வரலாற்று சுவடுகள்

வரலாற்று சுவடுகள்

 

தோழர்களே! சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது ஆங்கிலத்தில் உள்ள சோஷலிசம் என்னும் வார்த்தைக்குத் தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும் சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்திற்கு ஒருவிதமான அர்த்தத்தில் கையாளப்படுகிறது. அநேகமாக அந்த வார்த்தை அந்தந்த தேச நிலைமைக்கும், தகுதிக்கும், சவுகரி யத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்தபடிதான் பிரயோகிக்கப்படுகிறது. சில இடங்களில் சட்ட திட்டங்களுக்குக் கட்டுப்பட்டும், சில இடங்களில் சட்ட திட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகிறது.

ஆகவே சோஷலிசத்துக்கு இதுதான் அர்த்தம் என்று வரையறுக்க அவ்வார்த்தையில் எவ்விதக் குறிப்பும் இல்லை.

சில இடத்து சோஷலிசத்துக்கும், பொதுவுடைமை என்பதற்கும் பேதமே இல்லாமல் அர்த்தம் இருந்து வரு கிறது. சில இடங்களில் வெகுசாதாரண விஷயத்துக்கும் அப்பெயர் இருந்து வருகிறது. சில இடத்தில் பொது வுடைமை வேறாகவும், சமதர்மம் வேறாகவும் இருந்து வருகின்றது.

இங்கு சமதர்மம் என்கின்ற வார்த்தைக்குச் சமூகத் துறையிலும் பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் (அபேதமாய்) வாழவேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்து கொண்டு சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில் மற்ற நாட்டில் சமூகத் துறையில் நமது நாட்டில் உள்ளது போன்ற உயர்வு- தாழ்வு பேதாபேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றது. நமது நாட்டு சமுதாய உயர்வு தாழ்வானது பிறவியிலேயே வகுக்கப்பட்டு அதை மதத்தோடு பொருத்தி அதற்கு அரசியல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதல் படியாகும். அதனாலேயே பொருளாதார சமதர்மமே மனித சமூக சாந்திக்கு மருந்து என்று கருதி இருக்கும் நான் சமுதாயத்தில் வாழ்க்கையில் சமதர்மத்தை அபேதவாதத்தை முக்கியமாய் வலியுறுத்தி வருகிறேன்.

நிற்க பொதுவாகவே சமதர்மம் என்பது எந்த அர்த்தத்தில் இருந்தாலும் சமுதாயம் முக்கியமானாலும், பொருளாதாரம் முக்கியமானாலும் அதற்கு கடவுள் உணர்ச்சி மத நம்பிக்கை என்பவை எதிராகவே இருந்து வந்திருக்கின்றன. சர்வதேச சமதர்ம வாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும் மத நம்பிக்கையும் சமதர்மத்திற்கு விரோதமானது என்று தான் சொல்லியிருக்கிறார்கள். ஆதலால் எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்த வரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சியே செய்ய வேண்டியிருக்கிறது. ஜாதி பேதம் பிரிவு ஆகியவை ஒழிந் தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும் சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதிபேதமே பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் கொடுக்காமல் அடக்கி வருவதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வரு கிறது. எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்து விட்டாலும் நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகு சீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்குப் பொருளாதார சம தர்ம உணர்ச்சி ஏற்பட்டதற்குக் காரணமெல்லாம் அவர்களில் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி பொருளாதார சமதர்மத்தைச் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகிற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம் ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம் பொருளாதார சமதர்மத்துக்காகவே பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கின்றது என்றும் பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதரவான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்றும் சொல்லுகின்றோம்.  மதத்தைப் பற்றியோ மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப்  பற்றியோ பேசினாலும் அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும் அதை நாஸ்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாஸ்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

நாஸ்திகனாவதற்குக் கடவுள் இல்லை என்று கூட சொல்ல வேண்டியதில்லை. மதக் கொள்கையைப் பற்றி ஆராய்ச்சி செய்து பேசினாலே போதுமானதாக இருக்கிறது.

ஜாதிகள் கடவுளால் உண்டாக்கப்பட்டதாக - கடவுளால் கற்பிக்கப்பட்டதாக - கடவுளே சொன்னார் என்று மத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றது.

அந்த மத சாஸ்திரங்கள் வேதமாகவும், வேதம் போன்றதாகவும், கருதப்படுகின்றன. உதாரணமாக பகவத் கீதை என்பது இந்துக்கள் என்பவர்களுக்கு மிகப் புனிதமானதும் மேலானதுமான புஸ்தகம் என்று கொள்ளப்படுகின்றது.

மகமதியர்கள் கொரானை மதிப்பதைவிட கிறிஸ் தவர்கள் பைபிளை மதிப்பதைவிட கீதையை அதிக பக்தியாய் அநேக இந்துக்கள் மதிக்கிறார்கள். ஆனால் அப்புஸ்தகத்தில் நான்கு ஜாதிகளும், நான்கு பிரிவான ஜாதிப் பெயர்களும், அதற்குத் தனித்தனி வேலைக் கிரமங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. கீதை என்றாலே பகவான் வாக்கு என்று அர்த்தம்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று பேசுகிறவர்களில் கூட 100 க்கு 99 பேர்கள் கீதையைப் பகவான் வாக்கு என்று நம்பிக் கொண்டுதான்  இருக்கிறார்கள்! இந்நிலையில் இப்படிப்பட்ட மக்களால் ஜாதிப் பிரிவுகளுக்கு உள்ள மேல் கீழ் நிலைகளை எப்படி ஒழிக்க முடியும்? கீதை முறை தனது அல்ல என்றோ, கீதை கடவுள் சொன்னது அல்ல என்றோ, அப்படித்தான் கடவுளே சொல்லி இருந்தாலும் அதைப் பற்றிக் கவலை இல்லை என்றோ, சொல்லத் துணியாவிட்டால், சொல்ல தைரியமில்லாத மக்கள் யாவரையும் அந்தப்படி சொல்லத் தயார் செய்யாவிட்டால் ஜாதிப் பிரிவு ஜாதி வித்தியாசம் ஆகியவை எப்படி ஒழியும்? ஆகவே இந்தப்படி சொல்லும்படியான ஒருவன் கீதையையும், கிருஷ்ணனையும் நம்பும் மக்களால் நாத்திகன் என்று சொல்லப்படாமல் இருக்க முடியாது.

ஆதலால் நாஸ்திகனாகவோ நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ நாஸ்திகன் என்று அழைக்கப்படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது.

இது மாத்திரமல்லாமல் சர்வமும் கடவுள் செயல் என்னும் மனித சமூகத்தில் பிறவி மூலமாகவும் வாழ்வு மூலமாகவும் இன்று இருந்து வரும் பிரிவுக்கும் பேதத்துக்கும் உயர்வு தாழ்வுக்கும் கடவுளே பொறுப்பாளியென்றும், கடவுள் சித்தத்தினால்தான் அவற்றில் ஒரு சிறு மாற்றமும் செய்ய முடியும் என்று சொல்லப்படுமானால் அதை நம்பாமல் இருப்பது நாஸ்திகமானால் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதனும் நாஸ்திகராகத்தான் ஆக வேண்டும்.

ஏனெனில் செல்வவான்களிடம் இருக்கும் செல்வமும், பார்ப்பான் பாராட்டிக் கொள்ளும் உயர்ந்த ஜாதித் தத்துவமும், கடவுள் கொடுத்தது என்றும். கடவுள் சித்தத்தால் ஏற்பட்டது என்றும் சொல்லப்படுமானால் அந்தக் கடவுளை யார்தான் ஏற்றுக் கொள்ள முடியும்?

அதை யார்தான் நிலைத்திருக்க விட்டுக் கொண்டி ருக்க முடியும்? எந்த மாதிரியான மூடக்கடவுளும், எந்த மாதிரியான அயோக்கியக் கடவுளும், மனிதரில் ஒருவனை மேல் ஜாதியாக்கிப் பாடுபடாமல் ஊரார் உழைப்பில் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்படிக்கும் மற்றொருவனைக் கீழ் ஜாதியாக்கி பாடுபட்டு பாடுபட்டு சோம்பேறிகளுக்கு அழுதுவிட்டு பட்டினியாய், நோயாய், கட்டக் கந்தையற்று, இருக்க இடமற்றுத் திரியும்படி சொல்லி இருக்கவே முடியாது.

இந்தக் காரியங்களுக்குக் கடவுளைப் பொருத்து கின்றவர்களை யோக்கியர்கள் என்றோ, அறிவாளிகள் என்றோ யாராலும் சொல்ல முடியாது.

ஊரார் உழைப்பைக் கொள்ளைக் கொள்ளாமல் எவனும் பணக்காரனாக முடியாது.

நாட்டிலே சிலர் 10 லட்சம், 20 லட்சம் கோடிக்கணக் கான ரூபாய் சொத்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு இந்தப் பணம் ஏது? இவர்கள் படும் பாட்டுக்கு இவர்கள் அனுசரிக்கும் முறைக்கும் இவர்கள் நடந்து கொள்ளும் மாதிரிக்கும் எந்தக் கடவுளாவது இவ்வளவு பணம் கொடுத்திருக்க முடியுமா?

ஏதோ இதெல்லாம் அவரவர் பிரயத்தனத்தினால் தொழில் முறையினால், மன வலிமையினால் சம்பவங்களால் ஏற்பட்டதென்று சொல்லாமல் வேறு என்ன சொல்ல முடியும்?

இவ்வளவு பணம் இவர்களுக்குச் சேருவதற்கு  ஆதார மாயிருந்த முறையை  யார்தான் சரியான முறையென்று சொல்லிக் கொள்ள முடியும்? இவ்வளவு பணம் இவர்களுக்குக் கொடுத்தவர்களில் பெரும்பான்மை மக்கள் இன்று இருக்கும் நிலையை யார்தான்  நல்ல நிலை என்று சொல்ல முடியும்? இதையெல்லாம் மாற்ற வேண்டும் என்று சொல்லும்போது கடவுளையும், மதக் கொள்கைகளையும் கொண்டு வந்து குறுக்கே போட்டால், அக் கடவுளையும், மதத்தையும் ஒழிக்காமல் எப்படி இருக்க முடியும்?

மற்றும் கடன்பட்டு வட்டி கொடுத்த மக்களுடையவும் பாடுபட்டுப் பயனைக் கொடுத்த மக்களுடையவும் மனமும், வயிறும், வாயும் பற்றி எரிய எரிய அப் பணங்களைக் கோவில் கட்ட, சாசனம் செய்ய, சாமிக்குக் கிரீடம் செய்ய, கல்யாணம் செய்ய, தாசி வீட்டுக்குப் போக, தாசிகளை வைத்து உற்சவம் வாண வேடிக்கை செய்யப் பாழ் பண்ணப்படுமானால் யார்தான் சகித்துக் கொண்டு இருக்க முடியும்?  இந்த அக்கிரமங்களைப் பார்த்துக் கொண்டு எந்தக் கடவுள்தான் இருக்க முடியும்?

அப்படியும் ஒரு கடவுள் இருக்கிறது என்று சொல்லப்படுமானால் அப்படிப் பட்ட கடவுளை அழித்து ஒழித்து விடுவதில் யாருக்கு என்ன  நஷ்டம் வரும்?

அப்படிப்பட்ட கடவுளை யாரும் ஒழிக்க முடியாது என்று சொல்லப்படுமானால் அது ஒழிந்தது என்று ஒருவராவது ஏன் வருத்தப்பட வேண்டும்?

தோழர்களே, இதையெல்லாம் பார்க்கும்போது கடவுளைக் கற்பித்தது நல்ல எண்ணம் கொண்டு என்பதாக நம்ப நம்மால் முடியவில்லை.

சோம்பேறிக் கொள்ளைக் கூட்டங்கள் கொடுங் கோன்மைக்காரன், பேராசைக்காரன் முதலிய கூட்டத்தாரின் சுயநலனுக்குத்தான் பயன்படுகிறதே ஒழிய வேறு காரியத்துக்குக் கடவுள் பயன்படுவதே இல்லை. மனித சமூக வாழ்க்கை ஒழுக்கத்திற்கு  என்று கடவுள் சிருஷ்டிக்கப்பட்டிருக்குமானால் அப்படிப்பட்ட கடவுளைப் பற்றி அது இருந்தாலும் அது இல்லாவிட்டாலும் நமக்குக் கவலையில்லை.

இதுவரை எந்தக் கடவுளால் யாருக்கு எப்படிப்பட்ட ஒழுக்கம் ஏற்பட்டது என்று யாராவது சொல்லமுடியுமா? என்று கேட்கிறேன்.

கடவுளைச் சதாகாலம் கட்டியழுது அதனாலேயே ஜீவனம் நடத்தும் அர்ச்சகர்கள், குருக்கள் ஆகியவர்கள் முதலில் ஒழுக்கமாய் இருக்கிறார்களா? இவர்களுடைய ஒழுக்கக்கேடான காரியங்கள் நமக்குத் தெரியாதா?

கடவுளுக்காக 10 லட்சம் பணம் போட்டு கோவிலைக் கட்டிக் கும்பாபிஷேகம் செய்து அய்ந்து வேளை ஆறு வேளை பூசை செய்து மானியம் விட்ட கடவுள் பக்தர்களில் எவராவது ஒழுக்க மாய் யோக்கியமாய் நடக்கிறார்களா? கடவுளுக்காகவே சன்யாசியாய், குருவாய், சங்கராச்சாரியாய், தம்பிரானாய், முல்லாவாய், மவுலானாவாய் இருக்கிறவர்களிலாவது எல்லோரும் ஒழுக்க மானவர்கள் என்று சந்தேகமறச்  சொல்லத்தக்கவர்களாய் இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? இவர்கள் நிலையே இப்படி இருக்க கடவுள் நம்பிக்கை உள்ள சாதாரண பாமர மக்களிடத்தில் எப்படி ஒழுக்கம் யோக்கியதை எதிர்பார்க்க முடியும்?

எப்படியானாலும் கடவுளைப் பற்றிய எண்ணமே யாருக்கும் இருக்கக்கூடாது என்பதற்காக நான் பேச வரவில்லை. மனித சமூக சமதர்ம வாழ்வுக்குத் தடையாய் எந்தக் கடவுளும் இருக்கக் கூடாது என்றும் அப்படிப்பட்ட கடவுளை இருக்க விடக்கூடாது என்றும் தான் சொல்ல வருகிறேன். மனித வாழ்க்கைக்கும், பேதா பேதங்களுக்கும், கடவுள் சம்பந்தமில்லை என்று சொல்லும் பட்சத்தில் அக்கடவுளைப் பற்றி நமக்கு என்ன கவலை?

ஆகவே தோழர்களே! சமதர்மவாதிகள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்? அவர்கள் ஏன் நாஸ்திகர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்களாகிறார்கள்? என்பதை நீங்கள் உணரவேண்டும் என்பதற்காகவே இதை எடுத்துச் சொன்னேன்.

-1935 செப்டம்பர் முதல் வாரத்தில் தேவக்கோட்டையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய சொற்பொழிவு  (`விடுதலை’, 2.12.1951).

பார்ப்பனர்கள் மட்டுமே தடையல்ல

24.8.1930 - குடிஅரசிலிருந்து...

ராமனாதபுரம் ஜில்லா தேவஸ்தானக் கமிட்டியார் மேற்படி தேவதானத்திற்குக் கட்டுப்பட்ட குளம், கிணறு, ரோட்டு, பள்ளிக்கூடம் ஆகியவைகளில் யாரும் எவ்விதத் தடையுமில்லாமல் செல்லலாம் என்பதாக ஒரு தீர்மானம் கொண்டு வந்து ஏகமானதாக நிறைவேற்றி இருக்கின்றார்கள்.

அது மாத்திரமல்லாமல் மேற்படி தேவஸ்தானத் திற்குக் கட்டுப்பட்ட எல்லா கோவில்களிலும் தேவ தாசிகளின் ஊழியத்தை அடியோடு நிறுத்திவிட வேண்டும் என்றும் தீர்மானித்திருக்கிறார்கள்.

இவற்றிற்கும் மேலாக இன்னொரு முக்கியமான விஷயம் அக்கமிட்டியார் செய்திருப்பதென்னவென் றால் அக்கமிட்டியாரை சிறீவில்லிபுத்தூர் செங்குந்த வாலிப சங்கத்தாரும், ஜில்லா சுயமரியாதை சங்கத்தாரும் ஒரு விண்ணப்பத்தின் மூலம் அந்த ஜில்லாக் கமிட்டியின் ஆதிக்கத்திற்குட்பட்ட எல்லாக் கோவில்களிலும் இந்து மதத்தைச் சேர்ந்த எல்லா வகுப்பினருக்கும் பிரவேச உரிமை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட விண்ணப்பங்களை கமிட்டி கூட்டத்தில் யோசனைக் கொடுத்து ஆலோசித்து  அடியில் கண்ட விஷயங்களுக்கு பதில் தெரிவிக்கும் படி அக்கமிட்டிக்கு உட்பட்ட எல்லாக் கோவில்களின் டிரஸ்டிகளுக்கும் சுற்றுக்கடிதம் அனுப்பி இருக்கின் றார்கள். அவைகளாவன:-

1.  இந்துக்கள் எல்லோரும் கோவிலுக்குள் செல்லுவதுண்டா?

2. செல்லுமிடத்திற்கு வரையறையுண்டா?

3. எல்லோரும் செல்லாவிட்டால் அதன் காரணமென்ன?

4. ஜாதி காரணமாக யாராவது தடுக்கப்படு கிறார்களா?

5. தடுக்கப்பட்டால் அதற்குக் காரணம் உண்டா?

6. அக்காரணங்களுக்கு எழுத்து மூலமான ஆதாரம் இருந்தால் அதன் விபரம் என்ன?

7. ஜாதி வித்தியாசம் இல்லாமல் கோவிலுக்குள் யாரையும் விடுவது உங்களுக்குச் சம்மதமா? என்னும் விபரங்கள் கண்டு சுற்றுக் கடிதம் அனுப்பிக் கேட்டிருக் கிறார்கள்.

இவற்றிலிருந்து அத்தேவஸ்தானக் கமிட்டியின்  மனோபாவம் மக்களுக்கு பிறவியினால் உள்ள தடைகளை நீக்க வேண்டும் என்கின்ற கவலை யுடையதாயிருக்கின்றது என்பது நன்றாய் விளங்கு கின்றது.

இதுபோல தமிழ்நாட்டில் மற்றும் பல கமிட்டி களிலும் இவ்விஷயங்கள் கவனத்திற்கு வந்து தஞ்சை ஜில்லாவைச் சேர்ந்த கும்பகோணம் சர்க்கிள் கமிட்டியிலும் இம்மாதிரி ஒரு தீர்மானம் வந்து அதை அக்கமிட்டித் தலைவர் நிராகரித்து விட்டார்.

ஈரோடு சர்க்கிள் கமிட்டியிலும் இம்மாதிரி ஒரு தீர்மானம் வந்து நிறை வேறிற்றே ஒழிய அது அமலுக்கு வர அக்கமிட்டியார்களில் சிலர் எதிரிகளாய் இருந்து விட்டார்கள். அத்தீர்மானப்படி கோவிலுக்குப் போன ஆதி திராவிடர்கள் மீது ஏற்பட்ட கேசுங்கூட இன்னமும் ஹைகோர்ட்டில் பைசலாகாமல் இருக் கின்றது.

தமிழ் நாட்டில் இப்போது அநேகமாக எங்குமே இம்மாதிரியான ஒரு வித சமத்துவக்கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதை மறுக்க முடியாது.

ஆனாலும் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் கிளர்ச்சியினால் சமுக சமத்துவக்கிளர்ச்சி சற்று தளர்வுற்றிருக்கின்றதென்பதை நாம் மறைக்க முயலவில்லை. ஆயினும் பொதுவாகவே நமது நாட்டில் இவ்வித முற்போக்குகளுக்குப் பார்ப் பனர்கள் மாத்திரமே தடையாயிருக்கின்றார்கள் என்று நாம் சொல்லுவதற்கில்லை.

மற்றபடி அவர்கள் சூழ்ச்சியில் பட்டவர்களும், அவர்களைப் பின்பற்றி தாங்களும் அவர்களைப் போலவே பொதுஜனங்கள் முன்னால் உயர்ந்த ஜாதியார் என்கிற பெருமையை அடையலாம் என்று கருதி இருப்பவர்களும், பார்ப்பனரைப் போலவே பாமர மக்கள் உழைப்பினால் வாழ்ந்து கொண்டே இருக்கலாம்.

அதாவது மற்றவன் உழைப்பில் வாழலாம் என்பவர்களும் மக்கள் சமத்துவத்திற்கும் சுதந்திரத் திற்கும் எதிரிடையாகவே இருக்கின்றார்கள். இக் கூட்டத்தார்க்கு இப்போதைய அரசியல் கிளர்ச்சி சற்று உதவியாயிருப்பதால் அவர்கள் துணிவாக தங்கள் ஆதிக்கத்தைக் காப்பாற்ற முன் வந்து விட்டார்கள். பாமர மக்களுக்கும் போதிய அறிவும் ஆராய்ச்சியும்,

இன்னமும் ஏற்பட வில்லையாதலால் தங்களது சுதந்திரங்களுக்கும், சமத்துவத்திற்கும் சர்க்கார் காரண மென்று முட்டாள் தனமாய் நம்பிக்கொண்டு தங்களது முயற்சியையும் ஊக்கத்தையும் அத்துறையில் பாழாக்கி வருவதாலேயே இவர்களை ஏமாற்றுகின்றவர் களுக்குச் சிறிது கூட பயமில்லாமல் போய்விட்டது.

கல்யாண ரத்து தீர்மானம்

2.12.1930 - குடிஅரசிலிருந்து...

ஆந்திர மாகாண பெண்கள் மகாநாட்டில் விவாக ரத்து செய்து கொள்ளுவதற்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்றுபோலவே உரிமை இருக்கும் படியாக ஒரு தீர்மானம் பெண்களால் கொண்டு வரப்பட்டு, ஒரே ஒரு ஓட்டில் அத்தீர்மானம் தோல்வி யடைந்து விட்டதாகத் தெரியவருகிறது. அன்றியும் 3 மணி நேரம் அத்தீர்மானத்தின் மீது, பல பெண்கள் கூடி பலமான வாதப்பிரதிவாதம் நடந்ததாக காணப் படுகின்றது.

தீர்மானம் தோற்று விட்டாலும்கூட இந்தச் சேதி நமக்கு மிகவும் மகிழ்ச்சியையும், பெண்கள் விடுதலையில் நமக்கு நம்பிக்கையையும் கொடுக் கின்றது.

ஏனெனில் கலியாண விடுதலை, விவாகரத்து என்கின்ற வார்த்தைகளைக் காதினால் கேட்கவே நடுங்கி கொண்டிருக்கும் கோடிக்காணக்கான, ஆண் களுக்கு அடங்கி  அடிமையாய்க் கிடந்து வந்த பெண்கள் கைதொட்டு தாலிகட்டின புருஷன் கல் லானாலும், புல்லானாலும், கெட்டவனானாலும், பிறர்க்கு தன்னைக் கூட்டி விட்டு ஜீவனம் செய்யும் மானமற்ற பேடியாய் இருந்தாலும் அவர்களை யெல்லாம் கடவுள் போலவே பாவிக்க வேண்டு மென்றும், கணவன் குஷ்டரோகியாயிருந்தாலும் அவனைத் தலையில் தூக்கிக் கொண்டு போய், அவன் விரும்பும் தாசி வீட்டுக்கு அழைத்துப் போய் விடுவது தான் கற்புள்ள பெண்களின் லட்சணமென்றும்.

பெண்களுக்குக் கர்ப்பத்தில் இருந்தே சரீரத்தில் ரத்தத்துடன் கலக்கும்படி செய்து வைத்திருக்கும் இந்த நாட்டில், கலியாண ரத்து என்பதும், ஆண்களைப் போலவே பெண்களுக்குச் சுதந்திரம் என்றும் சொல் லப்பட்டது போன்ற தீர்மானங்கள் மகாநாட்டுக்குக் கொண்டு வருவதும், அதுவும் பெண்களையே அதைப் பற்றி பலர் பேசி வாதப் பிரதிவாதம் செய்ய இடம் ஏற்படுவதுமான காரியம் என்பது லேசான காரியமல்ல. அது மாத்திரமல்லாமல் அத்தீர்மானம் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்கும்படி அதற்கு ஓட்டுகிடைப்பது அதுவும் சாதாரண காரியமல்ல. ஆகவே இதிலிருந்து கூடிய சீக்கிரம் பெண்ணுலகு விடுதலை பெற்று விடும் என்று தைரியமாய் இருக்கலாம் என்றே நினைக் கின்றோம்.

மலாய் நாட்டு வக்கீல்களின் தேசியம்

3.8.1930 - குடிஅரசிலிருந்து...

மலாய் நாட்டில் மலாக்கர் என்கின்ற பட்டணத்தில் கள்ளிக்கோட்டை திருவாளர் கே.பி. கேசவமேனன் அவர்கள் சுமார் 3, 4 ஆண்டுகளாக பிரபல பாரிஸ்டராக இருந்து வருகின்றார்கள். அவர் இப்போது தன்னை எப்.எம்.எஸ். பாரிலும்  வக்கீலாக சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கோலாலம்பூர் சீப்  ஜட்ஜிக்கு விண்ணப்பம் போட்டதில் அவரைச் சேர்த்துக் கொள்வதற்குக் கோலாலம்பூர் வக்கீல்கள் ஜட்ஜிக்கு ஆட்சேபனை சொன்னதாகவும் அவ்வாட்சேபனை என்ன வென்றால் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் ராஜத்துரோக விஷயமாய் சிறைசென்றவர் என்று சொன்னார்களாம்.

அதற்குப் பாரிஸ்டர் திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் தான் வைக்கம் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டதால்  சிறை செல்ல நேரிட்டதென்றும்  மதரா ஹைகோர்ட்டில் மிக்க செல்வாக்குப் பெற்ற பாரிஸ்டர் என்றும் எடுத்துக் காட்டினாராம். இதற்காக கனம் ஜட்ஜ் அந்த விண்ணப்பத்தைப் பைசல் செய்ய 2 மாதம் வாய்தா தள்ளிப் போட்டிருப்பதாகத் தெரியவருகின்றது.

மலாய் நாட்டு வக்கீல்கள் இந்த விஷயத்தில்  இவ்வித ஆட்சேபனைக் கொண்டு வந்ததை நாம் பலமாகக் கண்டிக்கின்றோம். வக்கீல்கள் அரசியல் சம்பந்தமான கிளர்ச்சிகளில் ஈடுபடுவதும், தண்டனைகள் அடைவதும் அவர்களின் இப்போதையத் தொழில் முறையில் முக்கிய அம்சமாகி விட்டது.

இந்தியாவில் அனேக வக்கீல்கள் தண்டனை அடைந்து இப்பொழுது வக்கீல்களாகவே இருக்கின்றார்கள். இது ஒருபுறமிருக்க திரு. கே.பி. கேசவமேனன் அவர்கள் ராஜத் துவேஷ விஷயமாய்ச் சிறைச் சென்றவர் அல்லவென்று உறுதியாய்ச் சொல்லுவோம் சென்னை ஹைகோர்ட்டில் அவர் மிக்க பிரபல வக்கீலாக இருந்தவர்.

இந்தியாவில் பிரபலமாயிருந்த கனவான்கள் யாராவது தேசச் சேவையின்  பலனாய் உண்மையான தியாகம் செய்தவர்கள் இருப்பார்களானால் அவர்களில் திரு. கே.பி.கே. மேனன் முதன்மையானவராவார்.

மலையாள தேச முழுமையும் கே.பி.கே. மேனன் என்றால் கண்களில் நீர் விடுவார்கள். அப்பேர்பட்ட உண்மையான தியாகியானவர். திருவாங்கூர் ராஜியத்தில் வைக்கம் என்னும் ஒரு பிரபல கோயில் உள்ள ஊரில் உள்ள பொதுத் தெருவில் ஈழவர்கள்,  நாடார்கள், முதலியவர்கள் கூட நடக்கக் கூடாது என்று தடைசெய்யப்பட்டத் தெருவில் அவர்களுக்குத் தெருப்பாத்தியம்  வாங்கிக் கொடுக்கச் செய்யப்பட்ட முயற்சியில் திருவாங்கூர் அரசர் என்னும் சுதேச ராஜாவால் 6 மாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலிலும் மிக்க மரியாதையாய் நடத்தப்பட்டவர்.

அத்தண்டனையின் போது நாமும் அவரும் திருவாங்கூர் ஜெயிலில் ஒன்றாகவே தண்டனை அனுப்பவித்தவர்களாவோம். கடைசியாக காலாவதி தீருமுன் எங்களை விடுதலை செய்து விட்டதோடு திரு. கே. பி. கே. மேனனை எதற்காகத் தண்டித்தார்களோ அந்த காரியமான வைக்கம் ரோடுகளை எல்லோரும் நடக்கும்படியாக உத்தரவு கொடுத்து விட்டார்கள்.

ஆகவே திரு. கே. பி. கே. மேனன் அவர்கள் செய்த காரியம் குற்றமா? அல்லது திருவாங்கூர் அரசாங்கம் அவரைச் சிறைபடுத்தினது குற்றமா? என்பதை யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது.

ஆகவே இப்படிப்பட்ட திரு. மேனன் அவர்களை மலாய் வக்கீல்கள் சிலர் ஆட்சேபித்திருப்பதிலிருந்து அவர்களது தேசியமும், சமூக சீர்திருத்தமும், அரசியல் முற்போக்கு முயற்சியும் எப்படிப்பட்டதாயிருக்கும் என்பதை ஒருவாறு உணரலாம்.

நம்மைப் பொறுத்தவரை இவ்வித ஆட்சேபனைகள் அறியாமையினாலோ அல்லது பொறாமையாலோ தான் ஏற்பட்டிருக்க வேண்டுமென்று  கருதுகின்றோம். இது வக்கீல் தன்மையின் பிறவிக் குணமாம் போலும்.

என்னைப் போன்றோர் சட்டசபைக்கு போக முடியுமா?

21.9.1930 - குடிஅரசிலிருந்து...

இன்றைய தினம் பூரண விடுதலையுள்ள அரசாங்கம் வந்து அதில் தேர்தல் நடைபெறுமானால் நானாவது என்னைப் போன்ற நண்பர்களாவது சட்டசபைக்குப் போகமுடியுமா என்று யோசித்துப் பாருங்கள்.

10,000, 20,000, 30,000 ரூபாய் செலவு செய்து தான் உங்கள் பிரதிநிதியாக வேண்டும். அதுவும் ஜாதியைக் காப்பாற்றுகின்றேன், மனுதர்மத்தைக் காப்பாற்றுகின்றேன், கோவிலைக் காப்பாற்றுகின்றேன், சாமியின் பெண்டு பிள்ளைகள், தாசிகள் ஆகிய வற்றைக் காப்பாற்றுகின்றேன்,

மோட்சத்திற்கு கூட்டி விடும் தரகர்களைக் காப்பாற்றுகின்றேன் என்று சொன்னால்தான் அப்படிப்பட்டவருக்கும் ஓட்டுக் கிடைக்குமே அல்லாமல் எந்த யோக்கியனுக்காவது அறிவாளிக் காவது, சுயமரியாதைக்காரனுக்காவது ஓட்டுக் கிடைக்குமா என்று யோசித்துப் பாருங்கள். இதற்கு வெள்ளைக்காரர்கள் முட்டுக்கட்டை போடு கின்றார்களா? அல்லது நமது மக்களுக்கு அறிவில்லையா என்று யோசித்துப் பாருங்கள்.

9 ஆம் தேதி எங்கள் மாகாணத்தில் சட்டசபை எலக்ஷன் நடந்தது. அதில் வெற்றி பெறப்போகும் பிரதிநிதிகள் யார் என்று கருதுகிறீர்கள்? ஊர் மக்களிடம் 100க்கு 3, 4 வரையில் வட்டி வாங்கி பணம் சம்பாதித்து பார்ப்பானுக்கும், பாழும் கல்லுக்கும் அழும் கூட்டத் தார்களும், விளைந்தாலும், விளையா விட்டாலும் உதைத்து வரி வசூலிக்கும் ஜமீன்தார்களும் 1000, 2000, 5000,

10000க்கணக்கான ஏக்கர் பூமிகளை உடைய பெரிய மிராசுதாரர்களும் முனிசிபாலிடிகளும் ஜில்லா தாலுகா போர்டுகளைத் தங்கள் வியாபார தொழிலாய் உபயோகிக்கும் தல ஸ்தாபன வியாபாரி களும், மக்கள் ஒழுக்கங்களையும் குடும்பங்களைப் பாழாக்கிக் கொள்ளையடிக்கும் வக்கீல்களும் மற்றும் இவர்கள் போன்ற ஏழை மக்களைக் கொடுமை செய் பவர்களும், அவர்களது நன்மை, தீமையில் சிறிதும் கவலையில்லா தவர்களும் தவிர ஒரு சுயமரியாதை யுடையவராவது, யோக்கியராவது அங்கு இருக்கின் றார்கள் அல்லது வரப்போகிறார்கள் என்று கருத முடியுமா? என்று உங்களைக் கேட்கின்றேன்.

நான் சட்டசபைத் தவிர எல்லா ஸ்தாபனங்களிலும் இருந்திருக்கின்றேன். அவைகளின் அனுபவங்கள் எனக்கு நன்றாகத் தெரியும், ஈரோடு கோவில் பிரவேச முயற்சி என்ன ஆச்சுது? என்பது உங்களுக்குத் தெரியாதா? இன்னும் தெருப்பிரவேச முயற்சிக்குக் கூட தைரியமாய் யாரும் வெளிவர முடியாமல் ஆளுக் காள் பழி சுமத்தி பொறுப்பை நழுவ விட்டு விடுவதில் தான் இருக்கின்றது.

சுயமரியாதை இயக்கத்தில் கலந்து இருந்த பல பெரியார்களுக்குக் கூட சுயமரியாதை இயக்கத்திலிருந்து ராஜினாமா கொடுத்த பிறகுதான் வெற்றி கிடைத்திருக்கிறது. சுயமரியாதை இயக்கத்தில் கலந்திருக்கின்ற பல பெரியார்களுக்கு அதற்காகவே போட்டிகள் உண்டாயிற்று.

இவர்கள் எல்லோரும் சட்டசபைக்குப் போய் நமது பிரதிநிதிகளாக என்ன செய்யப்போகின்றார்கன் அல்லது என்ன செய்யக் கூடும் என்று கருதுகிறீர்கள்? நமது வரிப் பணத்தை எப்படி வெள்ளைக்காரனைப் போலவே கூட்டுக் கொள்ளை அடிக்கிறது? அதில் இன்னும் யார் யாருக்கு எவ்வளவு பங்கு கொடுப்பது என்பது போன்று திருட்டு சொத்தைப் பங்கு போட்டுக் கொள்வதில் திருடர்கள் தங்களுக்குள் சண்டை போட்டுக் கொள்வதுபோல் இன்று சண்டைபோட்டு நாளைக்குக் கொள்ளை அடித்துப் புதுப்புது ஜமீன்தார்களாகவும் பாகம் பிரித்துக் கொள்ளவும்,

விற்கவும் முடியாத பிரபுக்கள் குடும்பக்காரர்களாகப் போவதைத் தவிர வேறு என்ன செய்யப்போகிறார்கள் என்று நினைக்கின்றீர்கள் மற்றும் நமக்கு ஏதாவது பாமர மக்களிடம் செல்வாக்கு இருக்கின்றது என்று நினைத்தால் நம்மை பெரியா ரென்றும், தலைவர் என்றும், சுயமரியாதை இயக்கமே மேலானதென்றும் கூறித்திரிவார்கள்.

நமக்குச் செல்வாக்கு இல்லையென்று தெரிந்தால் சுயமரியாதை என்கின்ற பேரே எனக்குப் பிடிக்க வில்லை. மதத்தில் பிரவேசிப்பது தப்பு சாமிகளைச் குறை கூறுவது நன்றாய் இல்லை என்றும் நமது பெரியார் அரசியலில் பிரவேசித்து விட்டார் என்றும் நிரம்பவும் அவருக்குத் தலை கிறுகிறுத்து போய்விட்டது என்பது போன்ற எதையாவது சொல்லி விட்டு சுவாமிக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பித்து தான் சுயமரியாதைக்காரருடன் சேர்ந்தவரல்ல என்றும் சொல்லி விடுவார்கள்.

உதாரணமாக ஒரு  கனவான் உண்மையாக சுயமரி யாதைக் கொள்கைகள் எல்லாவற்றிலும் நம்பிக்கை யுடையவர்களாயிருந்ததோடு, விக்கிரக ஆராதனை யை மிகவும் வெறுப்பவராயிருந்தார். விக்கிரகங்களை உதைத்தால் (இன்னும் பலமான வார்த்தையில்) என்ன செய்யும்? என்று கூட ஒரு கூட்டத்தில் சொன் னவர்கள், அப்படிப்பட்ட கனவான்கள் விக்கிரகங் களைக் குற்றம் சொல்லாதீர்கள் என்று எனக்குப் புத்திமதி சொல்ல வேண்டியவரானார்.

காரணம் என்ன வென்று கருதுகின்றீர்கள்? இப்படிச் சொன்ன காரணத்திற்காக அவரைச் சில பிரதிநிதி ஸ்தானங்களில் தோற்கடிக்க அவரது எதிரிகள் முயற்சி செய்தார்கள். உடனே இப்படி ஒரு கரணம் அடித்து அந்த ஸ்தானத்தைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டியவராய் விட்டார். இந்தமாதிரி நிலையில் சிக்கிக் கொள்ள முடியாத பிரதிநிதிகள் இன்று நமக்கு இல்லவே இல்லை. இதை நம்புங்கள்! நம்புங்கள்!! யாராவது இருந்தால் அவர் நமக்குப் பிரதிநிதியாய் வர முடியாது.

எங்கள் ஜில்லாவில் பார்ப்பனராதிக்கத்தை ஒருவாறு ஒழித்தோமானாலும் அதற்குப் பதிலாக அவர்களைப் போன்ற வர்ணாசிரமத்தைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புடைய ஒருவரைத்தான் பிரதிநிதியாகக் கொண்டு வரமுடிந்தது. அதுவும் வேண்டா மென்றால் இன்னமும் மோசமானவர்கள் தான் வருவார்கள்.

ஆகவே இந்தக் கூட்டம்தான் இன்றைய நிலையில் உங்கள் சுயராஜ்யத்திலும், பூர்ண சுயேச்சையிலும் குடியேற்ற நாட்டந் ததிலும் இந்திய மக்களுக்குப் பிரதிநிதியாக வரமுடியும். ஒரு சமயம் காங்கிரசுகாரர்களே சட்டசபைகளைக் கைப்பற்றுகிறார்கள் என்று வைத்துக் கொள்ளுவோம். அவர்கள் யார்? ஆகாயத் திலிருந்து குதித்து வரக்கூடியவர்களா? அநேகமாய் இதே ஆட்கள் தான் காங்கிரசின் பேரால் வருவார்கள் அல்லது இது போன்ற வேறு இரண்டொரு ஆட்களும் வரக்கூடும்.


தந்தை பெரியார் பொன்மொழிகள்

மக்கள் உலகம் முழுவதும் ஒன்றுபட வேண்டும்; மற்ற சீவன்களுக்குத் தன்னால் கெடுதி இல்லாத வாழ்வு பெறவேண்டும்.  மனிதனிடத்தில் பொறாமை, வஞ்சகம், துவேசம், கவலை, துக்கம் ஏற்படுவதற்கு இடமில்லாது சாந்தி வாழ்வுக்கு வகை தேட வேண்டும்.  இது தான் எனது ஆசை.

மேல்ஜாதி - கீழ்ஜாதி என்கிற அமைப்பை ஒழிக்க வேண்டும் என்று நான் சொல்லும்போது மேல்ஜாதி, - கீழ்ஜாதி என்கிற தன்மையினால் ஒரு கூட்டம் அடைந்திருக்கும் அதிகப் பங்கையும் உரிமையையும் - போக போக்கியத் தையும் - கீழ்நிலையில் இருந்து கேடு அடையும் மக்கள் நிலைமையையும் ஒழிக்க வேண்டும் என்ற தத்துவத்தில் தான் நான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகிறேன்.

Banner
Banner