கழகக் குடும்பத்தவர்களுக்கு தமிழர் தலைவர் அன்பு வேண்டுகோள்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

இனியும் இடையறா சுற்றுப்பயணம் இப்படியே தொடர முடியுமா?

பார்க்கவேண்டிய பணிகள் ஏராளம்

பெரியார் மறையவில்லை உலகுக்குப் பறைசாற்றுங்கள்!

கழகத் தோழர்களே! கழகக் குடும்பத்தவர்களே!! இனியும் இடையறாத சுற்றுப்பயணம் இப்படியே தொடர முடியுமா? சற்று சிந்தியுங்கள். அன்புத் தொல்லையிலிருந்து எனக்கு அவ்வப் பொழுது விடுமுறை தர யோசியுங்கள். இன்னும் பார்க்கவேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. என்னைப் போன்ற ஆர்வத்தை கழகக் கொள்கைப் பரப்பலில் நீங்களும் காட்டி எழுச்சியை ஏற்படுத்தி பெரியார் மறையவில்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றுங்கள். இதுவே நான் உங்களிடம் விடுக்கும் அன்பு வேண்டுகோளாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார். அறிக்கை வருமாறு:

திருவூர் முதல் நாகர்கோவில் வரை

கடந்த வாரம் திருவள்ளூர் மாவட்டம் திருவூரில் தோழர்கள் நாத்திகன் கோரா தம்பதியர்களின் மணிவிழா நிகழ்வு தொடங்கி, அடுத்த நாள் 27 - தென்கோடி குமரி மாவட்டத் தலைநகர் நாகர்கோவிலில் எழுச்சி மிகுந்த மாநாடு, மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி முதலியவற்றில் பல நூற்றுக் கணக்கான கருஞ்சட்டைக் கழகக் குடும்பங்களும், பகுத்தறி வாளர்களும், பல்லாயிரக்கணக்கில் பொதுமக்களும் கூடிய கருத்து மழை பொழிந்து கொள்கை ஆறாகப் பெருக்கெடுத் தோடிய காட்சி முக்கடல் சங்கமம் கண்டு கதிரவன் உதயத்தின் போது காணும் கண்கொள்ளாக் காட்சியாகவே அமைந்திருந்தது!

துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்களின் மேற்பார்வையில், மானமிகு மாவட்டத் தலைவர் ப. சங்கர நாராயணன், துடிப்புமிகு இளைஞர் மாவட்டச் செயலாளர் வெற்றிவேந்தன், இளைஞரணி தோழர்கள், மகளிரணி தோழியர்கள், மாணவர்கள் திரண்டதோடு, தென்மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் அணிவகுத்து வந்து அந்த மண்டல மாநாட்டை மண்டலத் தலைவர் ஓய்வு பெற்ற தலைமைப் பொறியாளர் சி. மனோகரன் தலைமையில் நடத்திக் காட்டி வரலாறு படைத்தனர்.

குமரி மாவட்டத்தில் இயக்கத்தை வளர்த்தோர்

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் குமரி மாவட்டத்தில் இயக்கத்தை வளர்த்த இரட்டையர்கள், மேலும் மிசா கொடு மைக்கு ஆளான தியாகி சி.எம். பெருமாள் ஆகியவர்களுடன் முகம்மதப்பாவுடன் கைகோர்த்துக் கழகப் பணியாற்றிய பிரபாகரனும், பெருமாளும் இல்லை.

பெரியார் பெருந்தொண்டர் என்.ஆர்.சந்திரன் அவர்கள் இன்றும் கழகப் புரவலராக நின்று கடமையாற்றி வருகிறார்.
மானமிகு முகமதப்பா அவர்களுக்கு 91 வயது. திரு. சுப்பிரமணியம், போராட்ட வீரர் (திங்கள் சந்தை) தக்கலை பகுத்தறிவாளர் எஸ்.கே. அகமது ஆகிய மும்மணிகளை அன்று அக்கூட்டத்தில் பெருமைப்படுத்தும் நல்வாய்ப்பை எமக்களித்த குமரிக் கழகப் பொறுப்பாளர்களுக்கு எமது நன்றி.

போட்டி போடாமல் ஒதுங்கிக் கொண்டது!

சிறப்பான கூட்டம், காலையில் கொட்டிய மழை, மாலையில் கொள்கை மழை கொட்டப் போகிறது என்பதால், போட்டி போடாமல் ஒதுங்கிக் கொண்டதுபோலும்!

