தஞ்சாவூர், நவ. 8- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் தஞ்சாவூர் கல்விச் சுற்றுலாவில் உற்சாகமாக கலந்து கொண்டனர். இச்சுற்றுலா கடந்த 31.10.2025 அன்று நடைபெற்றது.
மாணவர்கள் முதலில் தஞ்சா வூரில் உள்ள தேசிய உணவு தொழில் நுட்ப நிறுவனம் (NIFTEM) சென்றனர். அங்கு தொழில்முனைவு மற்றும் மேலாண்மை மய்யத்தில் நடைபெற்ற விளக்கவுரையில் மாணவர்கள் உணவு தொழில்நுட்ப வளர்ச்சி, உணவுப் பாதுகாப்பு மற்றும் தொழில் தொடங்கும் வாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து அவர்கள் உணவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு, பாரம்பரிய உணவு முறைகள், சமைப்புத் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நவீன உணவு தயாரிப்பு முறைகள் குறித்த நுணுக் கங்களை அறிந்தனர்.
செப்புக் கலைக் கூடம்
பின்னர் மாணவர்கள் தஞ்சா வூரின் பெருமையான சரஸ்வதி மகால் நூலகம், சிற்பக் கலைக் கூடம், செப்புக் கலைக் கூடம் மற்றும் அருங்காட்சியகத்திற்குச் சென்றனர். அங்கு தமிழ்நாட்டின் தொன்மையான வரலாறு, கலை, கைவினை மற்றும் இலக்கியப் பாரம்பரியங்கள் குறித்த அரிய தகவல்களை நேரில் கண்டு ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.
ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடம்
இறுதியாக மாணவர்கள் தஞ்சாவூர், வல்லத்தில் அமைந்துள்ள பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ரோபோடிக்ஸ் ஆய்வுக்கூடத்திற்குச் சென்று, நவீன ரோபோட்களின் செயல்பாடுகள் மற்றும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகளை நேரடியாக கண்டு அனுபவித்தனர்.
இந்த கல்விச் சுற்றுலா மாணவர் களுக்கு அறிவும், அனுபவமும் ஒன்றிணைந்த ஒரு சிறப்பான கற்றல் வாய்ப்பாக அமைந்தது. சுற்றுலா முழுவதும் ஆசிரியர்கள் மாணவர்களை வழிநடத்தி, பயனுள்ள விளக்கங்களை வழங்கினர்
