 |
வீரமணி அவர்கள் எம்.ஏ.பி.எல். பட்டம் பெற்றவர். நல்ல கெட்டிக்காரத் தன்மையும் புத்தி கூர்மையும் உள்ளவர். அவர் எம்.ஏ.பி.எல். பாஸ் செய்து வக்கீல் தொழிலில் இறங்கியவுடன் மாதம் ரூ. 300, ரூ. 400 வரும்படி வரத்தக்க அளவுக்கு தொழில் வளர்ந்ததோடு கொஞ்ச காலத்திலேயே மாதம் ரூ. 500, 1000 என்பதான வரும்படி வரும் நிலையில் தொழில் வளம் பெற்றுவரும் நிலையைக் கண்டவர். இந்த நிலையில் அவர் ஒரு சாதாரண ஏழைக்க் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும் இருந்துவந்தவர். இந்த நிலையில் சுயநலமில்லாது எவ்வித பொருள் ஊதியத்தையும் கருதாமல் பொதுத் தொண்டு செய்ய ஒருவர் வந்தார் என்றால், இதுபோல மற்றொருவர், வந்தார் வருகிறார் வரக்கூடும் என்று உவமை சொல்லக்கூடாத ஒரு மாபெரும் காரியம் என்றே சொல்லவேண்டும். அப்படிப்பட்ட ஒருவரை நாம் தக்கபடி பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அது நம்முடைய அறியாமையாகவே முடியும் என்ற எண்ணத்தின் மீதே அவரை நம் இயக்கத் தலைமைப் பிரசாரகராகவும், நமது விடுதலை ஆசிரியராகவும் பயன்படுத்திக் கொள்ள முன்வந்து அவருடைய ஏகபோக ஆதிக்கத்தில் விடுதலையை ஒப்படைத்து விட்டேன்.
விடுதலை பத்திரிகையை நிறுத்திவிடாததற்கு இதுதான் காரணம்.இனி விடுதலைக்கு உண்மையான பிரசுரகர்த்தாவாகவும் ஆசிரியராகவும், வீரமணி அவர்கள்தான் இருந்துவருவார்.
- தந்தை பெரியார்(விடுதலை-07.06.1964)
உண்மையைச் சொல்கிறேன். தோழர் வீரமணி இந்த முழுநேரத் தொண்டிற்கு இசையாதிருந்தால் தினசரி விடுதலையை நிறுத்தி வாரப் பத்திரிகையாக திருச்சியில் அல்லது ஈரோட்டில் நடத்த முடிவு செய்திருந்தேன்.தோழர் வீரமணி அவர்கள் நான் உள்பட பலர் வேண்டுகோளுக்கும், விருப்பத்திற்கும் இணங்க, கழகத்திற்கு முழு நேரத் தொண்டராய் இருக்கத் துணிந்து, பத்திரிகைத் தொண்டையும் பிரச்சாரத் தொண்டையும் தன்னாள் கூடிய அளவு ஏற்றுக் கொண்டு, தொண்டாற்ற ஒப்புக்கொண்டு குடும்பத்துடன் சென்னைக்கே வந்துவிட்டார். இது நமது கழகத்திற்கு கிடைக்க முடியாத பெரும் நல்வாய்ப்பு என்றே கருதி திரு. வீரமணி அவர்களை மனதார வரவேற்பதோடு கழகத் தோழர்களுக்கும் இந்த நற்செய்தியைத் தெரிவித்துக்கொள்கிறேன். தந்தை பெரியார், (விடுதலை - 10.08.1962)