குமரியில் ஜாதி ஒழிப்பு மாநாடு ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது; இப்பொழுது அதைவிட எழுச்சியுற்ற கருத் தரங்கம், வீதி நாடகம், விழுமிய தீர்மானங்கள் நிறைவேற்றம் - கொள்கை விளக்க உரைகள் எல்லாம் நிகழ்ந்தன. இரவு 10 மணியளவில் (27.4.2012) முடிந்த - வழமைபோல இரவு சிற்றுண்டியை வேனில் சாலையோரத்தில் நிறுத்தி முடித்தோம். பயணம் தொடர்ந்தது.

துறையூர் வட்டார மாநாட்டு எழுச்சி

திருச்சி பெரியார் மாளிகைக்கு விடியற்காலை 4.30 மணியளவில் (28.4.2012) வந்தடைந்தோம். மீண்டும் பயணம் மாலை 5 மணிக்கு வேனில் புறப்பட்டு (திருச்சி) துறையூர் வட்டார மாநாட்டில் கலந்துகொண்டோம்.

எழுச்சி மிகுந்த மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி சுமார் இரண்டரை கிலோ மீட்டர் அளவுக்குச் சென்றோம். சுயமரி யாதைச் சுடரொளிகளான நமது பெரியார் பெருந்தொண்டர் களுக்கு நினைவுக் கல்வெட்டு திறப்பு, கழகக் கொடி (பேருந்து நிலையம் அருகில்) ஏற்றிவிட்டு, மாலை, மிகச் சிறப்புடன் நடைபெற்ற வட்டார மாநாட்டு மேடைக்கு வந்தோம். பேரணி வருவதற்கு முன்பே கூட்டம் நிரம்பி வழிந்தது!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு...

நீண்ட இடைவெளிக்குப் பிறகு என்ற போதிலும், எங் கெங்கு காணினும் கழகக் கொடி தோரணங்கள், விளம்பரப் பதாகைகள் - பலகைகள், மக்கள் பல்லாயிரக்கணக்கில் திரண்டு நின்று வியந்து பார்த்து பரவசப்பட்ட காட்சி, கண்கொள்ளாக் காட்சி!

சுயமரியாதைச் சுடரொளி செம்பரை நடராசனின் திருக் குமாரர் செம்பரை ந. தர்மராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) கழகக் கொடியேற்றினார். எண்ணற்ற இளைஞர்கள் வரவு ஏற்றத்தைத் தந்தது! முதுபெரும் பெரியார் பெருந்தொண்டரும், அம்மண்ணின் மைந்தருமான து.மா. பெரியசாமி, ப.க. ஆசிரியரணித் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற தொண்டறச் செம்மல் பேராசிரியர் மெ. அன்பரசு - அவரது வாழ்விணையர் ஆகியோர் விருது அளித்து பாராட்டப் பெற்றனர்.

பெரியாரின் காரோட்டிகள்

அய்யா பெரியார்தம் காரோட்டிகளான கழகத் தோழர்கள் துறையூர் முருகேசன், மேட்டுப்பாளையம் கொண்டன் ஆகி யோருக்கு பயனாடைப் போர்த்தும் மகிழ்ச்சிக்குரிய வாய்ப்பும் கிடைத்தது!

து.மா. பெரியசாமி அவர்களால் தொகுக்கப்பட்ட பெரியார் பேருரைகளான சிந்தனைத் திரட்டு இரண்டாம் தொகுதி அங்கே மேடையில் வெளியிடப்பட்டு சுமார் 40 கழக முக்கியப் பிரமுகர்கள் பெற்றார்கள்.

இம்மாநாட்டை (தள்ளிப் போடப்பட்ட நிகழ்ச்சி)  மிகச் சிறப்பாக லால்குடி மாவட்ட கழகத் தலைவர் வால்டேர், மாவட்ட கழகச் செயலாளர் செயல் வீரர் ஆல்பர்ட், துறையூர் செயல் வீரர் (ப.க.) மணிவண்ணன், அவரது தோழர்கள் வழக்குரைஞர் கழகப் பேச்சாளர் பூவை புலிகேசி, சு. அறிவுக்கரசு ஆகியோர் உரையை அடுத்து இரவு 9.30 மணியளவில் எனது நிறைவுரையோடு முடிந்து கோவை பகுத்தறிவாளர்கள் மாநாட்டிற்குப் புறப்பட்டோம். இடையில் முசிறி அருகில் சாலையோரத்தில் இரவு 10.45 மணிக்கு இரவு உணவுமுடித்து பயணத்தைத் தொடர்ந்தோம். இரவு 2 மணியளவில் கோவை சேர்ந்தோம்! கழகப் பொதுச்செயலாளர் சு. அறிவுக்கரசு என்னுடன் மூன்று நாளும் பயணம் செய்து உரையாற்றினார்.

அந்த இரவு வேளையிலும்...

அந்த இரவு வேளையிலும் கழகத் தோழர்கள், ப.க. மாவட்டத் தலைவர் முனியன் அவர்கள் தலைமையில் வரவேற்று அழைத்து தங்க வைத்து, கழகக் குடும்பத்தவர்கள் அன்பைப் பொழிந்தனர்!

பகலெல்லாம் கழகக் குடும்பங்கள் கோவை மாநகர, புறநகர, திருப்பூர், மேட்டுப்பாளையம், உதகை மாவட்டம் எல்லா பகுதிகளிலிருந்து வந்து உரையாடினார்கள்.

எனது இத்தொண்டு தொடர மருத்துவ சிகிச்சை அளித்து பல ஆண்டுகளுக்கு முன்பு காப்பாற்றிய பிரபல மனிதநேய மருத்துவர் டாக்டர் கே.ஜி. பக்தவத்சலம் அவர்கள் சந்தித்து அளவளாவினார். அய்யாவின் புதிய நூல்களை அவருக்கு வழங்கிடும் அரிய வாய்ப்பு கிடைத்தது!

தி.மு.க. தோழர்களுடன் கலந்துரையாடல்

அதுபோல் தி.மு.க. தலைமைக் கழக முக்கிய பொறுப்பாளர் சுயமரியாதை வீரர் கோவைத் தென்றல் கோவை மு. இராமநாதன், முன்னாள் எம்.பி. வி.பி. சண்முகசுந்தரம், தி.மு.க. மாவட்டக் கழகப் பொறுப்பாளர்களில் முக்கியத் தோழர் வீரகோபால், கழக மண்டலத் தலைவர் வசந்தம் கு. இராமச்சந்திரன், ப.க. பொறுப்பாளர் டாக்டர் நாச்சியப்பன் முதலியோர் வந்து உரையாடி மகிழும் வாய்ப்பைத் தந்தனர்.

இராமநாதபுரத்தில் திருமண மண்டபத்திற்குள் கருஞ் சிறுத்தைகள் கூடாரம்போல் பல நூற்றுக்கணக்கில் குடும்பம் குடும்பமாகத் தோழர்கள், தோழியர்கள் குழுமி, நிகழ்ச்சிகள் விறுவிறுப்புடன் நடந்தேறியது!

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர்கள் வசந்தம் கு. இராமச்சந்திரன், மருத்துவர் துரை நாச்சியப்பன், பொ.வ. இராதா, தென்மொழி ஞானபண்டிதன், கணபதி இராமசாமி, இ. கண்ணன், சாந்தா இராமமூர்த்தி, பொறியாளர் பரமசிவம், பொள்ளாச்சி நடராசன், பாசமலர் ஆறுமுகம், ஆசிரியர் மாரிமுத்து இப்படிப் பலரும் பெருமைப்படுத்தப் பட்டனர்.

பிறகு து.மா. பெரியசாமி தொகுத்த பெரியார் சிந்தனை திரட்டு தொகுதி-3 அங்கே வெளியிடப்பட்டது. அதுபோலவே தென்மொழி ஞானபண்டிதன் அவர்கள் யாத்த பெரியார் காவியம் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கோவை மாநகர் - புறநகர் வீறுகொண்டெழுந்த காட்சி

அன்று புரட்சிக்கவிஞர் பிறந்த நாள் விழா (ஏப்ரல் 29) ஆனபடியால் பெரியார், புரட்சிக்கவிஞர், அண்ணா படத் திறப்புகள் நம்முடைய அறிவுக்கரசு, கோவை மு. இராமநாதன், வி.பி. சண்முகசுந்தரம் ஆகியவர்களால் நடத்தப்பட்டு சிறப்பாக உரையாற்றப்பட்டன.

கோவை மாநகரம், புறநகரம் எங்கெங்கும் கழகக் கொடி களும், கொடித் தோரணங்களும் ஓர் புத்தெழுச்சியைப் புலப் படுத்தியதோடு, கழகக் குடும்பத்தினரின் கட்டுப்பாட்டையும், கடமை உணர்வையும், பெரியார் பிஞ்சுகளும், தாய்மார்களும் வரவேற்றது மறக்க முடியாத நிகழ்வுகள். அயர்வு, சோர்வு, களைப்பு - விடைபெற்று வெளியேறிவிட்டன எம்மிடமிருந்து! அவ்வளவு நேர்த்தியான மாநாட்டு ஏற்பாடுகள். மாவட்டத் தலைவர் தோழர் முனியன் அவரோடு முழு ஒத்துழைப்பு நல்கிய மாநகர, பொள்ளாச்சி புறநகர் (மேட்டுப்பாளையம்) திருப்பூர் மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள், இளைஞரணி, மாணவரணி உள்பட அனைவருக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள்.

