இளைஞர்

இளைஞர்

வெற்றிக்கு அடிப்படை இலக்கு!

வாழ்க்கையில் எதையும் வெல்ல இலக்கு முக்கியம் என்பதைத் தன் அனுபவத்திலிருந்து கண்டறிந்தவர் எஸ்.இராஜேஷ் அய்.பி.எஸ். உத்தரப் பிரதேசத்தின் 2011 பேட்ச் அய்.பி.எஸ். அதிகாரியான இவர் ஆக்ரா, ஜான்சி, லக்னோ ஆகிய நகரங்களில் ஏ.எஸ்.பி.யாகவும், கான்பூர் நகர எஸ்.பி.யாகவும் இருந்தவர். தற்போது அலிகரில் உள்ள பி.ஏ.சி.  சிறப்புப் படையின் கமாண்டராகப் பதவி வகிக்கிறார்.

இராஜேஷ் நான்காம் வகுப்பு படிக்கும்போது வகுப்பில் ஆசிரியர், படித்து என்னவாகப் போகிறீர்கள்? எனக் கேட்டார். எல்லோரும் வெவ்வேறு பதில் சொல்ல இராஜேஷ் மட்டும் அய்.ஏ.எஸ். ஆக விரும்புவதாகச் சொன்னார். இந்தக் கல்வியின் அர்த்தம் தெரியுமா உனக்கு? எனக் கேட்க தெரியாது! என்னும் பதில்தான் குட்டிப் பையனிடமிருந்து வந்தது.

இந்தத் துறையில் வெற்றி பெறுவது கஷ்டம் என ஆசிரியர் சொல்லக் கேட்டுச் சோர்ந்துபோனது சிறுவனின் மனம். சரி, மருத்துவராகலாம் என முடிவெடுக்க அதுவும் நுழைவுத் தேர்வில் நூலிழையில் எட்டாமல் போனது. பிளஸ் டூ முடித்து கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னால ஜியில் எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் படித்தார்.

கல்லூரி நாட்களில் எனது சொந்த ஊரான கரடிக் குளம்,கோவில்பட்டிக்குச் சென்றபோது ஒரு நாள் பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையை எதேச்சையாக வாசித்தேன். கிராமப் பெண்களின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சியர் முருகானந்தம் அய்.ஏ.எஸ். எழுதிய அந்தக் கட்டுரையைப் படித்து எங்களுடைய கிராமத்தைச் சேர்ந்த பல பெண்கள் சுயதொழில் செய்யத் தொடங் கினார்கள். ஒரு அய்.ஏ.எஸ். அதிகாரியால் ஏற்படுத்த முடிகிற தாக்கத்தைக் கண்டு ஆச்சரியப்பட்டேன் என்கிறார் இராஜேஷ்.

விடுமுறை நாட்களில் சொந்தக் கிராமத்து பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவசமாக டியூஷன் எடுத்தார். அப்போதுதான் எங்கள் ஊர் பிள்ளைகளுக்குப் போதுமான விழிப்புணர்வு இல்லாமல் மிகவும் பின்தங்கியிருப்பது கண்கூடாகத் தெரிந்தது. இந்த நிலையை மாற்ற நிச்சயமாக நானும் மாவட்ட ஆட்சியாளராக விரும்பினேன் என்கிறார்.

ஆனால், கிராமம் வரும்போது மட்டுமே இந்த உணர்வு மேலெழுந்தது. கல்லூரி திரும்பியதும் நீர்த்துப்போனது. இதனிடையே,மதுரையைச் சுற்றியுள்ள சில கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் தனித்தொகுதியாக இருந்தும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் போட்டியிட முடியாத நிலை இருந்தது. இதை அன்றைய மதுரை மாவட்ட ஆட்சியரான உதயசந்திரன் தலையிட்டு வெற்றி கரமாக நடத்திக் காட்டிய நிகழ்வு இராஜேஷின் மனதில் நிலையான தாக்கத்தை ஏற்படுத்தியது.

என்ன படிக்கிறோம், எப்படிப் படிக்கிறோம்

கல்லூரி இறுதியாண்டில் கேம்பஸ் இன்டர்வியூவில் தேர்வாகி சென்னை அய்.டி நிறுவனம் ஒன்றில் வேலையில் சேர்ந்தார் இராஜேஷ். அப்போது தேசிய வங்கியின் முதன்மை மேலாளரான இராஜேஷின் அப்பா சுந்தரராஜ் இது அவருக்கான வேலை அல்ல என்பதைப் புரிய வைத்தார்.

ஒரு கட்டத்தில் அய்.டி. வேலையை ராஜினாமா செய்தார் ராஜேஷ் டில்லியில் அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யத்தில் சேர ரயில் பயணச்சீட்டு முதற்கொண்டு எல்லா ஆயத்தப் பணிகளும் செய்த பின்னர் திடீரென சிக்குன் குனியா வந்துவிட்டது.

இதனால் டில்லி போக முடியாமல் சென்னையிலேயே அய்.ஏ.எஸ். பயிற்சி மய்யம் ஒன்றில் சேர்ந்துள்ளார். ஆனால், முதல் தேர்வில் தோற்றதால் மிகுந்த சங்கடத்துக்கு ஆளானார்.

இரண்டாவது முறைக்குத் தயாரானபோது தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் குரூப்-1 தேர்வுக்கும் சேர்த்துப் பயின்றார். ஆனால் இலக்கில்லாமல் படித்ததால், யூ.பி. எஸ்.சி-யில் கோட்டைவிட்டு டி.என்.பி.எஸ்.சி-யின் குருப்-1 மட்டும் பாஸ் செய்தேன் என்கிறார். எனினும், விடாமல் 3 ஆவது முறை திட்டமிட்டுப் பயிற்சி எடுத்தார்.

முதல் கட்டமாக சென்னையில் தங்கிய அறையை மாற்றிக்கொண்டு, என்னைப் போலவே தயாராகும் புதிய நண்பர்களுடன் இணைந்தேன். ஒரே அறையில் அனை வரது நோக்கமும் ஒன்றாக இருந்தது உத்வேகத்தை அளித்தது என்கிறார். இம்முறை பிரிலிம்ஸ், மெயின்ஸ் இரண்டிலும் நல்ல மதிப்பெண் வாங்கினாலும் நேர்முகத் தேர்வில் பதற்றம் அடைய அய்.ஏ.எஸ். பிரிவில் மீண்டும் தோற்று இராணுவ வருவாய்த் துறை பிரிவில் வேலை கிடைத்தது.

மறுஆண்டு நான்காவது முறையாக எழுதியதில் அய்.பி.எஸ். கிடைத்தது. இந்த நம்பிக்கையில் அய்.பி.எஸ். பணியாற்றியபடியே மேலும் இருமுறை முயற்சி செய்தும் கைகூடவில்லை. வேறு வழியின்றி அய்.பி.எஸ்.ஸில் விருப்பம் இன்றி சேர்ந்தாலும் ஒரு கட்டத்தில் விருப்பம் உண்டானது. யூ.பி.எஸ்.சி. தேர்வுகளை அய்ந்து முறை எழுதி இரண்டு முறை தேர்வாகியும், அய்.ஏ.எஸ். கிடைக்காமல் போனதற்கான காரணங்களை எண்ணிப் பார்க்கிறேன்.

முதல் இரு முயற்சிகளில் உறுதியான இலக்கு இன்றி இருந்ததுதான் அடிப்படைக் காரணம். ஒரு இலக்கை முடிவுசெய்து அதை நோக்கிச் செல்வதுதான் வெற்றியைத் தரும் என்பது எனது அனுபவம் சொல்லும் பாடம் ஆகும் என்கிறார் இராஜேஷ்.


6,10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடற்படையில் பணி

இந்திய கடற்படையில் பயிற்சி பெற்று ,  Steward, Chefs & Hygienists போன்ற பணியில் சேருவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு திருமணமாகாத ஆண் விண்ணப்பதாரர்களிடமிருந்து விண் ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: STEWARD/ CHEFS/HYGIENISTS

தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது 6ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயதுவரம்பு: 01.10.1996 - 30.09.2000க்கும் இடைப்பட்ட காலங்களில் பிறந்திருக்க வேண்டும்.  மாதம் ரூ.5,200 - 20,200 எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு மற்றும் மருத்துவ தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.joinindiannavy.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப் பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 2.01.2017

ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 9.01.2017 மேலும் முழுமையான விவரங்கள் அறிய இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

கணிதத்தை ஆட்கொண்ட ஆய்லர்

சுவிட்சர்லாந்தில் பேசல் எனும் இடத்தில் 309 ஆண்டுகளுக்கு முன் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதியன்று லியோ னார்ட் ஆய்லர் என்ற மாபெரும் கணித மேதை பிறந்தார். இளம் வயதிலேயே அதீத ஆற்றல் கொண்ட ஆய்லர், தாம் படித்த புத்தகங்களில் தோன்றும் குறிப்பு களை ஒரு வார்த்தைகூடப் பிறழாமல் பல ஆண்டுகளுக்குப் பின்பும் அப்படியே ஒப்பிக்கும் நினைவாற்றல் பெற்று விளங் கினார். இளம் வயதிலேயே தனது கணித ஆற்றலை வெளிப்படுத்தத் தொடங் கினார்.

இன்று கணிதத்தில் இவர் பெயர் கொண்ட கருத்துக்கள், சூத்திரங்கள் மற்றும் தேற்றங்கள் நூற்றுக்கும் மேல் உள்ளன. அந்த அளவுக்கு அனைத்துக் கணித உட்பிரிவுகளிலும் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி மாபெரும் மேதையாக ஆய்லர் கணித உலகில் சஞ்சரிக்கிறார்.

அற்புத நினைவாற்றல் படைத்தவர்

கணிதத்தில் மிக அதிகமான படைப்புகளை வழங்கியதோடு மட்டுமல்லாமல் பல அழகு பொருந்திய சூத்திரங்களை ஏற்படுத்தி, கணிதத்துக்குப் பொலிவூட்டியவர் ஆய்லர். மேலும், பல நவீன கணித உட்பிரிவுகளுக்கு இவரது சிந்தனைகளே அடித்தளமாக அமைந்தன. இவரது படைப்புகள் கிட்டத்தட்ட 30 ஆயிரம் பக்கங்களுக்கு மேல் நீள்பவை. இவர் கண்டறிந்த செய்திகளின் பட்டியலை நூற்றாண்டு களுக்கு மேல் சேகரித்து அப்படைப்புகளின் சிறுகுறிப்புகளை நூறு தொகுதிகளுக்கு மேல் வழங்கியுள்ளனர். இதிலிருந்து இவரது படைப்பாக்கத்தின் பிரம்மாண்டத்தை நாம் உணரலாம்.

முப்பது வயதில் தனது வலது கண்ணை இழந்த ஆய்லர், தனது அறுபதாவது வயதில் மற்றொரு கண்ணையும் இழந்தார். இருப்பினும் அதன் பிறகு அவர் வாழ்ந்த 16 ஆண்டுகளில் வாரத்துக்கு ஓர் கண்டுபிடிப்பை நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த் தினார்.

தினமும் காலை முதல் மாலை வரை தனது கண்டுபிடிப்புகளைக் குறிப்பதற்கென ஓர் நபரை நியமனம் செய்து அவர் மூலம் பதிவு செய்ததாக அறியப்படுகிறது. முதல் அறுபது ஆண்டுகளில் உருவாக்கிய கணிதப் படைப்புகளுக்கு இணையான கணிதப் படைப்புகளை பிற்காலத்திலும் அவர் உருவாக்கினார் என்பது அவரது அற்புத நினைவாற்றல், விடாமுயற்சி, உழைப்பு போன்றவற்றின் வெளிப்பாடே!

கணிதம் மட்டுமல்லாது இயற்பியல், வானியல், திரவ இயக்கவியல், ஒளியியல், இசைக் கோட்பாடு போன்ற பல்வேறு துறைகளிலும் கருத்துகளை வழங்கியுள்ளார். இவரது பெருமையை, பிற்காலத்தில் தோன்றிய பிரெஞ்சு கணித அறிஞரான லாப்லாஸ் இவ்வாறு குறிப்பிடுகிறார்: ஆய்லரைப் படியுங்கள், ஆய்லரைப் படியுங்கள், அவர்தான் நம் அனைவருக்கும் ஆசான்.
ஆய்லரின் குறிப்புகளைப் பற்றி : https://goo.gl/d9pdNb என்ற இணையப் பக்கத்தில் அறிந்துகொள்ளலாம்.

தமிழில் எழுதி சாதித்தேன்

ஆங்கிலம் நன்கு அறிந்தவர்கள் மட்டும்தான் யூ.பி.எஸ்.சி.யை வெல்ல முடியும் என்றில்லை. தமிழில் எழுதியும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணம் அ.தினேஷ்குமார். இவர் தமிழில் யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதி 2012 பேட்ச்சின் உ.பி. மாநிலப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றுகிறார்.

விடாமுயற்சி நிச்சயம் வெற்றி

கரூரில் உள்ள சோமூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் தினேஷ்குமார். அவ்வூரைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் படிக்கத் தொடங் கியவர் கரூரில் ஒரு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பாடப் பிரிவில் பிளஸ் டூ முடித்தார். பர்கூரில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் 1998-ல் பட்டம் பெற்றார். தமிழ்வழிக் கல்வியில் பிளஸ் டூ வரை படித்தவருக்கு ஆங்கிலத்தில் பொறியியல் படிப்பது மிகவும் கடினமாக இருந்தது.

அடுத்து என்ன செய்யலாம் என யோசித்தபோது நாளிதழ்களைப் படித்து யூ.பி.எஸ்.சி. தேர்வு பற்றி தெரிந்துகொண்டார். சென்னையில் உள்ள தமிழக அரசு அண்ணா பயிற்சி நிலையத்தில் சேர்ந்தார். ஆங்கிலத்தில் தனக்கு புலமை குறைவு என்பதால், தமிழிலும் யூ.பி.எஸ்.சி. எழுதலாம் எனும் வாய்ப்பைப் பயன்படுத்த முடிவெடுத்தார். அப்பயிற்சி நிலையம் நடத்திய நுழைவுத் தேர்வில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அப்போது யூ.பி.எஸ்.சி. வெல்வோம் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.

ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர் என்பதால் சாதாரணமாக எல்லோரும் சந்திக்கும் பிரச்சினைகளை விடக் கூடுதலாகப் பலவற்றை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 35 வயது வரை யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதும் வாய்ப்பை முழுவதுமாக விடா முயற்சியோடு பயன்படுத்தினார். 1999 முதல் 2011 வரை தொடர்ந்து 10 முயற்சிகளையும் எடுத்தார். ஒன்பதாவது முயற்சியில் அய்.ஆர்.எஸ். (அய்.டி.) பணி கிடைத்தது. இதற்காக நாக்பூரில் பயிற்சி எடுத்துக்கொண்டே தன்னுடைய இறுதி வாய்ப்பில் அய்.ஏ.எஸ். ஆனார்.

படித்தது கிராமப்புறப் பள்ளிகள்தான் என்றாலும் அங்கு அருமையான ஆசிரியர்கள் எனக்கு வாய்த்தார்கள். சிறுவயது முதலே வழியில் கிடைக்கும் செய்தி தாள்களின் துண்டுகளையெல்லாம் பொறுக்கிப் படிப்பேன். இதனால் என்னுடைய பட்டப் பெயரே பேப்பர் பொறுக்கிதான். வழக்கமாக, யூ.பி.எஸ்.சி. தேர்வு எழுதுபவர்கள் அதிகபட்சமாக நான்கு முறை முயற்சித்தும் வெல்ல முடியாமல் போனால், மன அழுத்ததில் பின்வாங்கிவிடுகிறார்கள்.

அதற்கு அவர் களுடைய குடும்பச் சூழலும் காரணமாக இருக்கலாம். ஆனால், நான் விடாமல் முயன்றதற்கு முக்கியக் காரணம் என்னுடைய அப்பாதான். அவர்தான் என்னுடைய முன்மாதிரி. ஏழ்மையில் வாடிய எங்கள் குடும்பத்தைத் தன்னுடைய கடின உழைப்பால் தூக்கி நிறுத்தினார் அவர் எனப் பெருமிதம் கொள்கிறார் தினேஷ்குமார்.

முயற்சிகளுக்கு இடையே செய்த பணிகள்

தன் 10 முயற்சிகளுக்கு இடையே தினேஷ்குமார் எழுதிய தேர்வில் 1999 டிசம்பரில் சரக்கு ரயில் பெட்டிகளின் கார்டு பணி கிடைத்துள்ளது இதில் இரு ஆண்டுகள் ஜோலார்பேட்டையில் பணியாற்றியுள் ளார். பிறகு, குரூப் டூவிலும் வென்று சென்னை தலைமை செயலகத்தின் சுற்றுலாத்துறையின் உதவி பிரிவு அலுவலராக 7 ஆண்டுகள் இருந்துள்ளார். பிறகு மீண்டும் ஒரு குரூப் டூ தேர்வு எழுதி வென்றவர் தமிழக அரசின் பதிவு அலுவலகத்தில் சார் பதிவா ளராகவும் பணியாற்றி உள்ளார்.

இதுவன்றி, மத்திய பாதுகாப்புப் படையின் யூபிஎஸ்சிக்கான தேர்வில் வென்று சி.ஆர்.பி.எப்பில் உதவி கமாண்டண்ட் பணி கிடைத்தது. ஆனால், அவர் இதில் சேரவில்லை. அய்ஏஎஸ் பதவி கிடைத்த வுடன் செய்த பணிகள் மெயின்புரியில் பயிற்சி இணை ஆட்சியர், ஆக்ரா மற்றும் லலித்பூரில் துணை ஆட்சியர் பணிகள், தற்போது சித்ரகுட் மாவட்டத்தில் முதன்மை வளர்ச்சி அதிகாரியாக உள்ளார்.

தமிழால் கிடைத்த பலன்

தமிழ்வழிக் கல்வி பயின்று வெளி உலகைச் சந்திக்கும் இளைஞர்களுக்கு ஆங்கிலத் திறன் குறை வாக இருப்பது உண்மைதான்.

அதற்காக ஆங்கிலத்தில் எழுதினால் தவறாகிவிடும் எனப் பயந்து யூ.பி.எஸ்.சி. எழுதாமல் இருக்கக் கூடாது. ஆங்கிலத்தில் படித்து அதைத் தமிழில் புரியும்படி எழுதினாலே வெற்றி நிச்சயம். நேர்முகத் தேர்வையும் நமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் சந்திக்கலாம். மொழி வளமையைவிட நம்முடைய அறிவாற்றலுக்கும் புரிதலுக்கும்தான் அதில் கூடுதல் முக்கியத்துவம் தரப்படும். பல பாடப் பிரிவுகளுக்குத் தமிழில் உகந்த கலைச்சொற்கள் இல்லை.

அத்தகைய வார்த்தைகளை நாம் ஆங்கிலத் திலேயே எழுதலாம். சந்தேகத்துக்கு இடமான சொற்களைக் குறிப்பிடும்போது அதன் ஆங்கில வார்த்தையை அடைப்புக்குறிகளுக்குள் எழுதினால் உகந்த மதிப்பெண் கிடைத்துவிடும். யூ.பி.எஸ்.சி. தேர்வைத் தமிழில் எழுதும் மாணவர்களைவிடப் பத்து மடங்கு அதிகமான எண்ணிக்கையில் வட மாநிலத்தவர்கள் இந்தியில் எழுதுகிறார்கள்.

வெற்றிக்குப் பிறகு வேலை செய்யும்போது ஆங்கிலம் சரளமாகப் பேசியாக வேண்டுமே என்றும் அஞ்சத் தேவை இல்லை. இதற்கான பக்குவமும் அறிவும் அனுபவத்தில் வளர்ந்துவிடும்.

தவறைத் தாமதமாக உணர்ந்தேன்!

ஒவ்வொரு முயற்சியிலும் செய்த தவறுகளைக் கண்டுபிடிக்கவே கிட்டத்தட்ட அய்ந்து ஆண்டுகள் பிடித்தன. நேர்முகத் தேர்வைச் சந்திப்பதிலும் பல சங்கடங்கள் ஏற்பட்டதைத் தாமதமாகத்தான் உணர்ந் தேன். கடைசி முயற்சிக்கு முன்னதாகச் சென்னையின் மனிதநேயப் பயிற்சி மய்யத்திலும் டெல்லி டைர க்ஷன்ஸ் மய்யத்திலும் எடுத்த பயிற்சி கைகொடுத்தது. தமிழுடன் சேர்த்துப் புவியியலை விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்தேன்.

அப்போதுதான் தெரிந்தது புவியியலுக்குத் தமிழில் அதிகமான பாடப் புத்தகங்கள் இல்லை என்பது. அதனால் புவியியலை ஆங்கிலத்தில் படிக்க வேண்டியதாயிற்று.

இதற்குச் சென்னை பல்கலைக்கழகம் சார்பில் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் வெளியிடப் பட்டிருந்த கலைச்சொல் அகராதிகள் உதவின. எனினும், அதில் 1980ஆம் ஆண்டுக்குப் பின்னால் புதிய சொற்கள் சேர்க்கப்படாதது பெரும் குறையாக இருந்தது.

ஆங்கிலத்தில் படித்துத் தமிழில் குறிப்புகள் எடுத்தேன். இதனால் சற்றுக் கூடுதலான நேரம் செலவானது. அதிக முயற்சி எடுப்பவர்கள் மனஅழுத் தத்துக்கு ஆளாகாமல் தோல்வியைத் தள்ளி நின்று பார்த்து நிதானமாகச் செயல்பட வேண்டும்.

சிண்டிகேட் வங்கியில் அதிகாரி ஆகலாம்!

தற்போது பொதுத்துறை வங்கிகள் போட்டிபோட்டுக்கொண்டு அதிகாரி பணிக்கு இளம் பட்டதாரிகளைத் தேர்வுசெய்து வரு கின்றன.

வங்கிப் பணியில் சேரும் ஆர்வம் கொண்ட திறமையான இளைஞர்களைத் தேர்வு செய்து அவர்களை வங்கியியல் சார்ந்த டிப்ளமா படிப்பை  படிக்க வைத்து அப்படிப்பை வெற்றிகரமாக முடிப்பவர் களைத் தங்கள் வங்கியிலேயே பணியில் அமர்த்திக் கொள்கின்றன. அண்மையில்தான் இந்தியன் வங்கி இதுபோன்ற தேர்வுமுறைக்கு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. தற்போது பொதுத்துறை வங்கி யான சிண்டிகேட் வங்கியும் இத்தகைய தேர்வுமுறைக்கு அறிவிப்பு செய்திருக்கிறது.

முதுகலை டிப்ளமா படிப்பு

சிண்டிகேட் வங்கியானது மேற்குறிப்பிட்ட முறையில் வங்கி அதிகாரி பணியில் 400 காலியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்காகத் தேசிய அளவில் போட்டித்தேர்வு நடத்தப்படும்.

இதன் மூலம் தேர்வுசெய்யப்படும் பட்டதாரிகள் பெங்களூரு மணிபால் குளோபல் எஜுகேஷன் சர்வீசஸ் என்ற கல்வி நிறுவனம் மற்றும் மங்களூர், கிரேட்டர் நொய்டாவில் உள்ள நிட்டில் எஜுகேஷன் இண்டர்நேஷனல் கல்வி நிறுவனத்திலும் வங்கியில் முதுகலை டிப்ளமா படிப்பில் சேர்க்கப்படுவர். இங்கு 9 மாதங்கள் படிக்க வேண்டும். அப்போது மாதம் ரூ.2500 உதவித்தொகையாக வழங்கப்படும். படிப்புக் கட்டணம் ரூ.3.5 லட்சத்தைச் சிண்டிகேட் வங்கியே கல்விக்கடனாக அளித்துவிடும்.

படித்து முடித்தவுடன் அரசு வேலை

இந்த 9 மாதப் படிப்பை முடித்தவுடன் சிண்டிகேட் வங்கியின் ஏதேனும் ஒரு கிளையில் 3 மாதம் பயிற்சி  பெற வேண்டும். அப்போது மாதம் ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இப்பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததும் சிண்டிகேட் வங்கியில் அதிகாரியாகப் பணியமர்த்தப்படுவார்கள். அதன்பிறகு படிப்புக்காக வாங்கிய கல்விக்கடனை மாதாந்திர தவணையில் செலுத்திவிடலாம்.

படித்து முடித்த கையோடு உடனடியாக அரசு வேலைவாய்ப்பையும் வழங்க வகைசெய்யும் இந்த டிப்ளமா படிப்பில் பட்டதாரிகள் சேரலாம். குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர், உடல் ஊனமுற்றோர் எனில் 55 சதவீத மதிப்பெண் போதும். வயது 20 முதல் 28-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினருக்கு 5 ஆண்டுகளும்,

ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், உடல் ஊனமுற்றோருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். உரிய கல்வித் தகுதியும் வயது தகுதியும் உடைய பட்டதாரிகள் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தை (..) பயன்படுத்தி டிசம்பர் மாதம் 28ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

என்ன கேட்பார்கள்?

தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, குழு விவாதம், நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26ஆம் தேதி நடத்தப்படும். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 இடங்களில் தேர்வு நடைபெறும். ஆன்லைன் மூலமாக நடத்தப்படும் இந்தத் தேர்வில் ரீசனிங், கணிதம், ஆங்கிலம், பொது அறிவு ஆகிய 4 பகுதிகளில் தலா 50 வினாக்கள் வீதம் மொத்தம் 200 கேள்விகள் இடம்பெறும்.

இதற்கு 2 மணி நேரத்தில் விடையளிக்க வேண்டும். எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு அடுத்த கட்டமாகக் குழு விவாதம், நேர்முகத் தேர்வு நடத்தப் படும். இறுதியாக எழுத்துத் தேர்வு மதிப்பெண், குழுவிவாதம், நேர்காணல் மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் அடிப் படையில் வங்கியியல் படிப்புக்குத் தகுதியான நபர்கள் தேர்வுசெய்யப்படுவர். கூடுதல் விவரங்களைச் சிண்டிகேட் வங்கியின் இணையதளத்தில் விளக்கமாகத் தெரிந்து கொள்ளலாம்.

ஆசிய போட்டியில் தங்கம் வெல்வதே லட்சியம்
தடகள வீரர் ஹர்ஷவர்த்தன் உறுதி


‘ஆசிய விளையாட்டு போட்டியில், தங்கம் வெல்வதே லட்சியம’ என, மாநில அளவிலான உயரம் தாண்டுதல் போட்டியில் முதலிடம் பெற்ற, பெரிய நாயக்கன்பாளையம் ஜி.கே.டி., மெட்ரிக் பள்ளி மாணவர் ஹர்ஷவர்த்தன் கூறினார்.

சமீபத்தில், இவர், சிறீவில்லிப்புத்துரில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில், முதலிடம் பெற்று, தேசிய அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.

இவர், மாவட்ட மற்றும் டிவிஷன் அளவிலான உயரம் தாண்டுதல் போட்டி களில் பங்கேற்று பதக்கம் வென்றுள்ளார்.

இது குறித்து ஹர்ஷவர்த்தன் கூறியதாவது:

படிப்பில் மட்டுமல்லாமல், விளையாட்டிலும் ஈடுபட, வீட்டில் உள்ளவர்கள் ஊக்கப்படுத்தினர்.

குறிப்பாக, எனது தந்தை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் விளையாட்டுகளை பார்த்து, ‘இது போல நீயும் விளையாட்டில் சிறந்து விளங்க வேண்டும்‘ என, உற்சாகமூட்டினார்.

தாண்டுதலில் எனக்கு உள்ள ஆர்வத்தை பார்த்து, அதில் பின்பற்ற வேண்டிய அடிப்படை விதிகள் குறித்து, எங்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் அருள்குமார் கற்றுக் கொடுத்தார்.

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான தேசிய அள விலான உயரம் தாண்டுதல் போட்டி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடந்தது. இதில், நான்காம் இடம் பெற்றேன்.இதை தொடர்ந்து, ‘பேட்டில் டெஸ்ட்’ என்ற போட்டியில் பங்கேற்று, இரண்டாம் இடம் பெற்றேன்.

இதனால் சென்னையில் நடந்த உயரம் தாண்டுதல், 10 நாள் பயிற்சி முகாமில் பங்கேற்க தகுதி பெற்றேன். அதில், பயிற்சியாளர் போஸ், உயரம் தாண்டுதல் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்வது என்பது குறித்து, பல பயிற்சிகளையும், யுக்திகளையும் கற்றுக் கொடுத்தார்.

தற்போது, தினமும் காலை, மாலை வேளையில் ஆறு மணி நேரம் பயிற்சியில் ஈடுபடுகிறேன்.

தேசிய அளவிலான உயரம் தாண்டுதல் போட்டி தெலுங்கானாவில் நடக்கிறது. அதில், பங்கேற்று தேசிய அளவில் முதலிடம் பிடிப்பேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இது தவிர, சர்வதேச அளவில் நடக்கும் ‘வோர்ல்டு ஸ்கூல் கேம்ஸ்’ போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற வேண்டும். எதிர்காலத்தில், 22 வயது நிறைவடைந்த பிறகு, ஆசிய மற்றும் ஒலிம்பிக் போட்டிகளில் பங் கேற்று தங்கம் வெல்வதே என் லட்சியம்.

இவ்வாறு, அத்லட்டிக் வீரர் ஹர்ஷவர்த்தன் கூறினார்.

Banner
Banner