அறிவியல்

இதயத்துக்கு ஒரு ‘பிளாஸ்திரி’

மாரடைப்பு வந்தவர்களுக்கு, இதயத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி காயமடைந்து, செயல்படாமலேயே இருக்கும். இதயத்தின் மற்ற பகுதி செயல்பட்டு, ஒரு பகுதி செயல்படாமல் இருப்பது, இதயத் துடிப்பின் லயத்தை பாதிப்பதோடு, காலப்போக்கில், ‘அரித்மியா’ போன்ற குறைபாடுகள்  வரலாம்.

இதயத்தின் செயல்படாத பகுதியை செயல்பட வைக்க, இங்கிலாந்தின் இம்ப்பீரியல் கல்லுரி மற்றும் ஆஸ்திரேலி யாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி யாளர்கள் ஒரு பிளாஸ்திரியை கண்டுபிடித்திருக் கின்றனர்.

கடல் வாழ் இறால் வகை ஒன்றின் ஓட்டிலிருந்து எடுக்கப் பட்ட, ‘சிடோசான்’, ‘பாலிஅனிலின்’ என்ற மின்சாரத்தை கடத்தும் திறனுள்ள பாலிமர் மற்றும் தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட, ‘பைடிக்‘ அமிலம் ஆகிய பொருட்களை கலந்து, இந்த இதயத்திற்கான பிளாஸ்திரியை ஆராய்ச்சி யாளர்கள் உருவாக்கி இருக்கின்றனர். இதயம் துடிப்பது, இதயமே உற்பத்தி செய்யும் சிறிய அளவினாலான மின்சாரத்தால் தான்.

எனவே, இந்த பிளாஸ்திரியை இதயத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் ஒட்டும்போது, மற்ற பகுதியிலிருந்து அப்பகுதிக்கும் மின்சாரம் கிடைத்து துடிப்பு உருவாகிறது. இந்த பிளாஸ்திரி இதயத்தின் தசைகளோடு கலந்துவிடாது என்றும், இதை தையல் போட்டு ஒட்ட வேண்டியதில்லை என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதயத்தின் மீது பிளாஸ்திரியை வைத்து, பச்சை நிற லேசர் கதிர்கள் மூலம் லேசாக பொசுக்கினால் அது ஒட்டிக்கொள்ளும். எலிகள் மீது இந்த பிளாஸ்திரி வெற்றி கரமாக வேலை செய்வதாகவும், விரைவில் மனித இதயத்தின் மீது சோதனைகள் துவங்கவிருப்பதாகவும் ஆராய்ச்சி யாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இக்கண்டுபிடிப்பு, ‘சயன்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியாகி உள்ளது.

சொன்னதைக் கேட்கும் ரோபோ கரம்!

பெரிய தொழிற்சாலைகளில் தான், ரோபோக்களை பயன்படுத்த முடியும் என்ற நிலையை மாற்ற, ஒரு சீன நிறுவனம் முன்வந்திருக்கிறது.

இந்நிறுவனம் உருவாக்கிய, ‘டூபாட் எம்-1’ என்ற ரோபோ கரம், சிறிய நிறுவனங்களில், திரும்பத் திரும்ப செய்ய வேண்டிய வேலைகளை, செம்மையாக செய்கிறது. டூபாட் ரோபோவை, விண்டோஸ், மேக் அல்லது லினக்ஸ் கணினிகள் மூலம் நிரல்களை எழுதி இயக்க முடியும்.

52 செ.மீ., உயரம் உள்ள இந்த ரோபோவால், 40 செ.மீ., துரம் வரை கையை நீட்ட முடியும். இந்த ரோபோவுக்கு, 1.5 கிலோ எடையுள்ள பொருட்களை துக்கும் பலம் உண்டு. திருகாணிகளை மாட்டி திருகுவது, பொருட்களை இடம் மாற்றி வைப்பது, வார்ப்பு மற்றும் வடிவமைப்பில் உதவுவது போன்ற வேலை களுக்கு நிரல்களை எழுதி பழக்கினால், டூபாட் அச்சு மாறாமல் அப்படியே திரும்பத் திரும்ப செய்யும். இதனால், சிறு பட்டறைகள் முதல் பொருட்களை கையாளும் சரக்கு கிடங்குகள் வரை இந்த ரோபோவை பயன்படுத்தலாம்.

லேசர் வெல்டிங் சாதனத்தை, டூபாட்டின் கரங்களில் பொருத்தி விட்டால், துல்லியமாக வெல்டிங் செய்யவும் இது தயாராக இருக்கிறது.

டூபாட்டுடன் இணைக்கப்பட்டுள்ள கேமராவால், இந்த ரோபோ கையாளும் பொருட்களின் நிறம், அளவு போன்றவற்றை உணர முடியும். வரும், 2017 மே மாதம் விற்பனைக்கு வரவுள்ள டூபாட்டின் விலை, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல்! தற்போது, கிக் ஸ்டார்ட்டர் தளத்தில் பலரது ஆதரவை பெற்றுள்ளது இந்த ரோபோ கரம்!


காசினியின் கடைசி பயணம்!    

அமெரிக்க விண்வெளி அமைப்பான, ‘நாசா’ அனுப்பிய காசினி விண்கலம், சனி கிரகத்தை சுற்றியுள்ள வளையங்களை நெருங்கி அருமையான படங்களை எடுத்து அனுப்பியிருக்கிறது.

கடந்த சில வாரங்களாக, சனி கிரகத்தின் துருவங்களை படமெடுத்த காசினி,  தன் பார்வையை சனி வளை யங்களை நோக்கி திருப்பியது. இன்னும் சில வாரங்கள் அந்த விண்கலம், சனியின் பல வளையங்களை மிக அருகில் சென்று படம் பிடித்து அனுப்பும். இதுவரை பூமிக்கு இவ்வளவு தெளிவான, நெருக்கமான சனி வளையப் படங்களை எந்த விண்கலனும், தொலை நோக்கியும் படமெடுத்ததில்லை என, நாசா விஞ்ஞானிகள் தெரிவித்தனர். சனி கிரகத்தை விரிவாக ஆராய்ச்சி செய்வதற்காக, 1997இல் அனுப்பப்பட்ட காசினி விண்கலம், 18 ஆண்டுகள், 3 மாதங்களுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது.

அணு சக்தியால் இயங்கும் காசினி, சனி வளையங் களை மேலும் நெருக்கமாக கடந்து சென்று படங்களையும் தகவல்களையும் பூமிக்கு அனுப்பும். சனியை, சுற்றி வரும், ‘என்சிலாடஸ்’ என்ற நிலாவையும், காசினி நெருக்கமாக ஆராய்ந்து படங்களை அனுப்பியுள்ளது. காசினி விண்கலத்தை, வரும், 2017 செப்டம்பர் 15 அன்று, சனி கிரகத்தின் மீது மோதி எரித்துவிட விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.

காசினியின் மீது உயிரித் தொற்று ஏற்பட்டிருக் கலாம்என்பதால்தான் இந்த ஏற்பாடு என நாசா
தெரிவித்துள்ளது.


ரத்தத்தை சுத்திகரிக்கும் காந்தம்!

நோயாளிக்கு தரும் ரத்தத்தில் கிருமித் தொற்று இருந்தால், அது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும். ரத்தத்தில் கலந்துவிட்ட பாக்டீரியாக்களை வேகமாக பிரித்தெடுப்பது, மருத்துவர்களுக்கு சவாலான வேலை.

இதை எளிதாக்க, காந்தத்தை பயன்படுத்தலாம் என, சுவிட்சர்லாந் திலுள்ள, ‘எம்ப்பா’ ஆய்வுக்கூடம், ‘அடோல்பி மெர்க்கெல் இன்ஸ்டி டியூட்’ மற்றும் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் ஆகிய, மூன்று அமைப்புகளை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

ரத்தத்தில் கலந்து நச்சு ஏற்படுத்தக்கூடிய பெரும்பாலான பாக்டீரியாக்களை எதிர்க்கும் பல்திறன், ‘ஆன்டிபாக்டி’யை மருத்து வர்கள் வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். அந்த ஆன்டிபாக்டியை மிக நுண்ணிய இரும்புத் துகள்களில் பூசி, அத்துகள்களை ரத்தத்தில் கலப்பர். அதன் பிறகு நோயாளியின் உடலிலிருந்து அந்த ரத்தத்தை சுத்திகரிக்கும், ‘டயாலிசிஸ்’ இயந்திரத்தில் கொடுத்து காந்தப் புலத்திற்கு உட்படுத்துவர்.

இதனால் ரத்தத்தில் உள்ள இரும்புத்துகள்கள் உடனடியாக தனிப் படுத்தப்பட்டு விடும். தனிப்படுத்தப்பட்ட துகள்களில் பூசப்பட்டுள்ள ஆன்டிபாக்டிகள், பாக்டீரியாக்களையும் கவர்ந்து வரும் என்பதால், ரத்தம் துய்மையானதாகி விடும். விலங்கு ரத்தத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. எனவே, விரைவில் மனித ரத்தத் திலும் காந்த சுத்திகரிப்பு முறையை சோதிக்க ஹார்வர்டு மருத்துவர்கள் தயாராகி வருகின்றனர்.

சாயத்திலிருந்து சூரிய மின்சாரம்!

சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இப்போது பல புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிக மலிவானது, வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது; ‘பெரோவ்ஸ்கைட்’ என்ற பொருள் தான் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அண்மையில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள்,

பெரோவ்ஸ்கைட்டை பயன் படுத்தி உருவாக்கிய சூரிய ஒளி மின் அமைப்பு, மின் தயாரிப்பில் சாதனை படைத்துள்ளது. கால்சியம் டைட்டானேட் என்ற பொருளை அதிகம் கொண்ட மஞ்சள், பழுப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கும் தாதுவைத்தான், பெரோவ்ஸ்கைட் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பெரோவ்ஸ் கைட் தகடுகள் மூலம் சூரிய ஒளியின் சக்தியிலிருந்து, 12.1 சதவீத மின்சாரத்தை உற்பத்தி செய்துள்ளனர். அதாவது வெறும், 16 சதுர செ.மீ., பரப்பளவுள்ள பொரோவ்ஸ்கைட் தகடு இதை சாதித்திருக்கிறது.

இவர்கள் தயாரித்த பெரோவ்ஸ்கைட் கலவை, சுவற்றில் சாயம் போலவும் பூச முடிகிற அளவுக்கு வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது. பெரோவ்ஸ்கைட் தாதுக்களின் அமைப்பு நுண்ணிய மேடு பள்ளங்களைக் கொண்டவை. இதனால் அவற்றின் மேற்பரப்பளவு அதிகம். எனவே, அதிக சூரிய ஒளியை இவற்றால் உள்வாங்கி, மின்சாரமாக மாற்ற முடியும்.  

Banner
Banner