஞராக நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
நாராயணன் என்பவரை ஆசிரியராகக் கொண்டு புதுக்கோட்டையிலிருந்து வெளிவந்த ‘தலைவன்’ இதழின் துணை ஆசிரியராக பணியாற்றினார். அக்காலத்தில் பல சிறுகதைகளை எழுதினார்.
கவிஞர் திருலோக சீதாராமின் ‘சிவாஜி’ இதழில் தொடக்கக் காலத்தில் சுரதாவின் கவிதைகள் வெளிவந்துள்ளன. திருச்சிராப்பள்ளி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.