மருத்துவம்

மருத்துவம்

கண்களில் ஏற்படும் தற்காலிக எரிச்சல், அரிப்பு போன்றவற்றுக்குக் கை மருத்துவமாக நாமே சில சிகிச்சைகளைச் செய்யலாம்.  அதேநேரம், நாள்பட்ட பிரச்சினைகளுக்கு மருத்துவரையே நாட வேண்டும்.

சில எளிய முறைகள்:

> எப்போதுமே வெளியே போய்விட்டு, அலுவலகம் போய்விட்டு வீடு திரும்பிய பிறகு கண்களைத் தொடுவதற்கு முன் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவிவிடுங்கள். பொதுவாகக் கைகளிலிருந்துதான் நுண்கிருமிகள் கண்களுக்கு அதிகம் தொற்றுகின்றன.

> வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும். வெள்ளரியைச் சாப்பிடுவது மட்டுமல்லாமல், வட்டமாக நறுக்கிக் கண்களின் மேல் வைத்தால் கண் அரிப்பு, எரிச்சல் குறையும்.

> ரோஸ் வாட்டர் கண் அரிப்பைக் குறைக்கும். ரோஸ் வாட்டரை நேரடியாகப் பயன்படுத்தாமல், தண்ணீரில் கலந்து கண் இமைகளின் மேல் தடவலாம், கழுவலாம், துணியால் ஒத்தி எடுக்கலாம்.

> அதேபோல நல்ல, குளிர்ச்சியான பாலில் பஞ்சை நனைத்துக் கண் இமைகளின் மேல் ஒத்தி எடுக்கலாம்


தனிமனித உடல், மன ஆரோக்கியத்தில் புதிய புதிய சவால்களைத் தொடர்ச்சியாக எதிர்கொண்டு வருகிறோம். 25-30 ஆண்டுகளுக்கு முன்னால் எங்கேயோ யாருக்கோ பாதித்திருக்கிறது என்று சொல்லிக் கேள்விப்பட்ட புற்றுநோய், மாரடைப்பு, உடல்பருமன் நோய், நீரிழிவு நோய், மூட்டுவலி போன்ற நாள்பட்ட நோய்கள் நமக்கும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள், வேண்டப்பட்டவர் களையும் சர்வ சாதாரணமாகப் பாதிப்பதை இன்றைக்குப் பார்க்கிறோம்.

பெருகிவரும் உடல் உழைப்பின்மை, உணவு முறை மாற்றம், தூக்கமின்மை, மன அழுத்தம், வேலைப்பளு, குடிப்பழக்கம், புகைத்தல், முதுமை, மரபு வழிக் குறைபாடுகள் எனப் பல்வேறு ஆபத்தான காரணிகளோடு இந்த நோய்களுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கருதப்படுகிறது. இவை எல்லாவற்றையும் விடச் சமீப காலத்தில் ஒரே இடத்தில் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் ஏற்படும் தீமைகளைப் பற்றி மருத்துவ ஆராய்ச்சி யாளர்கள் தீவிரமாக எச்சரித்துவருகின்றனர். சிகரெட் புகைப்பது எந்த அளவு உடலுக்குத் தீமை விளை விக்குமோ, கிட்டத்தட்ட அதே அளவுக்கு நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதும் தீமையை ஏற்படுத்துகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுவதால் இந்தப் பிரச்சினை கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக மாறியுள்ளது.

நம்முடைய அன்றாட வாழ்க்கை நடவடிக்கைகளைச் சற்றே உற்று நோக்கினால் வீட்டில், பணியிடத்தில், தினசரிப் பயணங்களில் பெரும்பாலான நேரத்தை நாம் உட்கார்ந்திருப்ப திலேயே செலவு செய்வதை அறிய முடியும். அதாவது நாம் நடமாட்டத்துடன் இருக்கும் நேரம் மிகமிகக் குறைவு. ஒருவர் ஆரோக்கியமாக இருப்பதற்கு, ஒரு நாளைக்கு அதிகபட்சம் எவ்வளவு நேரம் உட்கார்ந் திருக்கலாம் என்பது பற்றி இன்னும் தெளிவாகத் தெரியா விட்டாலும், உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது உடல்நலனுக்கு நன்மை தருகிறது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

வெகு நேரம் உட்கார்ந்திருக்கும்போது, நம்முடைய உடல் ஒரே இடத்தில் அசைவற்று இருப்பதால், ஒரு செயலற்ற (இயக்கமற்ற) நிலைக்குத் தள்ளப்படுகிறது; அதனால் உடலில், ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவுகள் சீராக இருப்பதில்லை. அத்துடன் தசைகளும் எலும்புகளும் வலுவிழக்கின்றன. குறிப்பாகக் கழுத்து - முதுகுப் பகுதி தசைகள் இறுகி வலியை உண்டாகுவது, உடலில் கொழுப்புத்தன்மை கூடி உடல் எடை அதிகரிப்பதுடன் உடல்பருமனுக்கும் வழிவகுக்கிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் இதய நோய்கள் ஏற்படும் ஆபத்து 147% சதவீதமும், நீரிழிவு நோய் ஆபத்து 112% சதவீதமும், இதய நோய்களால் ஏற்படும் மரணங்கள் 90% சதவீதமும், மற்ற வகைக் காரணங்களால் ஏற்படும் மரணங்கள் 49% சதவீதமாகவும் அதிகரிக்கக் கூடும் என்று உலகம் முழுவதும் எட்டு லட்சம் பேரிடம் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளின் கூட்டு முடிவு அறிவிக்கிறது. இந்த ஆய்வு 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியான ‘ என்ற இணைய மருத்துவ ஆராய்ச்சி நூலில் வெளியாகியுள்ளது.

எப்படிக் குறைக்கலாம்?

முதலில், எந்தெந்த வேலைகளின்போது நாம் அதிக நேரம் உட்கார்ந்திருக்கிறோம் என்பதைத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இந்தப் புரிதல், அடுத்த கட்டத் தடுப்பு நடவடிக்கைக்கு நம்மைத் தயார்படுத்தும். உடல் உழைப்பின்றி நமக்கு நாமே கேடு விளைவித்துக் கொள்ளும் நேரம் வீட்டில் தொலைக்காட்சி அல்லது கணினி/மடிக்கணினி முன் மணிக் கணக்கில் விழுந்து கிடக்கும் நேரம்தான். அதேபோல், அலுவலகத்தில் நேரம் போவதே தெரியாமல் உட்கார்ந்து வேலை செய்வது, தொலைவான பயணங்களின்போது, சாட் செய்யும்போது என நம்மையும் அறியாமல் நமது உடலை பொம்மை’ போன்ற செயல்படாத நிலைக்குத் தள்ளிக்கொண்டே இருக்கிறோம்.

நம்முடைய உடல்நலனைப் பாதுகாப்பதை ஒவ்வொரு நாளும் புறக்கணித்து அல்லது தள்ளிப்போட்டு, திடீரென்று பெரும் நோயை எதிர்கொள்வதற்குப் பதிலாக, ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளுடன், உடற்பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அத்துடன் நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதை முடிந்த மட்டும் குறைப்பதையும், உடல்நலப் பராமரிப்பில் அத்தியாவசியக் கடமையாகக் கொள்ள வேண்டும்.

உட்கார்ந்திருப்பதைக் குறைக்க

சின்னச் சின்ன உடலியக்க நடவடிக்கைகள் மூலம் நமது உடலைத் தொடர்ச்சியான இயக்கத்தில் வைத்துக் கொண்டு, உட்கார்ந்திருக்கும் நேரத்தைக் குறைப்பது ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கு அடிப்படையானது.

அதற்கு, எளிதாகப் பின்பற்றக் கூடிய சில வழிகள்:

குறைந்தது அரை மணி நேரத்துக்கு ஒரு முறை உங்களுடைய இருக்கையை விட்டு எழுந்து 2-3 நிமிடங்கள் நடந்துவிட்டு உட்காரலாம்.

# கைபேசியில் பேசும்போது நின்று கொண்டோ அல்லது நடந்து கொண்டோ பேசலாம்.

# வாய்ப்பு இருக்கும் இடங்களில் உட்கார்வதற்குப் பதிலாக நிற்க முயற்சிக்கலாம்.

# பணியிடத்தில், அடுத்த அறையில், மாடியில் அல்லது பக்கத்துக் கட்டிடத்தில் உள்ள உங்கள் நண்பரைத் தொலைபேசியில் தொடர்புகொள்ளாமல் நேரில் சென்று பார்த்துப் பேசலாம்.

# அலுவலக உதவியாளரிடம் தேநீர், காபி வாங்க அனுப்பாமல் நீங்களே சென்று பருகலாம்.

# லிப்ட்’டுக்கு பதிலாகப் படிக்கட்டுகளைப் பயன்படுத்தி நடக்கலாம்.

# தொலைக்காட்சி விளம்பர இடைவேளையின்போது, துணி மடிப்பது, சோபா கவரை மாற்றுவது, இஸ்திரி போடுவது போன்ற வேலைகளை நின்றுகொண்டு செய்யலாம்.

# குடும்பத்திலுள்ள அனைவரும் ஒன்றாக முடிவு செய்து, தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைங்கள். அதற்கு மாற்றாகப் பூங்கா, கடற்கரை போன்ற பொது இடங்கள், பொழுதுபோக்குப் பகுதிகளுக்கு ஒன்றாக நடந்து சென்று வரலாம்.

# குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சி, கணினி, நோட் பேட் போன்றவற்றின் முன்பாக உட்கார்ந்து கொண்டே இருப்பதால் ஏற்படும் ஆரோக்கியக் கேடுகளை விளக்கிக் கூறுங்கள்; ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் அவற்றைப் பயன்படுத்தலாம் என்பதை முன்கூட்டி முடிவு செய்யலாம்.

# குழந்தைகளின் பிறந்தநாள் மற்ற மகிழ்ச்சியான தருணங்களின்போது பரிசளிப்பதற்குச் சைக்கிள், கிரிக்கெட் மட்டை, டென்னிஸ் மட்டை, ஸ்கேட்டிங் செட், யோகா, நடன வகுப்புகள் போன்ற ஆரோக்கியமான தேர்வுகளைக் கருத்தில் கொள்ளலாம்.

# வீட்டு வேலைகளில் உங்களுக்கு உதவுவதற்கும், தாங்களே சுய-பராமரிப்பு செய்துகொள்ளவும் குழந்தை களைப் பழக்கலாம், இது அவர்களைச் சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

பட்டாணியில் கிடைக்கும் சத்துகள்

பட்டாணியில் கரையும் நார்ச்சத்து, கரையாத நார்ச்சத்து அதிகம் உண்டு. ஒரு கோப்பைப் பட்டாணியில் 19 கிராம் நார்ச்சத்து இருக்கும். நார்ச்சத்து குடலைத் தூய்மைப்படுத்தக்கூடியது.

ஒரு கோப்பைப் பட்டாணியில் 16 கிராம் புரதச் சத்து இருக்கிறது.  பட்டாணியில் கால்சியம், இரும்புச்சத்து, செம்பு, துத்தநாகம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், மக்னீஷியம் போன்ற கனிமச்சத்துகள் உண்டு.

பட்டாணியில் கொழுப்பு குறைவு. அதுவும் பெரும்பாலும் நல்ல கொழுப்பு.

இதிலுள்ள பைட்டோஸ்டீரால் உடலின் கெட்ட கொழுப்பு அளவை குறைத்து எலும்பை வலுப்படுத்தக் கூடியது. எலும்பு வலுவிழப்பு நோயை (ஆஸ்டியோ போரோசிஸ்) குறைக்கும். நரம்புச் சிதைவைக் குறைத்து அல்சைமர் நோயையும் மட்டுப்படுத்தும்.

செரிமானத்தை மேம்படுத்துவதாலும், விரைவாகச் சாப்பிட்ட நிறைவைத் தருவதாலும் எடை குறைப்புக்கும் பட்டாணி உதவும்.

நீரிழிவைக் குறைக்கும் பழுப்பு அரிசி!

பழுப்பு அரிசி அல்லது பிரவுன் ரைஸ் எனப்படும் அரிசியின் மேல் உள்ள தவிட்டு உறை பாலிஷ் செய்து நீக்கப்படாமல் இருப்பதால் பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. பழுப்பு அரிசிப் பயன்பாடு தற் போது அதிகரித்துவருகிறது. வாழ்க் கைமுறை சீர்கேடுகளால் பரவும் நோய்களுக்குத் தீர்வளிக்கும் தன்மை பழுப்பு அரிசிக்கு உண்டு. அது தரும் முக்கிய ஆரோக்கியப் பலன்கள் என்னென்ன?:

பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம், இது செரிமானத்தைத் தூண்டுகிறது. அதனால் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் பழுப்பு அரிசியை உட்கொள்ளலாம். உடலில் உள்ள கொழுப்பு அள வை பழுப்பு அரிசி சீர்ப்படுத்தும். இதன் மூலம் இதயக் கோளாறுகளைத் தள்ளி வைக்கலாம்.  பழுப்பு அரிசியில் உள்ள அதிக மாங்கனீசு சத்து, நரம்பு மண்டலத்தையும் இனப்பெருக்க உறுப்புகளையும் பலப்படுத்தக் கூடியது.

பாலிஷ் செய்யப்பட்ட வெள்ளை அரிசிக்குப் பதிலாகப் பழுப்பு அரிசி, சர்க்கரையை மெதுவாக வெளியிடுவதால் நீரிழிவு நோயாளி களுக்கு நல்லது. ரத்தச் சர்க்கரை அளவை நிலைப் படுத்துவதால், நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த அரிசியை மருத்துவர்கள் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள். அதேநேரம், இந்த அரிசி யையும் அளவாகவே சாப்பிட வேண்டும்.


இதயத்தின் நண்பன்

தமிழகத்தில் அதிகப் புழக்கத்தில் இல்லாத பயறு வகை சிவப்பு ராஜ்மா. கிடைக்கும் பயறு விதைகளிலேயே மிகப் பெரியதும்கூட. சிவப்பு, பழுப்பு கலந்த நிறத்தில் சிறுநீரகத்தைப் போலவே இருக்கும். அதனால் ஆங்கிலத்தில் கிட்னி பீன்ஸ் எனப்படுகிறது. வட இந்தியாவிலும் மெக்சிகோவிலும் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. சப்பாத்தி போன்ற வட இந்திய உணவுகளுடன், சமீபகாலமாக இந்தப் பயறு வகையும் பிரபலமாகியுள்ளது.

பயன்பாடு: பெரிதான இந்தப் பயறு விதையை, மிக நீண்ட நேரம் ஊற வைக்க வேண்டும், இல்லையென்றால் வேகாது. இந்தப் பயற்றின் தோலில் சில நச்சுப்பொருட்கள் இருக்க வாய்ப்பு உண்டு. வேக வைக்கும்போது இது வெளியேறி விடும்.

சிவப்பு ராஜ்மாதான் பரவலாகக் கிடைக்கிறது. இது சாலட், பிரட்டல், குழம்பு, கெட்டிக்குழம்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இதைத் தனியாகச் சாப்பிடுவதைவிட, மற்றத் தானிய உணவு வகைகளுடன் சேர்த்துச் சாப்பிடும்போது ராஜ்மாவில் உள்ள புரதம் முழுமையாக உட்கிரகிக்கப்படும்.

ஊட்டச்சத்து: ராஜ்மாவில் பொட்டாசியம், மக்னீசியம் போன்ற கனிமச்சத்துகள் அதிகம். இதில் இருக்கும் நார்ச்சத்து, கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கக் கூடியது.  இதிலுள்ள அதிகப் புரதம், ரத்தசர்க்கரை அளவை மெதுவாக அதிகரிக்கும். அதன்மூலம் உடலின் ரத்தசர்க்கரை அளவை ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம்.

இதில் உள்ள இரும்புச்சத்து உடலுக்கு அதிகச் சக்தியைத் தரும், செரிமானத்துக்கும் உதவும். இதைத் தொடர்ந்து பயன்படுத்திவந்தால் இதயத்தை வலுப்படுத்தும். இதிலுள்ள ஃபோலேட், இதய நோய்களுக்கு ஒரு காரணியான  அளவை குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் தவிர்க்க, இவற்றைச் சாப்பிடாதீங்க!

பாரம்பரிய உணவு, இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்களைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தவரை கொடிய நோய்களுக்கு உலகில் பெரிய வேலையில்லாமல் இருந்தது. துரித உணவு, ரெடிமேட் உணவு, சத்தற்ற சக்கை உணவு உலகை ஆக்கிரமிக்கத் தொடங்கிய பிறகு நோய்கள் கட்டுப்பாடில்லாமல் வளர ஆரம்பித்தன. இன்று எந்த வித்தியாசமும் இன்றி யாருக்கு வேண்டுமானாலும் புற்றுநோய் வருகிறது. இதற்கு முக்கியக் காரணம்
மாறிவிட்ட உணவுப் பழக்கம்தான்.

உலகச் சுகாதார நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்பட்டுவரும் புற்றுநோய்க்கான சர்வதேச ஆராய்ச்சி முகமையும் (அய்.ஏ.ஆர்.சி.) இதை உறுதிப்படுத்தியிருக் கிறது. மனிதர்களுக்குப் புற்றுநோயை உண்டாக்கும் உணவுப் பொருட்களின் பட்டியலை அந்த அமைப்பு ஆய்வு செய்து வெளியிட்டிருக்கிறது. அந்த உணவு வகைகள் என்னென்ன?

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

இதைத் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 18 சதவீதம் அதிகரிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இறைச்சியைப் பதப்படுத்தச் சோடியம் நைட்ரேட், சோடியம் நைட்ரைடு என இரண்டு வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இறைச்சியில் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் இருப்பதாக அய்.ஏ.ஆர்.சி. வகைப்படுத்தி யுள்ளது.

மைக்ரோவேவ் பாப்கார்ன்

பாப்கார்ன் சாப்பிடுவது தவறான விஷயமல்ல. ஆனால், மைக்ரோவேவ் பாப்கார்ன் என்றால் எச்சரிக்கைத் தேவை. இந்த வகையான பாப்கார்ன் பெர்ஃப்ளூரெக்டனிக் என்ற அமிலத்துடன் இணைந்து உருவாக்கப்படுகிறது. இதில் சுவை மற்றும் மணத்துக்காகச் சேர்க்கப்படும் சுவையூட்டிகள் சூடாக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைகின்றன. இதைச் சாப்பிடும்போது நுரையீரல் கோளாறு, மலட்டுத்தன்மை, புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

சுத்திகரிக்கப்பட்ட வெள்ளை மாவு: மாவு இல்லாத உணவு வகைகள் மிகக் குறைவு. கடைகளில் பேக்கிங் செய்யப்பட்ட மாவு வகைகள் கிடைக்கின்றன. பார்ப்பதற்கு வெள்ளையாகத் தெரியும் இந்தச் சுத்திகரிக்கப்பட்ட மாவில் ஊட்டச்சத்து ஒரு சதவீதம்கூடக் கிடையாது. மாவை வெண்மையாக்க குளோரின் காஸ் பயன்படுத்தப் படுகிறது. இப்படிச் செயற்கையாக வெண்மையாக்கப்படும் மாவுகளில் கிளைசெமிக் அளவு அதிகம், இது ரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்யக்கூடியது.

இன்சுலின் உருவாவதைத் தடுக்கவும் செய்யலாம். இதுபோன்ற மாவு வகைகள் உடலில் புற்றுநோய் செல்களை வளரச் செய்யக்கூடிய சாத்தியம் அதிகம்.

சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை (ஜீனி)

புற்றுநோயை உருவாக்கும் மிகப் பெரிய காரணிகளில் ஒன்று சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை. அதிக அமிலம் உள்ள உணவும் சர்க்கரைதான். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகமாக உட்கொள்வதன் மூலம் உடல்பருமன் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். உடலில் தொடர்ந்து சேரும் அதிகக் கொழுப்பு, பல வகைப் புற்றுநோய்கள் உருவாகக் காரணமாக இருக்கிறது.

உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவு

உணவில் உப்பு மிகவும் முக்கியமான ஒரு பொருள். தினசரி உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பு காரணமாக வயிற்றுப் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். உப்பில் உள்ள ஹெலிகோபேக்டர்பைலோரி என்ற பாக்டீரியா, உடல் செயல்திறனை அதிகப்படுத்தக் கூடியது. இதன் காரணமாக வயிற்று எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு, பின்னர் அதுவே வயிற்றுப் புற்றுநோயாக உருவெடுக்கலாம்.

சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

உணவு பொருட்களில் மிக ஆபத்தான ஒன்றாக மாறி வருகின்றன சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் வகைகள். எண்ணெயைக் கெட்டியாக மாற்ற ஹைட்ரஜன் சேர்க்கப் படுகிறது. சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்களிலிருந்து தயாரிக்கப்படும் வனஸ்பதி நம் நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது விலை குறைவாக இருப்பதும் அதிகப் பயன்பாட்டுக்கு முக்கியக் காரணம். இந்த வகையான எண்ணெய் பயன்பாட்டிலிருந்து உடலில் சேரும் கொழுப்பு, மார்பகப் புற்றுநோய் ஏற்பட வழிவகுக்கலாம்.

பண்ணை மீன்கள்

பண்ணை மீன் வளர்ப்பு முறை இன்று பெரிய அளவில் வளர்ந்துவருகிறது. இங்கே வளர்க்கப்படும் மீன்களில் பாலிகுளோரி னேனட் பிப்ஹெனைல்ஸ் இருப்பதாகக் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இந்த வேதிப்பொருள், புற்று நோய்க்கான காரணிகளில் ஒன்று. பண்ணைகளில் வளர்க்கப்படும் மீன்களின் வளர்ச்சிக்காகப் பூச்சிக் கொல்லிகள், ஆன்டிபயாட்டிக்குகள் பயன்படுத்தப் படுகின்றன. இவற்றிலும் புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினொஜென் பொருள் உள்ளது.

சோடா குளிர்பானம்

ஊட்டச்சத்து எதுவுமில்லாத சர்க்கரை, கலோரிகள் நிரம்பிய மென்பானங்களை பலரும் விரும்பி பருகு கின்றனர். ஆனால், இது உடலுக்கு மிகவும் தீங்கானது. தொடர்ந்து இந்தக் குளிர்பானங்களைப் பருகிவந்தால் இன்சுலின் அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இது கணையப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை இரண்டு மடங்காக அதிகரிக்கலாம். குளிர்பானத்துக்கு வண்ண மூட்டும் சர்க்கரையும் புற்றுநோய் வளர்ச்சிக்கான சாத் தியத்தை அதிகரிக்கிறது.

மரபணு மாற்றப்பட்ட உணவு

மரபணு மாற்றப்பட்ட உணவுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படுமா என்ற கேள்விகள் எப்போதும் முன்வைக்கப்படுகின்றன. மரபணு மாற்றப்பட்ட சோளம் பிரான்சில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் புற்றுநோய் கட்டிகள், கல்லீரல் பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்தக்கூடிய ஆபத்துகள் இருப்பது கண்டுபிடிக் கப்பட்டுள்ளது.

ஃபிரெஞ்ச் ஃபிரைஸ்

எண்ணெயில் பொரிக்கப்படும் ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் மற்றும் உருளைக் கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றில் அக்ரில மைட் என்ற ரசாயனம் இருப்பது தெரியவந்துள்ளது. இது புற்றுநோயை உண்டாக்கக்கூடிய கார்சினோஜென் உடன் தொடர்புடையது. இதே வேதிப்பொருள்தான் புகைபிடித் தலிலும் உள்ளது. உணவில் அக்ரிலமைட் ஏற்படுவதற்கு அதிக வெப்பநிலையில், அது பொரிக்கப் படுவதே காரணம். பொரிக்கப்படும்போது ரசாயன மாற்றம் அடைந்து உணவில் தேவையற்ற அமினோஅமிலம் உண்டாகி விடுகிறது.

சூடான பானங்கள் ஆபத்தா?

சூடான காபியைப் பருகினால் புற்றுநோய் ஏற்படு வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்பட்டு வந்தது. ஆனால், இதை ஆய்வு செய்த புற்றுநோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை (அய்.ஏ.ஆர்.சி.), சூடான காபியைப் பருகுவதால் புற்றுநோய் ஏற்படும் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று கூறியுள்ளது. ஆனால், எந்த ஒரு திரவ உணவையும் 65 டிகிரி செல்சியஸுக்கு மேலான சூட்டில் பருகினால், புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்ப தாகக் கூறியுள்ளது. சூடான திரவ உணவைச் சாப்பிடும் போது தெண்டையில் பாதிப்பு ஏற்பட்டு உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படலாம் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

அளவோடு இருந்தால் நலம்

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள உணவுப் பொருட் களைச் சாப்பிடுவதால் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவா என்பது குறித்து அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் வலிநிவாரணச் சிறப்பு மருத்துவர் அசார் உசைன் கூறியதாவது:
வெள்ளை மைதா, சிவப்பு இறைச்சி ஆகியவற்றை அதிகம் உண்ணும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் மிக அதிகம்.

இதேபோல எண்ணெயைத் திரும்பத் திரும்பச் சூடாக்கும்போது கார்பன் பொருள் அதிகரித்துவிடும். ரெடிமேட் உணவைப் பாதுகாக்கவும், துரித உணவு வகைகளில் சுவையைக் கூட்டவும் நிறைய வேதிப்பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

வேதிப்பொருட்கள் அளவு அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்தால், பரவாயில்லை. கூடுதலாகச் சேர்க்கப்படும்போது புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் இல்லாமல் இல்லை. அதேநேரம் மருத்துவப் புள்ளிவிவரங்களின்படி, இந்த உணவைச் சாப்பிடு வோருக்குப் புற்றுநோய் வராமலும் இருந்திருக்கிறது. இவற்றைச் சாப்பிடாமல் இருப்பவர்களுக்கும் புற்றுநோய் வந்திருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. எதுவுமே அளவாக இருப்பது தான் மிகவும் நல்லது.

நோயற்ற வாழ்வுக்கு வாழை இலை சாப்பாடு!

திருமணம், வீட்டு சிறப்பு விழாக்களில் மட்டுமே வாழை இலையில் உணவு பரிமாறப்படுவதைப் பார்க்க முடிகிறது. சில இடங்களில் வாழையிலைகள் ஓரங்கட்டப்பட்டு, தீமை விளைவிக்கும் நெகிழித் தட்டுகளும் காகிதங்களும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கிவிட்டன. ஆனால், வாழை இலையின் மகத்துவத்தைப் பன்னெடுங்காலம் முன்பே உணர்ந்து, உடல் ஆரோக்கியம் காக்க அதை எல்லா வேளையிலும் பயன்படுத்திய பண்பாடு நம்முடையது.

வாழை இலையில் சாப்பிடத் தொடங்கிவிட்டால்போதும், தேகம் பளபளப்படையும். வாழை இலையில் உணவருந்துவதால், உடலில் உள்ள நச்சுகள் வெளியேற்றப்பட்டு உடல் தூய்மையடையும்.

உடலில் பித்தத்தின் அளவை குறைக்கவும், உயர் ரத்தஅழுத்தம், தலைவலி, வயிற்றுப் புண், தோல் நோய்களின் தீவிரம் குறையவும் வாழை இலையில் உணவருந்தலாம். வாழை இலைக்குக் குளிர்ச்சி யுண்டாக்கும் தன்மை இருப்பதால், பித்தம் சார்ந்த நோய்கள் அனைத் தும் சாந்தப்படும். நோய்களைத் தவிர்க்க ஆசைப்படு பவர்களுக்கு `வாழை இலை உணவு அற்புதமான தேர்வு.

வாழை இலையில் சாப்பிட்டுவந்தால் நல்ல செரிமானம் உண்டாகிப் பிரச்சினைகள் மறையும். மந்தத்தைப் போக்கும் குணம், வாழை இலைக்கு உண்டு. சூடான உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிடும்போது, அதில் உண்டாகும் அற்புதமான இயற்கை மணமே பசி உணர்வைத் தூண்டிச் செரிமானச் சக்தியை அதிகரிக்கும். உணவின் மணத்துக்கும் பசி உணர்வுக்கும் நெருங்கிய தொடர்புண்டு.

நம்முடைய முதன்மை உணவான சோறும், மரக்கறி உணவு வகைகளையும் தாராளமாக வைத்துச் சாப்பிட வாழை இலையைத் தவிரச் சிறந்த உண்கலம் வேறு இல்லை. உணவு செரிமானத்துக்குத் தேவையான துணைப்பொருட்கள் அனைத்தும் வாழை இலையில் உண்டு.

எந்தெந்த உணவுப் பொருட்களில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்ஸ் கொட்டிக் கிடக்கிறது எனத் தேடுவதற்குப் பதிலாக, விரும்பும் உணவு வகைகளை வாழை இலையில் வைத்துச் சாப்பிட்டால், தேவைக்கு அதிகமாகவே ஆன்ட்டிஆக்ஸிடண்ட் கிடைக்கும். உடல் செல்களின் அழிவைத் தடுக்கக்கூடியதும், நோய்கள் வராமல் பாதுகாக்கக் கூடியதுமான சிறந்த ஆன்ட்டி ஆக்ஸி டண்டான பாலி ஃபீனால்கள் வாழை இலையில் பொதிந்திருக் கின்றன.

உணவுப் பொருட்களின் சுவை தெரியாமல் திண்டாடும் `சுவையின்மை நோயாளிகளும் உடல் பலவீனமானவர்களும் வாழை இலையில் தொடர்ந்து புசித்துவந்தால், அறுசுவையையும் உணர்ந்து உடல் பலமடையும், விந்தணுக்களும் பெருகும்.

Banner
Banner