சிறப்புத் தீர்மானம்

நமது ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, கடலூரில் தாம் மேற்கொண்டு சிறப்பாகப் பணியாற்றிய வழக்குரைஞர் தொழிலை சற்றும் தயக்கமின்றி விடுத்து, விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றார். (10.8.1962)
வேறு எந்த சந்தர்ப்பத்திலும் வேறு யாருக்காகவும் இந்த அளவுக்குப் பெருமிதமாகக் குறிப்பிடாத வகையில் "விடுதலை, பத்திரிகையை வீரமணி அவர்களின் ஏகபோக ஆதிக்கத்தில் ஒப்படைத்து விட்டேன். (விடுதலை 6.6.1964) என்று கையொப்பமிட்டு அறிவித்தார் தந்தை பெரியார்.

உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி, வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன். (விடுதலை - 10.8.1962) என்று தந்தை பெரியார் அறிக்கை விடுத்தார் என்றால், நமது ஆசிரியர் அவர்களின் ஒப்புவமையற்ற பொதுத்தொண்டான பெரும்பணியின் மாட்சியை அறிந்துகொள்ள முடியும்.
இன்று விடுதலை நமக்குச் கிடைத்திருக்கிறது என்றால் அதற்கு முழுமுதற் காரணம் நமது மரியாதைக் குரிய ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்தாம்.

விடுதலை தமிழினத்திற்குக் கிடைக்காது போயிருந் தால், அதன் விளைவு எவ்வளவு கடுமையானதாக இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்ப்பதற்கே நெஞ்சம் படபடக்கிறது - இதயவோட்டமே நின்று விடும் நிலை ஏற்படுகிறது!
தமிழுலகம் அதற்காக நமது ஆசிரியர் அவர்களுக்கு மிகவும் நன்றிக் கடன்பட்டுள்ளது.

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகியோரின் மறைவிற்குப் பிறகு, விடுதலையை எட்டு பக்கங்களாக விரிவுபடுத்தியதோடு அல்லாமல், திருச்சியிலும் இன்னொரு பதிப்பையும் (17.9.2007) தொடங்கி, நவீன கணினி அச்சுக்கோப்பு, நவீன அச்சு இயந்திரங்கள் ஏற்பாட்டின் காரணமாக, வணிக ரீதியாக நடத்தப்படும் ஏடுகள், இதழ்களுக்கு இணையாக புதுப் பொலிவோடு புத்தம் புதிய மணமாய் நாளும் வெளி வந்துகொண்டு இருக்கிறது. இணையதளம் மூலம் உலகெங்கும் வாசகர்களை சிறப்பாக - ஆர்வமாக ஈர்க்கும் நிலையை எட்டியுள்ளது விடுதலை.
விடுதலை ஆசிரியராக தாம் பொறுப்பேற்ற ஆண்டு முதல் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா விடுதலை மலர் என்னும் வரலாற்று அறிவுப் பெட்டகத்தை ஒவ்வொரு ஆண்டும் படைத்து வருகிறார்.

அத்தகைய நமது ஆசிரியர் பெருமகனார் மானமிகு கி. வீரமணி அவர்கள் விடுதலைக்கு ஆசிரியர் பொறுப் பேற்று 2012ஆம் ஆண்டில் அய்ம்பதாண்டு காலம் ஆகிறது.

இப்படி ஆசிரியர் பொறுப்பில் பொன்விழா காணும் ஒரே தலைவர் நமது ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான். 50 ஆண்டு காலம் ஒரு ஏட்டுக்கோ, இதழுக்கோ ஆசிரியராக இருப்பது என்பது நமது ஆசிரியர் அவர்களுக்கு மட்டுமே உரிய தனிப்பெரும் சாதனையாக அமைந்திருக்கிறது. அதுவும் எதிர்நீச்சல் போடும் புரட்சிகரமான ஒரு ஏட்டுக்கு ஆசிரியராக இருந்து சாதனை படைப்பது என்பது சாதாரணமான தன்று.

விடுதலை என்னும் பகுத்தறிவு - இனமான - சமதர்ம - சமத்துவ - சமூகநீதி - பாலியல் நீதி இவற்றுக்காகப் போராடும் முற்போக்கு போர்வாள் மூலம் சாதித்துக் கொடுத்திருக்கும் வெற்றியின் குவியல்கள் அசாதாரண மானவை!
அத்தகு சாதனைமிகு மானமிகு ஆசிரியருக்கு அவர்களின் தொண்டுக்கு எந்த வகையிலும் இணையாக கைம்மாறு செய்ய முடியாது என்பது உண்மையே!

எடைக்கு எடை தங்கம் கொடுத்ததை விட வேறு என்ன நம்மால் செய்ய முடியும் என்ற கேள்வி எழலாம். அந்தத் தங்கம் டில்லி பெரியார் மய்யமாக தகத்தகாய சூரியனாக ஜொலிக்கிறது.

அந்தப் பரிசையும் தாண்டி, நம்மால் சாதித்துக் கொடுக்க முடிவது ஒன்று இருக்கவே செய்கிறது. அதுதான் 50 ஆண்டு விடுதலை ஆசிரியர் பணிக்கு நாம் அளிக்கும் விடுதலை சந்தாக்கள் ஆகும். நமது ஆசிரியர் அவர்கள் முழு மன நிறைவு அடைவது என்பது இதன் மூலமாகத்தான் இருக்க முடியும்.

அந்த இமாலய முயற்சியைக் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் மேற் கொண்டால் நிச்சயமாய் சாதித்துக் காட்ட முடியும்.
2012 ஆண்டுக்குள் பல தவணை களாக 50 ஆயிரம் சந்தாக்களை திரட்டித் தருவது, அதற்காக ஒவ்வொரு நொடி யையும் பயன்டுத்தி திட்டமிட்டவகையில் உழைப்பது - சாதிப்பது என்ற சூளுரையை திராவிடர் கழகப் பொதுக்குழு மேற்கொள் கிறது. தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணிமுடிப்போம்!


முன்மொழிந்தவர் : கலி. பூங்குன்றன், பொதுச் செயலாளர்

திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கலி. பூங்குன்றன் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை அனைவரும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி மிகுந்த உணர்ச்சியுடன் ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத் தனர். இந்தத் தீர்மானத்தின்மீது உரை யாற்றிய கழகத் தோழர்கள் மிகுந்த ஆர்வத் துடன், எப்பாடு பட்டேனும் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை சேர்த்தே தீருவது என்றும் 50 ஆயிரம் விடுதலை சந்தாக்களை சேர்ப்பது மூலம் தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகள், இலட்சியங்கள் மக்கள் மத்தியில் சிறப் பாகச் சேரும் - சமுதாய மாற்றத்துக்குப் பெரும் துணை புரியும் என்று தோழர்கள் எடுத்துரைத்தனர்.