தமிழ்நாடு அரசு அமைத்த உயர்நிலைக்குழு பரிந்துரை!
சென்னை, பிப். 20 – சட்டப்பேரவையால் முன்மொழி யப்படுவர்களை மட்டுமே ஆளுநராக நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட உயர் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.
மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய – மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு களை மேம்படுத்தவும்உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழுவின் அறிக்கையை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். ஆய்வறிக்கையில், நாடாளுமன்றத்தில் மேற்கொள்ளப்படும் அரசமைப்புச் சட்டத்திருத்தங்கள் அனைத்துக்கும் மூன்றில்இரு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
மும்மொழிக் கொள்கைக்கு மாற்றாக ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியை உள்ளடக்கிய இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதுடன், கல்வியில் மாற்று மொழியைத் திணிக்கக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களால் ஒப்புதல் அளிக்கப்பட்ட மூன்று பேரில் ஒருவரை ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் செயலாற்றும் வகையில் அரசமைப்புச் சட்டப்பிரிவு 155-அய் திருத்த வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. ஆளுநருக்கு அய்ந்து ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க இயலாத வகையில் பதவிக்காலத்தை வழங்க வேண்டும். ஆளுநராக பதவிவகித்த பிறகு, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் பதவியைத் தவிர வேறு பொறுப்புகளை வகிக்க இடமளிக்கக் கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆளுநரை சட்டப்பேரவை தீர்மானம் மூலமாக நீக்க வழிவகை செய்ய வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் காலக்கெடு நிறைவடைந் தால் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கருதவும் சட்டத்திருத்தம் மேற் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையில் பெரும்பான்மை இல்லாதபோது அமைச்சரவை ஆலோசனையின் பேரிலேயே சட்டப் பேரவையைக் கூட்ட வேண்டும். அதேபோன்று சட்டப்பேரவையை அமைச்சரவை ஆலோசனையின் பேரிலேயே கலைக்க வேண்டும். மாநில அரசையோ, சட்டப்பேரவையையோ பொது வெளியில் ஆளுநர் விமர்சிக்கக்கூடாது. பேரவையில் இயற்றப்பட்ட சட்டத்தைத் தடுக்க ஆளுநரோ அல்லது குடியரசுத் தலைவரோ தங்களது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தக் கூடாது. நாடாளுமன்றத் தேர்தல்,குடியரசுத் தலைவர் தேர்தல் துணைத் தேர்தலை மட்டும் இந்திய தேர்தல் ஆணையம் நடத்த வேண்டும். மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களை மாநில தேர்தல் ஆணையம் நடத்துவது அவசியம் என்றும் பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத் தொகுதி மற்றும் பேரவைத் தொகுதி மறுவரையறைகளை மேற்கொள்ள மத்திய, மாநில ஆணையங்கள் அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கல்வி, தொழில்நுட்பக் கல்வி உள்பட கல்வியை பொதுப் பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவதுடன், மாநிலப் பல்கலைக்கழக வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநரை விடுவித்துநடுநிலையான ஒருவரை அப்பதவிக்கு நியமிக்கவகை செய்ய வேண்டும் என்று, முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்டக்குழுபரிந்துரைகளை வழங்கியுள்ளது.
