இங்கிலாந்து நாட்டில் உள்ள நாட்டிங்ஹாம் (Nottingham) பல்கலைக் கழகத்தில் ஒரு அறை யின் கதவில் “கருந்துளை ஆய்வுக் கூடம்” என்று எளிமை யாக எழுதப் பட்டிருப்பதை காணலாம்.
அந்த அறையின் உள்ளே பெரிய உயர் தொழில்நுட்ப தொட்டியில் அண்டவெளி உண்மை நிகழ்வுகளை ஆளும் இயற்பியலின் கோட்பாடுகளை கன நேரம் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்த ஆய்வுக்கூடம் பிரபஞ்சத்தின் அபூர்வமான அணுக முடியாத ஒரு சில சூழல்களுக்கும் பூமியில் திரவங்கள் பற்றிய கணிதவியல் விளக்கங்களுக்கும் இடையில் இருக்கும் விசித்திரமான, இணையான தொடர்பை நிரூபித்த, ஒப்புமை ஈர்ப்பு துறையில் புகழ்பெற்ற ஆய்வாளர் பேராசிரியர் சில்க் வொயின்ஃபெர்ட்னரால் (Prof. Silke Weinfurtner) நடத்தப்படுகிறது.
“கருந்துளைகள் என்று கேட்டவுடன் அவை புதிரானவை என்ற சிந்தனை பலருக்கும் உள்ளது. கருந்துளைகளைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் பலவும் இன்றும் மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாத புதிர்களாகவே உள்ளன. அவற்றில் பலவும் வித்தியாசமானவை, விசித்திரமானவை, வினோதமானவை” என்று வொயின்ஃபெர்ட்னர் கூறுகிறார்.
முதல் அண்டவெளி கோட்பாட்டை உருவாக்கிய புகழ்பெற்ற வானியலாளர் ஹாக்கிங் அவர்களின் பெயரால் வழங்கப்படும் ஹாக்கிங் கதிரியக்கம் (Hawking radiation) பற்றி முன்பு இந்த ஆய்வுக்குழுவினர் இதே போன்ற தொட்டி அமைப்பை அமைத்து ஆராய்ந்தனர். ஹாக்கிங் கதிரியக்கம் என்பது கருந்துளைகள் மின்காந்தக் கதிர்களை வெளியிட்டு மறைந்து போகும் செயல்முறையைக் குறிக்கிறது.
முந்தைய ஆய்வில் பயன்படுத்தப்பட்டதை விட ஆய்வுக் குழுவினர் இப்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய தூண்டு கருவியை (stimulator) பயன்படுத்தினர். இது கருந்துளைகளின் நடத்தை பற்றி விரிவாக அறிய உதவும் என்று நம்பப்படுகிறது. “ஆய்வின் முடிவில் கிடைக்கும் விடைகள் மிக அழகான அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும்” என்று ஆய்வுக் குழுவினர் கூறுகின்றனர்.
கருந்துளைகள் நிரந்தரமாக கதிர்களை உமிழ்கின்றனவா அல்லது முடிவில்லாத காலத்துக்கு அவை நிலையாக செயல்படுகின்றனவா போன்ற புதிர்களுக்கு இதன் மூலம் விடை கிடைக்கும் என்று கருதப்படுகிறது. கணிதவியலின் கருத்துப்படி, விவரிக்க கடினமான விண்வெளி காலவெளி வளைவில் (curving of space time) ஒரு ப்ளாக் துவாரத்தில் இருந்து திரவ ஓட்டத்தின் பிரதிபலிப்பு (flow of fluid down a plughole mimics) கருந்துளையின் அதி தீவிர காந்தப்புலத்தால் ஏற்படும் விளைவு பற்றி ஆராய்வதே இந்த ஆய்வின் முதன்மை நோக்கம்.