பா.ஜ.க. ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது? வந்தால் இதுதான் இந்தியாவின் கடைசித் தேர்தல்!

சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் தமிழர் தலைவர் வழிகாட்டும் உரை!

சென்னை.ஏப்.10. இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தி.மு.க. வேட்பாளர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து வாக்குச் சேகரித்தார்.
தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ’இந்தியா’ கூட்டணியில் தென்சென்னை தொகுதி வேட்பாளராக தி.மு.க. சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் பூவிருந்தவல்லி சாலை, கங்கையம்மன் கோயில் அருகில் நேற்று (9.4.2024) மாலை 5:00 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தென் சென்னை திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் சைதை மதியழகன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்க, மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தி.மு.க. சைதை கிழக்குப்பகுதிச் செயலாளர் துரைராஜ் எம்.சி., தி.மு.க. தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், தி.மு.க. வட்டக் கழகச் செயலாளர்கள் மோகன்குமார், ராதாகிருஷ்ணன், ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன், தென் சென்னை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முத்தழகன், வி.சி.க. மாவட்ட அமைப்பாளர் ஜேக்கப், சைதை தொகுதி பார்வையாளர் கோவி. லெனின், தி.மு.க. சென்னை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் குணசேகரன், சென்னை துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்துச் சிறப்பித்தனர்.

திராவிடர் கழகம் சார்பில் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், தென்சென்னை மாவட்டச் செயலாளர் பார்த்தசாரதி, தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ,கோபால் ஆகியோர் முன்னிலை வகித்தும், சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வே. பாண்டு, பெரியார் பெருந்தொண்டர் நீலாங்கரை வீரபத்திரன், தங்கமணி, தனலட்சுமி, வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் அன்புச்செல்வம் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டும் நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

தி.மு.க. தென் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன், தி.மு.க. சைதை கிழக்குப்பகுதிச் செயலாளர் துரைராஜ், தென் சென்னை காங்கிரஸ் மாவட்டத் தலைவர் முத்தழகன், வி.சி.க. மாவட்ட அமைப்பாளர் ஜேக்கப், சைதை தொகுதி பார்வை யாளரும், தி.மு.க. தொழில்நுட்ப அணியின் ஆலோசகருமான கோவி.லெனின், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க. பொருளாளர் செந்திலதிபன் ஆகியோர் முன்னிலை வகித்தவர்களில் உரையாற்றியவர்கள் ஆவர். ஆசிரியர் பேசுவதற்கு முன்னதாக பரப்புரைக்காக தயார் செய்யப்பட்ட நான்கு புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்தியா கூட்டணிக் கட்சியின் பொறுப் பாளர்கள் ஆசிரியரிடம் உரிய தொகை கொடுத்து புத்தகங் களை பெற்றுக்கொண்டனர். இறுதியாக ஆசிரியர் உரை யாற்றினார்.

அவர் தமது உரையை, “கண்ணுக்கெட்டிய தொலைவு வரை மக்கள் திரண்டு இருப்பதைக் காணும் போது, நம்முடைய வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது” என்று உற்சாகத்துடன் தொடங்கி, அந்த உற்சாகத்தை மக்களிடமும் கடத்தினார். தொடர்ந்து அவர், “இந்தியாவில் இதுவரை 17 பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. அவற்றையெல்லாம் விட, 18 ஆவது பொதுத் தேர்தல் மிக முக்கியமானது. காரணம், இந்தத் தேர்தல்தான் ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்காக நாம் களத்தில் நிற்கிறோம். நமக்கு எதிர் அணியில் நிற்கும் பா.ஜ.க., அதன் கூட்டணி ஏன் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று சொல்கிறோம்?. என்று கேள்வி கேட்டு, அவர்கள் மீண்டும் வெற்றி பெற்றால், இந்தியாவில் இதுதான் கடைசி தேர்தல்” என்று பதில் கூறினார். மேலும் அவர், பா.ஜ.க.வை ஏன் தேர்ந்தெடுக்கக் கூடாது என்பதற்கான பல்வேறு செய்திகளைத் தரவுகளுடன் கூறி, தி.மு.க. சார்பில் தென் சென்னை வேட்பாளராக போட்டியிடும் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து தனது உரையை நிறைவு செய்தார். இறுதியாக ஜாபர்கான் பேட்டையைச் சேர்ந்த கழகத் தோழர் சரவணன் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார், தொடக்கத்தில் மோடி அரசின் அவலங்களை அம்பலப்படுத்தி கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *