’முஸ்லிம்களிடம் அடிமைப்பட்டு அவர்களிடம் எதிர்க்கட்சிகள் முஜ்ரா நடனம் ஆடிக் கொண்டிருக்கின்றன’ என்று பிரதமர் மோடி பீகாரில் தேர்தல் பிரச்சார மேடையில் பேசி இருக்கிறார்.
முஜ்ரா என்பது ஆபாசமான கலாச்சாரம்! அரச குடும்பத்தினரும், அதிகார வர்க்கத்தினரும் தங்கள் பொழுதுபோக்குக்காக பாலியல் தொழிலாளிகள் நிறைந்த பணச் செழிப்பு மிக்க இல்லங்களுக்குப் போவது வழக்கம். அங்கே அவர்களை மகிழ்விக்க இளம் விலைமாதர்கள் ஆடும் நடனத்துக்கு முஜ்ரா நடனம் என்று பெயர். இவை பெரும்பாலும் பாலியல் இச்சையைத் தூண்டும் வகையில் அரைகுறை ஆடைகளுடனும், பல நேரங்களில் ஆடைகளே இன்றியும் இருக்கும்.
அதாவது தேசத்தின் பிரதமர் என்ன சொல்கிறார்? எதிர்க்கட்சிகளை பாலியல் தொழிலாளிகளுடன் ஒப்பிடுகிறார். இதிலும் பொதுவாக சொல்லாமல் முஜ்ரா என்றது குறிப்பிடத்தக்கது.
‘இந்துக்களின் ஓட்டுக்காக பா.ஜ.க.வினர் கோயில் கோயிலாகப் போய் தேவரடியார் நடனமாடி வருகிறார்கள்,’ என்று மேனாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியோ, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினோ பேசி இருந்தால் என்னவாகி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எப்படிப்பட்ட அதிர்வலைகளை அது உருவாக்கி இருக்கும்? அவர்கள் மீது எத்தனை வழக்குகள் பதிவாகி இருந்திருக்கும்?
அதற்குச் சற்றும் குறைவில்லாத அளவுக்குக் கேவலமாக ஒரு பிரதமர் பேசுகிறார்.
இப்படியெல்லாம் பேசுபவர்கள் ஒவ்வொரு கட்சியிலும் இருப்பார்கள்தான்.
அவர்கள் ஆங்காங்கே உள்ளூர் பிரச்சாரகர்களாக இருப்பார்கள். மூத்த பக்குவப்பட்ட தலைவர்கள் இந்த மாதிரி கீழ்நிலைக்கு இறங்க மாட்டார்கள். அதுவும் பிரதமர் பதவி வகிப்பவருக்கு என்று ஒரு மாண்பு இருக்கிறது. பொதுவெளியில் கண்ணியம் காக்க வேண்டிய அவசியம் அவருக்கு இருக்கிறது. அந்த அத்தனை கண்ணியத்தையும், மாண்பையும் தொலைத்து விட்டு நிற்கிறார் பிரதமர் மோடி .
இந்திய வரலாறு பல்வேறு உரைகளை வழங்கிய பிரதமர்களைப் பார்த்திருக்கிறது. உலக இலக்கியத்தில் இடம் பெற்ற பல்வேறு புத்தகங்களை எழுதி, மக்களைக் கவர்ந்த உலக சுதந்திர உரையை வழங்கிய நேரு எனும் பிரதமரைப் பார்த்திருக்கிறது. மன்னர் குடும்பத்தில் பிறந்தாலும் எளிமையாகவும், பண்பார்ந்த செயல்பாட்டாளராகவும் திகழ்ந்த சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்கைப் பிரதமராகப் பார்த்திருக்கிறோம். கவிநயம் இல்லை எனினும் அறிவியல் நயத்துடன் அய்.நா. சபை, உலக வங்கி, மற்றும் ஆக்ஸ்போர்ட் சபைகளில் முழங்கிய பொருளாதார மேதை மன்மோகன் எனும் பிரதமரைப் இந்திய நாடு பார்த்திருக்கிறது.
சரத்பவார் குறிப்பிட்டது போல, பதவிக்கு ஏற்ற மாண்புடன் பேசாத பிரதமர் மோடியை என்னவென்று சொல்லுவது!
அகில இந்திய காங்கிரஸ் மேனாள் தலைவராகவும், இன்றைய தினம் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் ஒளிரும். ராகுலைப் பார்த்து, பப்பி என்று சொல்லுவதும், சோனியா காந்தியை ஜெர்சி பசு என்று கூறுவது எல்லாம் சொல்பவர்களின் தரத்தைத்தான் காட்டும்.
சாதனைகள் ஏதாவது இருந்தால் சொல்லலாம்; அவையில்லாத நிலையில் ஆத்திரமாகவும், அனாவசியமாகவும் பேசும் நிலை பிரதமர் மோடிக்கு ஏற்பட்டுள்ளது மிகவும் பரிதாபமே!