நீர் நிலைகளில் எண்ணெய் சிந்திவிட்டால் அதை அகற்றுவது கடினம். பல நேரங்களில் கப்பல்களில் கொண்டு செல்லப்படும் எண்ணெய், கடலில் சிந்துவது வாடிக்கையாக உள்ளது. கடலின் மேற்பரப்பில் இருந்தாலும் இந்த எண்ணெயால் கடல் வாழ் உயிரினங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.
சிந்திய எண்ணெயைத் திரும்ப எடுப்பதற்குப் பல புதிய முறைகள் பின்பற்றப்படுகின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு சுற்றுச் சூழல் அமைப்பு, மனித முடிகளைக் கொண்டு எண்ணெயை நீக்குகிறது. மனிதர்களின் தலை முடியில் எண்ணெய் சுலபமாக ஒட்டும். 500 கிராம் உள்ள முடியைக் கொண்டு இரண்டு அடி நீளமும், இரண்டடி அகலமும், 1 இன்ச் கனமும் உள்ள பாயை உருவாக்கலாம். இதைக் கொண்டு 5.6 லிட்டர் எண்ணெய் வரை நீக்கலாம். மனித முடி என்பது பெரும்பாலும் சுலபமாகக் கிடைக்கக் கூடியது. வீட்டு விலங்குகளின் முடியையும் இதற்கு பயன்படுத்த முடியும். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பாய்களைக் கொண்டு அமெரிக்காவின் பல இடங்களில், நீரில் சிந்திய எண்ணெயை நீக்கி உள்ளனர்.
பொதுவாகக் கடலில் எண்ணெய் சிந்தும் போது பாலிப்ரொபைலின் கொண்டு நீக்குவர். ஆனால் இது இயற்கையாக மக்காது என்பதால் சுற்றுச்சூழல் சீர்கேட்டையே உருவாக்கும். ஆனால், முடிகளால் ஆன பாய் இயற்கையாக மக்கி விடும் என்பதால், இதைப் பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக இருக்கும்.