கோவை வீறுகொண்டெழுந்த விழுமியக் காட்சி கண்டு வியந்தோர் பலர்!

சென்னையில் டெசோ கூட்டம்

உரை முடித்து அவசர அவசரமாக கோவை ரயில் நிலையம் வந்து, சேரன் தொடர்வண்டி பிடித்து, டெசோ கூட்டத்தில் கலந்துகொள்ள காலை 7 மணிக்கு சென்னை வந்தோம்! இங்கே பணிகள் தொடர்ந்தன!

விடுமுறை தர யோசியுங்கள்!

தோழர்களே, கழகக் குடும்பத்தவர்களே! இடையறாத இதுபோன்ற சுற்றுப்பயணம் இனியும் இப்படியே தொடர முடியுமா? என்பதுபற்றி சற்று சிந்தித்து, அன்புத் தொல்லையிலிருந்து எனக்கு அவ்வப்போது விடுமுறை தர அருள்கூர்ந்து யோசியுங்கள்.

1. கழகப் பணி

2. விடுதலை மற்றும் உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேஷனலிஸ்ட் ஏட்டுப் பணிகள்

3. புத்தகப் பதிப்புப் பணி

4. பெரியார் கல்வி நிறுவனங்கள் பணி

5. பெரியார் அறக்கட்டளைகள் பணி

6. அக்கப்போர்களுக்கும், அவதூறுகளுக்கும் அவ்வப் போது அவைகளுக்கெதிரான நடவடிக்கைப் பணி (வழக்கு மன்றங்கள் உள்பட)

இவை எல்லாவற்றுக்கும் மேலாக,

நான் புதுப்புது புத்தகங்களைப் படித்து எழுதிட வேண்டிய எனது அறிவு வளர்ச்சிக்கு உதவும் பணி.

பெரியாரை உலக மயமாக்கும் பணி

7. பெரியாரை உலக மயமாக்கும் திட்டத்தின்கீழ்,

(அ) பிற மாநிலங்களில் சுற்றுப்பயணம்

(ஆ) வெளிநாடுகளிலும் சுற்றுப் பயணம். இவை எல்லாம் முக்கியமானவை அல்லவா!

இதற்காக நீங்கள் எனக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்.

இனி, மாதத்திற்கு 8 நாள் தவிர, (விலக்கு ஒன்றிரண்டு மிக அவசியம் கருதி) கூடுதல் நாள் தலைநகரை விட்டு விடுதலை - பெரியார் திடலை விட்டு வெளியே வராத அளவுக்கு படித்தும், எழுதியும் அமைப்புகளைப் பலப்படுத்திடும் பணியில் நாட்டமும் செலுத்த வேண்டியுள்ளது!

மனம் இளமைதான்! உடல் என்னதான் உற்சாகம் என்றாலும், அதற்கே உரிய தன்மை என்பது இயற்கை அல்லவா?

என் மனம் எளிதில் வராது

எனவே, ஒவ்வொரு இல்ல நிகழ்ச்சிக்கும் என்னை அழைக்காமல் நீங்களே அன்பு காட்டுங்கள்.

கழகக் குடும்பத்தவராகிய நீங்கள் வற்புறுத்தி அழைக்கும்போது, மறுக்க என் மனம் எளிதில் வராது.
அன்பிற்கும், கொள்கைப் பாசத்துடன் அடைக்கும்தாழ் கிடையாதே!

பெரியார் மறையவில்லை

அருள்கூர்ந்து சிந்தியுங்கள் - ஒத்துழையுங்கள். அதே நேரம் ஆர்வத்தை கழகக் கொள்கை பரப்பில் காட்டி, எழுச்சியை ஏற்படுத்துங்கள். இயக்கப் பணி முன்னிலும் வேகம் அடையத் திட்டமிடுங்கள்.

பெரியார் மறையவில்லை; பெரியார் மறையவில்லை என்பதை உலகுக்குப் பறைசாற்றுங்கள்.

அனைத்து நிகழ்ச்சிகளையும் சிறப்பாக நடத்திய - நடத்திடும் அத்துணை பேருக்கும் எமது நன்றி! நன்றி!!


சென்னை    தலைவர்
2.5.2012    திராவிடர் கழகம்.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner