தமிழில் எழுதி சாதித்தேன்
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

தமிழில் எழுதி சாதித்தேன்

ஆங்கிலம் நன்கு அறிந்தவர்கள் மட்டும்தான் யூ.பி.எஸ்.சி.யை வெல்ல முடியும் என்றில்லை. தமிழில் எழுதியும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் அ.தினேஷ்குமார். இவர் தமிழில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதி 2012 பேட்ச்சின் உ.பி. மாநிலப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

விடாமுயற்சி நிச்சயம் வெற்றி

கரூரில் உள்ள சோமூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். அவ்வூரைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங் கியவர் கரூரில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப் பிரிவில் பிளஸ் டூ முடித்தார். பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 1998-ல் பட்டம் பெற்றார். தமிழ்வழிக் கல்வியில் பிளஸ் டூ வரை படித்தவருக்கு ஆங்கிலத்தில் பொறியியல் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபோது நாளிதழ்களைப் படித்து யூ.பி.எஸ்.சி. தேர்வு பற்றி தெரிந்துகொண்டார். சென்னையில் உள்ள தமிழக அரசு அண்ணா பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் தனக்கு புலமை குறைவு என்பதால், தமிழிலும் யூ.பி.எஸ்.சி. எழுதலாம் எனும் வாய்ப்பைப் பயன்படுத்த முடிவெடுத்தார். அப்பயிற்சி நிலையம் நடத்திய நுழைவுத் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அப்போது யூ.பி.எஸ்.சி. வெல்வோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சாதாரணமாக எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைகளை விடக் கூடுதலாகப் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 35 வயது வரை யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் வாய்ப்பை முழுவதுமாக விடா முயற்சியோடு பயன்படுத்தினார். 1999 முதல் 2011 வரை தொடர்ந்து 10 முயற்சிகளையும் எடுத்தார். ஒன்பதாவது முயற்சியில் அய்.ஆர்.எஸ். (அய்.டி.) பணி கிடைத்தது. இதற்காக நாக்பூரில் பயிற்சி எடுத்துக்கொண்டே தன்னுடைய இறுதி வாய்ப்பில் அய்.ஏ.எஸ். ஆனார்.

படித்தது கிராமப்புறப் பள்ளிகள்தான் என்றாலும் அங்கு அருமையான ஆசிரியர்கள் எனக்கு வாய்த்தார்கள். சிறுவயது முதலே வழியில் கிடைக்கும் செய்தி தாள்களின் துண்டுகளையெல்லாம் பொறுக்கிப் படிப்பேன். இதனால் என்னுடைய பட்டப் பெயரே பேப்பர் பொறுக்கிதான். வழக்கமாக, யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்கள் அதிகபட்சமாக நான்கு முறை முயற்சித்தும் வெல்ல முடியாமல் போனால், மன அழுத்ததில் பின்வாங்கிவிடுகிறார்கள்.

அதற்கு அவர் களுடைய குடும்பச் சூழலும் காரணமாக இருக்கலாம். ஆனால், நான் விடாமல் முயன்றதற்கு முக்கியக் காரணம் என்னுடைய அப்பாதான். அவர்தான் என்னுடைய முன்மாதிரி. ஏழ்மையில் வாடிய எங்கள் குடும்பத்தைத் தன்னுடைய கடின உழைப்பால் தூக்கி நிறுத்தினார் அவர் எனப் பெருமிதம் கொள்கிறார் தினேஷ்குமார்.

முயற்சிகளுக்கு இடையே செய்த பணிகள்

தன் 10 முயற்சிகளுக்கு இடையே தினேஷ்குமார் எழுதிய தேர்வில் 1999 டிசம்பரில் சரக்கு ரயில் பெட்டிகளின் கார்டு பணி கிடைத்துள்ளது இதில் இரு ஆண்டுகள் ஜோலார்பேட்டையில் பணியாற்றியுள் ளார். பிறகு, குரூப் டூவிலும் வென்று சென்னை தலைமை செயலகத்தின் சுற்றுலாத்துறையின் உதவி பிரிவு அலுவலராக 7 ஆண்டுகள் இருந்துள்ளார். பிறகு மீண்டும் ஒரு குரூப் டூ தேர்வு எழுதி வென்றவர் தமிழக அரசின் பதிவு அலுவலகத்தில் சார் பதிவா ளராகவும் பணியாற்றி உள்ளார்.

இதுவன்றி, மத்திய பாதுகாப்புப் படையின் யூபிஎஸ்சிக்கான தேர்வில் வென்று சி.ஆர்.பி.எப்பில் உதவி கமாண்டண்ட் பணி கிடைத்தது. ஆனால், அவர் இதில் சேரவில்லை. அய்ஏஎஸ் பதவி கிடைத்த வுடன் செய்த பணிகள் மெயின்புரியில் பயிற்சி இணை ஆட்சியர், ஆக்ரா மற்றும் லலித்பூரில் துணை ஆட்சியர் பணிகள், தற்போது சித்ரகுட் மாவட்டத்தில் முதன்மை வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்.

தமிழால் கிடைத்த பலன்

தமிழ்வழிக் கல்வி பயின்று வெளி உலகைச் சந்திக்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலத் திறன் குறை வாக இருப்பது உண்மைதான்.

அதற்காக ஆங்கிலத்தில் எழுதினால் தவறாகிவிடும் எனப் பயந்து யூ.பி.எஸ்.சி. எழுதாமல் இருக்கக் கூடாது. ஆங்கிலத்தில் படித்து அதைத் தமிழில் புரியும்படி எழுதினாலே வெற்றி நிச்சயம். நேர்முகத் தேர்வையும் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சந்திக்கலாம். மொழி வளமையைவிட நம்முடைய அறிவாற்றலுக்கும் புரிதலுக்கும்தான் அதில் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். பல பாடப் பிரிவுகளுக்குத் தமிழில் உகந்த கலைச்சொற்கள் இல்லை.

அத்தகைய வார்த்தைகளை நாம் ஆங்கிலத் திலேயே எழுதலாம். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் குறிப்பிடும்போது அதன் ஆங்கில வார்த்தையை அடைப்புக்குறிகளுக்குள் எழுதினால் உகந்த மதிப்பெண் கிடைத்துவிடும். யூ.பி.எஸ்.சி. தேர்வைத் தமிழில் எழுதும் மாணவர்களைவிடப் பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வட மாநிலத்தவர்கள் இந்தியில் எழுதுகிறார்கள்.

வெற்றிக்குப் பிறகு வேலை செய்யும்போது ஆங்கிலம் சரளமாகப் பேசியாக வேண்டுமே என்றும் அஞ்சத் தேவை இல்லை. இதற்கான பக்குவமும் அறிவும் அனுபவத்தில் வளர்ந்துவிடும்.

தவறைத் தாமதமாக உணர்ந்தேன்!

ஒவ்வொரு முயற்சியிலும் செய்த தவறுகளைக் கண்டுபிடிக்கவே கிட்டத்தட்ட அய்ந்து ஆண்டுகள் பிடித்தன. நேர்முகத் தேர்வைச் சந்திப்பதிலும் பல சங்கடங்கள் ஏற்பட்டதைத் தாமதமாகத்தான் உணர்ந் தேன். கடைசி முயற்சிக்கு முன்னதாகச் சென்னையின் மனிதநேயப் பயிற்சி மய்யத்திலும் டெல்லி டைர க்ஷன்ஸ் மய்யத்திலும் எடுத்த பயிற்சி கைகொடுத்தது. தமிழுடன் சேர்த்துப் புவியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதுதான் தெரிந்தது புவியியலுக்குத் தமிழில் அதிகமான பாடப் புத்தகங்கள் இல்லை என்பது. அதனால் புவியியலை ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதாயிற்று.

இதற்குச் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் வெளியிடப் பட்டிருந்த கலைச்சொல் அகராதிகள் உதவின. எனினும், அதில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னால் புதிய சொற்கள் சேர்க்கப்படாதது பெரும் குறையாக இருந்தது.

ஆங்கிலத்தில் படித்துத் தமிழில் குறிப்புகள் எடுத்தேன். இதனால் சற்றுக் கூடுதலான நேரம் செலவானது. அதிக முயற்சி எடுப்பவர்கள் மனஅழுத் தத்துக்கு ஆளாகாமல் தோல்வியைத் தள்ளி நின்று பார்த்து நிதானமாகச் செயல்பட வேண்டும்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner