மகளிர்

மகளிர்

பன்னிரெண்டு வயதாகும் அபிஷேகா, இப்போது ஸ்குவாஷ் விளையாட்டில் புது முகம். கடந்த மாதம் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இவர்தான் சாம்பியன். அப்பா கால்பந்து பயிற்சியாளர்.

அய் லீக் என்ற கால்பந்து குழுவுக்கு பயிற்சி அளித்து வருகிறார். அம்மா உயரம் தாண்டுதலில் வீராங்கனை. இப்போது பயிற்சி எடுப்பதில்லை.

அக்காவும் கால்பந்து வீராங்கனை. அவள் தமிழ்நாடு அளவிலான கால்பந்து போட்டியில் பங்கேற்று வருகிறாள்.அப் போது எனக்கு ஆறு வயது. அம் மாவுக்கும் அப்பாவுக்கும், இந்தியன் ஸ்குவாஷ் அகடமி ஏற்பாடு செய்திருந்த கேம்ப்புக்கு அழைப்பு வந்தது. இருவரும் அதில் கலந்து கொள்ள சென்றனர்.

உடன் நானும். வேறு வேறு துறைகளை சேர்ந்த இருவருக்கும் ஸ்குவாஷ் குறித்து முழுமையாக அறிந்து கொள்ளும் வாய்ப்பு அப்போது கிடைத்தது. தவிர என்னையும் ஏதேனும் ஒரு விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்ற வேட்கை அவர்களிடம் இருந்தது. ஸ்குவாஷ் அவர்களுக்கு பிடித் திருந்ததால் என்னை அதில் சேர்த்து விட் டார்கள். இப்படித்தான் என் பயணம் தொடங்கியது... என்று சொல்லும் அபி ஷேகா, அதன் பின் அந்த விளையாட்டை சீரியசாக விளையாட ஆரம்பித்துள்ளார்.

பயிற்சி எடுக்க எடுக்க ஸ்குவாஷ் மீது எனக்கும் ஆசை வர ஆரம்பித்தது. முழுமூச்சுடன் கற்றுக் கொண்டு போட்டி களில் விளையாடும் அளவுக்கு வளர்ந் தேன். கடந்த ஆண்டு நடைபெற்ற தேசிய அளவிலான போட்டிதான் எனக்கான அடையாளத்தை கொடுத்தது. அதில் நான் சாம்பியன் பட்டம் பெற்றேன். அந்த போட்டி எனக்குள் தன்னம்பிக்கையை வளர்த்தது.

என்னாலும் ஜெயிக்க முடியும் என் பதை நானே உணர்ந்தேன். இந்த உத்வேகத்துடன் இந்தாண்டு போட்டியை எதிர்கொண்டதால் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ள முடிந்தது... என்று சொன்னவர் ஆசிய அளவில் நடைபெற்ற போட்டியிலும் பங்கு பெற்றுள்ளார்.

கடந்த மாதம் நடைபெற்ற ஆசிய அளவிலான போட்டியில் பங்கேற்றேன். அதில் இந்தியா சார்பாக நான் விளை யாடினேன். சர்வதேச அளவில் பல நாடுகள் பங்கு பெற்றன. என்னால் முதல் இடத்தை பிடிக்க முடியவில்லை. ஒன்ப தாம் இடம்தான் கிடைத்தது. சர்வதேச அளவில் நாம் எந்த ரேங்கில் இருக்கிறேம் என்பதை கணிக்க இந்த இடமே உதவும். இப்போது அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஆசிய ஜூனியர் போட்டியில் வெற்றி பெற முழுமையாக பயிற்சி எடுத்து வருகிறேன். நிச்சயம் சாம்பியன் பட்டம் பெறுவேன்... நம்பிக்கையுடன் சொல்லும் அபிஷேகா கடுமையான பயிற்சிக்கு நடுவில் படிப்பிலும் முழு கவனம் செலுத்தி வருகிறார். தினமும் காலையும் மாலையு மாக சேர்த்து அய்ந்து மணி நேரம் பயிற்சி எடுக்கிறேன். பள்ளி முடிந்ததும் அகடமி. பயிற்சிக்கு பின் வீடு, படிப்பு. ஒரு கண் ஸ்குவாஷ் என்றால் மறு கண் படிப்பு. குறிப்பாக அறிவியல் பாடம் எனக்கு ரொம் பவும் பிடிக்கும்... சிரிக்கும் அபிஷேகா, கால்பந்தும் விளையாடுவாராம்.

அப்பா, கால்பந்து பயிற்சியாளர், அக்காவும் கால் பந்து வீரர். எனவே அப்பாவின் அகடமிக்கு செல்லும்போது கால்பந்து பயிற்சியும் எடுப்பேன். எப்படி சரியாக குறி பார்த்து கோல் போட வேண்டும் என்பதை தெரிந்து கொண்டது அங்குதான். இந்த லாவகம், ஸ்குவாஷில் பயன்படுகிறது. குறிப்பாக எதிராளியை சமாளிக்கும் வித்தை.  கால்பந்துடன் ஒப் பிடும்போது ஸ்குவாஷ் கொஞ்சம் கஷ்ட மானது! இவை இரண்டும் தவிர ஸ்விம் மிங்கிலும் ஆர்வம் உண்டு. பாட்டு பாடு வேன். பியானோ வாசிப்பேன். பியானோ க்ளாஸும் செல்கிறேன். வயரில் கை வினைப்பொருட்கள் பின்ன ரொம்ப பிடிக் கும்.நானும் எல்லா பெண்களையும் போல்தான்.

எல்.கே.ஜி. முதல் இப்போதுவரை நானும் என் தோழியும் ஒன்றாகத்தான் படித்து வருகிறோம். அவள்தான் என் பெஸ்ட் ஃப்ரெண்ட். எங்குசென்றாலும் ஒன்றாக செல்வோம். இருப்போம். இது வரை ஸ்குவாஷ் போட்டி, ஒலிம்பிக்சில் இடம்பெறவில்லை.  இந்த நிலை மாறும் என்றும் 2020இல் நிச்சயம் ஒலிம்பிக்சில் ஸ்குவாஷும் இடம்பெறும் என்றும் சொல் கிறார்கள்.

அப்படி இடம்பெறும் பட்சத்தில் இந்தியா சார்பாக அப்போது நான் விளை யாட வேண்டும். அதுதான் என் கனவு, லட் சியம்... என்கிறார் அபிஷேகா. ஷானான்.

------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பிரச்சினையா? உதவிக்கு அழையுங்கள்!

மாறிவரும் சூழலில் பெண் குழந்தைகள் மீதும், பெண்கள் மீதும் திட்டமிட்டும் எதிர்பாராமலும் நடக்கும் வன்முறைகளை நாம் காணவோ அல்லது கேள்விப்படவோ செய்யலாம். அப்படியான சமயங்களில் உதவ நினைத்தாலும் எப்படி உதவுவது... யாரை அணுகுவது என்ற கேள்வி அனைவருக்கும் எழலாம். அப்படிப்பட்ட நிலையில் உள்ளவர்களுக்காக சில  அமைப்புகள் சென்னையில் இயங்கி வருகின்றன. மகளிருக் காக அவசர உதவி, ஆலோசனை, பாதுகாப்பான தங்குமிடம், சட்ட உதவி, மருத்துவ உதவி மற்றும் மனநல ஆலோசனை போன்ற வற்றை வழங்கி வருகின்றனர். அவற்றின் தொடர்பு எண்கள்:

பெண்களுக்கான அவசர உதவி - 1091. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 (சைல்டு லைன்). ஆஷ்ரயா (ஆந்திர மகிளா சபா) 044-24642566. கலைச்செல்வி கருணாலயா சமூக நல மய்யம் 044-26257779, 044-26254956. மெட்ராஸ் கிறிஸ்டியன் கவுன்சில்  ஆஃப் சோசியல் சர்வீஸ் 044-26703246, 044-26700744, 044-26705486. பி.சி.வி.சி. 044-43111143, 1800-102-7282  சகோதரி 044-25321737.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் கைபர் கணவாயில் இருந்து காஷ்மீர்வரை பரந்து விரிந்திருந்தது பஞ்சாப் பேரரசு. அதன் அப்போதைய தலைநகர் லாகூர். அந்தப் பேரரசைக் கடைசியாக ஆட்சி செய்தவர் ஒரு பெண். அவர்தான் ஜிந்த் கவுர் என்றழைக்கப்பட்ட ஜிந்தன் கவுர். பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக இரண்டு முறை போர் தொடுத்தவர்.

பழமைக்கு எதிராக

அரசவை நாய் பராமரிப்பவரின் மகளாகப் பிறந்தவர் ஜிந்தன். புகழ்பெற்ற பஞ்சாப் மன்னர் ரஞ்சித் சிங்கின் கடைசி மனைவியானார். ஆங்கிலேயரைப் பல பத் தாண்டுகளுக்கு எதிர்த்துவந்த ரஞ்சித் சிங், 1839இல் முடக்குவாதத்தால் இறந்தார். அந்தக் காலத்தில் சாதாரண மாக நடைபெற்றுவந்த உடன்கட்டை ஏறும் வழக்கத் தையும், பர்தா அணியும் வழக்கத்தையும் ஜிந்தன் துணிச் சலாக மறுத்தார். ரஞ்சித் சிங் இறந்தபோது அவர்களுடைய மகன் துலீப் சிங், ஒரு வயதுக் குழந்தை. ஆட்சிப் பகுதி ஆட்டம் காண ஆரம்பித்தது. சிறுவன் துலீப் சிங்குக்குப் பதவி போவதைத் தடுத்துப் பஞ்சாபைக் கைப்பற்ற ஆங்கிலேய அரசு முயன்றது. பஞ்சாப் பேரரசின் சொத்து களாலும் ஆங்கிலேய அரசு கவரப்பட்டது.

அவதூறு பிரச்சாரம்

மகன் துலீப் சிங்குக்குப் பொறுப்பாளராக ஆட்சி அதிகாரத்தை ஜிந்தன் கவுர் ஏற்றுக்கொண்டார். அரசவையை நடத்தியதோடு அமைச்சர்கள், ராணுவத் தளபதிகளிடம் நேரடியாகக் கலந்துரையாடினார். அவரது ஆலோசனை இல்லாமல் ஆட்சி நிர்வாகத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆட்சியைப் பொறுப்புடன் நடத்திய ஜிந்தனை ஆங்கிலேயர்கள் தங்கள் அரசுக்கு மிகப் பெரிய தடையாகக் கருதினார்கள். அவரைப் பற்றி அவதூறு பிரச்சாரத்தை ஆங்கிலேயர்கள் கட்டவிழ்த்து விட்டனர். ஜிந்தனை பஞ்சாபின் அதீத பாலியல் ஆர்வம் கொண்டவர் (பஞ்சாபின் மெசலினா) என்று பிரிட்டிஷ் ஊடகங்கள் பிரச்சாரம் செய்தன.

பறிபோன பேரரசு

1845-ல் ஆங்கிலேயப் படை போர் தொடுத்துவந்தது. ஆங்கிலேயருக்கு எதிரான சீக்கிய எதிர்ப்பை ஜிந்தன் ஒருங்கிணைத்தார். தனது தளபதிகளை ஆங்கில ஆட்சிக்கு எதிராகப் போரிட ஒன்றுசேர்த்தார். பிறகு, இரண்டு தீவிரத் தாக்குதல்களை ஜிந்தன் கௌர் தொடுத்தார். ஆனால் ராணுவத்தைக் கையாள்வதில் அவருக்கு இருந்த அனுபவ மின்மை, இளம் வயது (20-கள்) காரணமாகத் தாக்குதல் வியூகத்தில் கோட்டைவிட்டார். இப் படியாக ஆசியாவின் முக்கியப் பகுதியான பஞ்சாப் பேரரசை ஆங்கிலேயர் வீழ்த்தினர். 1849இல் பஞ்சாப் ஆங்கிலேயர் வசமானது.

மகன் துலீப் மீது செல்வாக்கு செலுத்தி, பஞ்சாப் மக்களை மீண்டும் ஒருங்கிணைத்துத் தங்களுக்கு எதிராக ஜிந்தன் போரிடலாம் என்று ஆங்கிலேயர் அஞ்சினர். இதனால் தாயையும் மகனையும் பிரிக்கத் திட்டமிட்டனர். ஒன்பது வயதில் துலீப் வலுக்கட்டாயமாகப் பிரிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவரால் தத்தெடுக்கப் பட்டார். இங்கிலாந்து அழைத்துச் செல்லப்பட்டு கிறிஸ்த வராக மதமும் மாற்றப்பட்டார். மகாராணி ஜிந்தனோ, லாகூர் அரசவையில் இருந்து முடியைப் பிடித்து இழுத்துச் செல்லப்பட்டு, ஷேக்குபுரா கோட்டையிலும் பின்னர் உத்தரப் பிரதேசத்தின் சுனார் கோட்டையிலும் சிறை வைக்கப்பட்டார். ஒருநாள் சிறையிலிருந்து வேலைக் காரியைப் போல மாறுவேடம் அணிந்து கோட்டையிலிருந்து தப்பித்து 1,300 கி.மீ. தூரம் காடுகள் வழியாகப் பயணித்து நேபாளத்தை அடைந்தார். பிறகு, மந்திரத்தால் தான் தப்பித்துவிட்டதாக ஆங்கிலேயர்களுக்குக் கடிதம் எழுதினார்.

புதிய அத்தியாயம்

பதிமூன்று ஆண்டுகளுக்குப் பிறகு புலி வேட்டை யாடுவதற்காக இங்கிலாந்திலிருந்து துலீப் கொல் கத்தாவுக்கு வந்தார். அப்போது மகனைப் பார்க்க ஜிந்தன் அனுமதிக்கப்பட்டார். துலீப்பின் விருப்பத்தின் பேரில் ஜிந்தனும் இங்கிலாந்து சென்றார். பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் இணைந்து வாழ்ந்தனர்.

அப்போது தங்கள் அரச பாரம்பரியம் பற்றியும், துலீப் பின் ஆட்சிப் பகுதி எங்கிருக்கிறது என்பதையும் ஜிந்தன் நினைவுபடுத்தினார். இழந்த பேரரசைப் பற்றி தன் மகனுக்கு எடுத்துக் கூறி, அதை மீட்டெடுக்க வலியுறுத் தினார். தாய் தந்த உத்வேகத்தால் பழையபடி சீக்கிய மதத்துக்குத் திரும்பிய துலீப் சிங், ஆங்கி லேயர்களுக்கு எதிராக மாறினார். ரஷ்ய மன்னர் ஜாரை இந்தியாவுக்குள் ஊடுருவுமாறு துலீப் வலியுறுத்திக் கொண்டிருந்தார். ஆனால், ஆங்கிலேய உளவுத் துறையினர் அதைக் கண்டறிந்து தடுத்துவிட்டனர்.

தன்னுடைய நாற்பதுகளில் உடல் பலவீனப்பட்ட நிலையிலும் மனவலிமையுடன் திகழ்ந்த ஜிந்தன் கௌர், தான் நினைத்ததை மகன் மூலமாக சாதிக்க முயற்சித்தார். 1863 ஆகஸ்ட் 1ஆம் தேதி இறந்த பிறகு மேற்கு லண்டனில் கென்சிங்டன் பகுதியில் அவர் புதைக்கப்பட்டார்.

எளிதில் விட்டுக்கொடுத்துவிடாத, அடிபணியாத ஓர் ஆட்சியாளராகவே ஜிந்தன் இருந்தார். இந்தியாவில் ஆங்கிலேயரைக் கடைசியாக எதிர்த்து நின்ற பெண் ஆட்சியாளர் என்ற பெருமை அவருக்கு உண்டு. பஞ்சாப் மண்ணில் அநீதி, சீற்றத்துக்கான அடையாளமாக இன்றைக்கும் ஜிந்தன் கவுர் கருதப்படுகிறார். சீக்கியர்களின் முதன்மை அடையாளங்களில் ஒன்றாகவும் திகழ்கிறார்.

ஒன்றுமே தெரியாதவருக்கு இங்கே வேலை!

விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் இயங்கி வருகிறது ஷபனா கைவினைப் பொருட்கள் நிறுவனம். உள்ளே நுழைந்தால் பெண்கள் பல குழுக்களாகப் பிரிந்து பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டிக் கொண்டிருந்தனர்.

இன்னொரு பக்கம் ஆண்கள் மண்ணைத் தரம் பிரிப்பதிலும் தயாரான பொம்மைகளைப் பத்திரமாக அனுப்புவதிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். ரசனையான இந்தத் தொழிலுக்குச் சொந்தக்காரர் ஷகிலா ஃபாரூக்.

பள்ளிப் படிப்பை முடித்தவுடனே திருமணம் நடந்து விட்டது. கணவர் செராமிக் தொழிற்சாலையில் வேலை செய்துவந்தார்.

அப்போது மண்ணாலான கைவினைப் பொருட்கள் செய்யும் யோசனை வந்தது. உடனே சாலை அகரத்தில் மண்பாண்டங்கள் செய்பவர்களை அழைத்துப் பேசினேன். கையில் பணமில்லை. காதி கிராமத் தொழில் வாரியம் மூலம் கடன் வாங்கி, விழுப்புரத்தில் தொழிலை ஆரம்பித்தேன். பிறகு முண்டியம்பாக்கத்துக்கு மாற்றிக் கொண்டேன் என்று சொல்லும் ஷகிலாவின் யூனிட்டில் 93 பேர் வேலை செய்கிறார்கள். இவர்களில் 90 சதவீதம் பெண்கள்.

எனக்கு எதுவும் தெரியாது என்று வருபவர்களை வேலைக்குச் சேர்த்துக்கொள்கிறோம்.

பிறகு அவர் களின் திறமையைக் கண்டறிந்து, வேலை தருகிறோம். கணவனை இழந்தவர்கள், கணவனால் கைவிடப் பட்டவர்கள், குடிகாரர்களின் மனைவிகள், மாற்றுத் திறனாளிகள், நோயாளிகள் என்று பாதிக்கப்பட்டவர் களுக்கு முன்னுரிமை அளிக்கிறோம். இவர்களுக்குள் ஒரு குழு அமைத்து, அவர்களின் சேமிப்பில் இருந்து நிதி உருவாக்கி, தேவைப்படுகிறவர்களுக்கு கடன் கொடுத்து உதவுகிறோம்.

அரசின் உதவியுடன் 13 பேருக்கு வீடு கட்டிக் கொடுக்கிறோம் என்கிறார் ஷகிலா.

இரண்டு ரூபாய் அகல் விளக்கிலிருந்து 20 ஆயிரம் ரூபாய்  சிலை வரை தயாரிக்கும் ஷகிலாவின் நிறு வனத்துக்கு, பிரதமர் கையால் தேசிய விருது கிடைத் திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விருது பெற்ற நிர்மல் சந்தேல்

2016 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஒரு போட்டியை அறிவித்திருந்தது. சமூக மாற்றத்தை ஏற்படுத்திய பெண்களுக்கான போட்டி அது.     எனப்படும் அந்த விருதுக்கு ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் மொத்தம் 25 பெண்கள் மட்டுமே இறுதிச்சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டனர். அதன் பிறகு இணையதளத்தில் அரசு நடத்திய மக்கள் ஓட்டெடுப்பில் 12 பேர் மட்டும் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் குடியரசுத் தலைவர் விருது வழங்கினார்.

இமாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்தவர். கணவனை இழந்தபின் வாய்ப்பு கெட்டவர் என்கிற பழியோடு மாமியார் வீட்டின் ஒரு மூலையில் முடங்கி கிடந்தார் 23 வயது நிர்மல் சந்தேல். அதிலிருந்து மெல்ல மெல்ல வெளிவந்து  எனும் தொண்டு நிறுவனத்தில் பணிக்குச் சேர்ந்தார். அங்குதான் இருண்டு கிடந்த அவர் வாழ்வில் வெளிச்சம் பிறந்தது.

தனியாக இருக்கும் பெண்களுக்கு தொழில் செய்ய உதவும் நிறுவனமாக இருந்த அங்கு பல விதவைப்பெண்கள், ஏழ்மையில் வாடும் பெண்கள், தனித்து விடப்பட்ட பெண்களை சந்தித்தார். அவர்களின் துயரங்களை கேட்டறிந்தார்.
கணவனை இழந்தவர்களும், பிரிந்தவர்களும் பெரும்பாலும்  வருமானமின்றி  பிள்ளைகளை வைத்துக்கொண்டு இந்தச் சமூகத்தோடும் வாழ்க் கையோடும் போராடுவதை உணர்ந்தார்.

அவர்களை அதிலிருந்து வெளிக்கொண்டு வர நினைத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பங்குபெற்ற அவர்  ஓர் இயக்கத்தை நிறு வினார்.

120 பெண்களுடன் ஆரம்பிக்கப்பட்ட அந்த இயக்கத்தில் இப்போது கிட்டதட்ட 15,000 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தனித்து வாழும் பெண்களின் உரிமையை அரசாங்கத்திடம் இருந்து பெற்றுத் தருவதில் இருந்து அவர்களை தொழில் முனைவோராக்குவது வரை பல செயல்களில் ஈடுபட்டு இமாச்சலத்தில் வசிக்கும் பல பெண்களின் தலைவிதியை மாற்றி வருகிறார்.

இவருடைய இயக்கத்தின் மூலம் பல பெண்கள் பயன்பெற்று தற்போது நல்ல நிலைமையில் இருக் கின்றனர். இமாச்சலப் பிரதேசத்தில் சிங்கிள் உமன் பாத யாத்திரா என்கிற பெயரில் நடைபயணத்தை 2008ல் இவர் தொடங்கியபோது வயதான பெண்கள் பலரும்  உடன் கலந்து கொண்டனர். உலகம் அப்போது இவரை கவனிக்க ஆரம்பித்தது.

இப்போது இந்தியா முழுவதிலிருந்தும், ஏன் வெளிநாடுகளிலிருந்தும்கூட இவருக்கு உதவிகள் குவிகின்றன. இப்போது இந்தியாவில் தனிப் பெண்களின் தலைமை எனக் கூறத்தக்க வகையில் தனித்துவம் பெற்றுவிட்டார்.  

பெண்கள் கல்வியுடன், ஒரு கைத்தொழிலையும் கற்றுக் கொள்ள வேண்டும்

பெண்கள் கல்வியுடன் ஒரு கைத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும்  என கூறுகிறார் தேநீர்க்கடை நடத்து சுலோச்சனா .

இல்லற வாழ்வில் ஒருவருக் கொருவர் அன்பாகவும் அனு சரணையாகவும் இருந்து, மேடு பள்ளங்களை எளிதில் கடந்து பயணித்துக்கொண்டிருக்கும்போது, கணவனை இழந்தால் எந்தப் பெண்ணும் நிலைகுலைந்துதான் போவார். ஆனாலும் தொடர்ந்து வாழ்க்கை என்ற படகைச் செலுத்தித்தான் ஆகவேண்டும். அப்படியொரு நிலைக்குத் தள்ளப்பட்ட சுலோச்சனா, தன் தன்னம்பிக்கையால் இன்னல்களைக் கடந்து, தலைநிமிர்ந்திருக்கிறார். சிதம்பரம் கீழவீதியில் அவர் நடத்திவரும் சுஜாதா தேநீர்க் கடையில், தேநீரை ஆற்றியபடியே பேச ஆரம்பித்தார் சுலோச்சனா.

என் கணவர் நடத்தி வந்த பெட்டிக்கடை இது. திடீரென்று அவர் நோயில் விழுந்தார். கணவர், குழந்தைகள், வியாபாரம் என்று எல்லாவற்றையும் நானே தனி ஆளாக நின்று கவனித்துக்கொள்ள வேண்டிய கடுமையான சூழல் வந்தது. கணவர் குணமாகிவிடுவார் என்ற தைரியத்தில் எல்லாவற்றையும் சமாளித்தேன். ஒருநாள் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். எத்தனை நாள் இப்படி உட்கார்ந்திருக்க முடியும்? குழந்தைகளை யார் காப்பாற்றுவார்கள்? என்று பல கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன்.

இன்னொரு பக்கம் கடன்காரர்கள் பணம் கேட்டுத் தொந்தரவு செய்தார்கள். மனத்தைத் திடப்படுத்திக்கொண்டு, வியாபாரத்தைக் கவனிக்க முடிவெடுத்தேன். பெட்டிக்கடையுடன் தேநீர்க் கடையையும் வைத்தால் கூடுதல் வருமானம் கிடைக்கும். நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று திட்டமிட்டேன். அனுபவத்தின் மூலமே வியாபாரத்தில் உள்ள நெளிவு சுளிவுகளைத் தெரிந்துகொண்டேன் என்றபடி மின்னல் வேகத்தில் இயங்கிக்கொண்டிருந்தார் சுலோச்சனா.

அதிகாலை 4 மணிக்குக் கடைக்கு வந்துவிடுகிறார். டீ மாஸ்டர் இல்லையென்றால் தானே அந்த வேலையையும் சேர்த்துக் கவனித்துக்கொள்கிறார். மதியம் உணவு இடைவேளையில் சிறிது ஓய்வு கிடைக்கும். வியாபாரம் முடித்து வீட்டுக்குச் செல்ல இரவு 10 மணி ஆகிவிடும். நாள் முழுவதும் வேலை பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்தாலும் குடும்பம் நடத்துவதற்குப் போதுமான வருமானமும் இந்தத் தொழிலில் கிடைக்கிறது என்கிறார் சுலோச்சனா.

கணவரை இழந்த பெண்கள் மன ரீதியாகவும் பொருளாதர ரீதியாகவும் மிகவும் மன உளைச்சல் அடைகிறார்கள். பெண்கள் கல்வியுடன் ஒரு கைத்தொழிலையும் கற்றுக்கொள்ள வேண்டும். அப்போதுதான் பிறரை அண்டியிருக்காமல், நாமே நம் வாழ்க்கையை நடத்த முடியும். என் நிலைமையைப் புரிந்துகொண்ட மகளும் மகனும் பொறுப்புடன் இருக்கிறார்கள். மகன் சென்னையில் வேலை செய்கிறான். மகள் இன்ஜினீயரிங் படிக்கிறாள்.

என் கணவர் செய்ய வேண்டிய அனைத்தையும் நான் நிறைவேற்றிவருகிறேன் என்பதை நினைக்கும் போது நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படுது என்கிறார் கடின உழைப்பாளர் சுலோச்சனா.

Banner
Banner