தமிழக அரசு பெட்ரோல் மீதான மாநில வரியை குறைக்க முன்வரவேண்டும்: கலைஞர்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னை, மே 28- கோவா மாநில அரசு செய்ததுபோல தமிழக அரசும் பெட்ரோல் மீதான மாநில வரியை குறைக்க முன்வரவேண்டும் என்று தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி: இலங்கைத் தமிழர்களுக்கு தனித் தமிழ் ஈழம் அமைந்தால்தான் விடிவு ஏற்படும் என்று நீங்கள் சொல்வதை நிரூபிப்பதைப் போல தொடர்ந்து அங்கே தமிழர்கள் சித்திரவதை செய்யப்படுவதாக இன்று கூட ஏடுகளில் செய்தி வந்திருக்கிறதே?

பதில்: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் 200 நாடுகளில் மனித உரிமை நிலை குறித்த 2011 ஆம் ஆண்டுக்கான அறிக்கையை வாஷிங்டன் நகரில் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில், 44 பக்கங்களுக்கு இலங்கை அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளதாம்.

குறிப்பாக, தமிழர்கள் பெரும்பாலும் வசிக்கும் பகுதிகளில் சிங்கள ராணுவம் மற்றும் அரசு ஆதரவு குழுக்கள் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்டு கொலைகளை நிகழ்த்தி வருகின்றன. இதன்மூலம் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன.

பெண்களுக்கு எதிரான பாகுபாடு உள்ளது. சிறுவர்களை கடத்துதல், தவறாகப் பயன்படுத்துதல் போன்ற சம்பவங்கள் இங்கு மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. மனித உரிமை மீறல்களால் எண்ணிலடங்காத தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஹிலாரி கிளிண்டன் வெளியிட்ட அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ஏடுகளில் வெளி வந்துள்ளது.

இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே, வெளிநாடுகளின் நெருக்குதல்களை ஏற்று இலங்கையில் ராணுவத்தை குறிப்பிட்ட இடங்களில் இருந்து திரும்பப் பெற முடியாது'' என்று சொல்லியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப் போல உள்ளது. இதையெல்லாம்பற்றி விவாதித்து முடிவெடுக்கத்தான் டெசோ மாநாட்டினை விரைவிலே கூட்டுவதாக அறிவித்திருக்கிறோம்.

கேள்வி: பெட்ரோல் விலை உயர்வுக்காக தி.மு.க. 30 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது என்றதும், அ.தி.மு.க. 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறதே?

பதில்: அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசிலே அங்கம் வகிக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் எனது தலைமையிலே தென் சென்னையிலும், மற்றும் மாவட்டத் தலைநகரங்களிலும் 30 ஆம் தேதியன்று கண்டன ஆர்ப்பாட்டங்களை அறிவித்து விட்டோம்.

இவ்வளவிற்கும் பிறகு அ.தி.மு.க. என்னதான் செய்வது? வேறு வழியின்றி 29 ஆம் தேதியன்று ஆர்ப்பாட்டம் என்று அறிவித்திருக்கிறார்கள்.

ஜெயலலிதா தோழமை சேர துடித்துக் கொண்டிருக்கும் பா.ஜ.க. ஆளும் சிறிய மாநிலமான கோவாவில் அந்த மாநில அரசே உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது.

அதாவது பெட்ரோல் விலை உயர்வால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்பை கருதி, கோவா மாநில அரசு, பெட்ரோலுக்கு விதிக்கப்படும் வாட் வரியை முழுமையாக ரத்து செய்துள்ளது. இதன்காரணமாக டில்லியை விட, கோவாவில் லிட்டர் ஒன்றுக்கு 12 ரூபாய் குறைவாக பெட்ரோல் கிடைக்கிறது என்று செய்தி வெளி வந்திருக்கிறது.

உண்மையிலேயே பெட்ரோல் விலை உயர்வால் பாதிக்கப்படும் மக்கள் மீது ஜெயலலிதாவிற்கு அக்கறை இருக்குமானால், கோவா மாநிலத்தில் செய்ததைப் போல, தமிழகத்திலேயும் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரியைக் குறைக்க இதற்குள் முன் வந்திருக்க வேண்டாமா?

இன்னும் கூற வேண்டுமேயானால், தி.மு.க. ஆட்சியிலே இருந்தபோது, மத்திய அரசு 2006 ஆம் ஆண்டில் பெட்ரோலிய பொருள்களின் விலையை உயர்த்திய போதும், 2008 ஆம் ஆண்டு டீசல் விலையை உயர்த்திய போதும், கழக அரசு விற்பனை வரியைக் குறைத்து அறிவிப்பு செய்திருக்கிறது.

இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் கூறியுள்ளார்..
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner