உத்தரப்பிரதேசத்தில் மேனாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சென்ற கோயிலை ஹிந்துத்துவ அமைப்பினரும் பா.ஜ.க.வினரும் கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மேனாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் கன்னுஜ் மக்களவை தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இந்த தொகுதியில் வரும் 13 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பரப்புரையில் அகிலேஷ் யாதவ் ஈடுபட்டு இருக்கிறார்.
இந்த நிலையில், அகிலேஷ் யாதவ், கன்னுஜ் தொகுதியில் உள்ள சித்தாபீட் பாபா கவுரி சங்கர் மகாதேவ் கோயிலுக்கு சென்று வழிபட்டார். அதன் பிறகு தனது தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். கோயிலில் பூஜைகளையும் அகிலேஷ் யாதவ் மேற்கொண்டார். அகிலேஷ் யாதவ் பூஜை செய்யும் காட்சிகளும் சமூக வலைதளங்களில் பரவின.
அகிலேஷ் யாதவ், கோயிலில் வழிபட்டுவிட்டுச் சென்றதும், கோயில் வளாகத்தை கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான ஒளிப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
இது குறித்து பா.ஜ.க.வினர் கூறுகையில், “அகிலேஷ் யாதவுடன், முஸ்லீம் தலைவர்களும் கோயிலுக்கு வந்தனர். எனவே தான் நாங்கள் கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்து சடங்குகளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது” என்றனர். வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும் நாகூர் தர்காவுக்கும் ஹிந்து மதத்தவர்கள் போவதில்லையா?
அதேபோல, பாஜகவை சேர்ந்த நகர தலைவரான ஷிவேந்திர குமார் குவால் என்பவர் கூறும் போது, “சில முஸ்லீம்களும், அவருடன் வந்தவர்களும் தூய்மை யில்லாமல் இருந்தனர். ஆகவே நாங்கள் கோயிலை தூய்மைப்படுத்தும் நிலை ஏற்பட்டது
அகிலேஷ் யாதவ் கோயிலுக்குள் வருவதற்கு எங்க ளுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. இந்துக்கள் அல்லாத வர்களுக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதி கிடையாது” என்றார்.
இதனிடையே, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த அய்.பி. சிங் இவ்விவகாரம் குறித்து கூறுகையில்,
“அகிலேஷ் யாதவ் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந் தவர் என்பதால்தான் பாஜக கோயில் வளாகத்தை கங்கை நீரால் சுத்தம் செய்துள்ளது. இதற்கு முன்பாக சாமியார் ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்னர் பசுமாடு, கங்கை நீர் மற்றும் சிறப்பு யாகங்களை 12 நாள் செய்து முதலமைச்சர் இல்லத்துக்கு தீட்டுக் கழித்த பிறகுதான் அவர் அங்கு சென்றார்.
அகிலேஷிற்கு முன்பு மாயாவதி முதலமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிற்படுத்தப் பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் கோயிலில் வழிபட உரிமை இல்லை எனப் பாஜக நினைக்கிறது. ஆகவே இந்த முறை பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர், எளிய மக்கள் என அனைவரும் இணைந்து பாஜகவை வெளியேற்றுவார்கள்” என்று கூறினார்.
பீகாரில் நிதீஷ்குமார் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகி பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஜித்தாராம் மாஞ்சி முதலமைச்சரானார். அவர் ஒரு கோயிலுக்குச் சென்று வந்த நிலையில், அவர் வெளியேறிய பிறகு, அக்கோயிலைத் தீட்டுக் கழித்தனர். அதனைக் கடுமையாக சினத்துடன் விமர்சனம் செய்தார் ஜித்தாராம் மாஞ்சி.
இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் சம்பூர்னானந்து சிலையைத் திறந்தபோது, “ஒரு கீழ் ஜாதி ஜெகஜீவன் ராம், உயர்ஜாதி சம்பூர்னானந்து சிலையை எப்படி திறக்கலாம்?” என்று காசி பல்கலைக்கழக பார்ப்பன மாணவர்கள், கங்கை நீரைக் கொண்டு வந்து, சம்பூர்னானந்து சிலையைக் கழுவவில்லையா?
அது குறித்து பாபுஜி அவர்கள் சென்னை மயிலாப்பூர் மாங்கொல்லையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் குமுற வில்லையா?
“பெரியார் பிறந்த மண்ணிலிருந்து இதனைக் கண்டிக்கிறேன்” என்று அனல் பறக்கப் பேசியதுண்டே!
அண்ணல் அம்பேத்கரும், மவுண்ட்பேட்டனும் பூரி ஜெகந்நாதர் கோயிலுக்குச் சென்றபோது, கிறிஸ்தவரான மவுண்பேட்டனை அனுமதித்த கோயில் நிர்வாகம், அண்ணல் அம்பேத்கரை அனுமதிக்கவில்லையே!
பூரி ஜெகநாதர் கோயிலிலும் அஜ்மீர் பிர்மா கோயிலிலும் மேனாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கும் மற்றும் அவர் குடும்பத்தாருக்கும் இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமையை மறக்க முடியுமா?
இன்றைய குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதால் நாடாளுமன்ற கட்டட அடிக்கல் நாட்டு விழாவுக்கும், திறப்பு விழாவுக்கும் குறைந்தபட்ச மரியாதையாதைக்காவது அழைப்பிதழ் கூடக் கொடுக்கவில்லையே!
இதுதான் அர்த்தமுள்ள ஹிந்து மதம் – பிஜேபி அமைக்க விரும்பும் ஹிந்து ராஜ்யம் – ராம ராஜ்யம் – எச்சரிக்கை! எச்சரிக்கை!!