பெரியார் நூலகத்தில் மு.நீ.சிவராசன் படம், நினைவு சொற்பொழிவு ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மு.நீ.சிவராசன் படத்திறப்பில் தமிழர் தலைவர் அறிவிப்பு

சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற பேராசிரியர் மு.நீ.சிவராசன் நினைவேந்தல் நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நினைவு போற்றி உரையாற்றினார். (25.4.2012)

சென்னை, ஏப். 26-சுயமரியாதைச் சுடரொளி பேராசிரியர் மு.நீ.சிவராசன் அவர்களுடைய படம் பெரியார் ஆராய்ச்சி நூலகத்தில் வைக்கப்படும். அவருடைய பெயரால் நினைவு சொற்பொழிவு நிகழ்த்தப்படும் என்று மு.நீ.சிவராசன் அவர் களுடைய படத்திறப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அறிவித்தார்.

சுயமரியாதைச்சுடரொளி பெரியார் பெருந் தொண்டர் பெரியார் பயிலக முன்னாள் இயக்குநர் மு.நீ.சிவராசன் அவர்களுடைய படத்திறப்பு நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடிகவேள் ராதாமன்றத்தில் 25.4.2012 அன்று மாலை 6.45 மணிக்கு மிகச்சிறப்பாக கொள்கை பூர்வ விழாவாக நடைபெற்றது.

உரையாற்றியோர்

படத்திறப்பிற்கு வந்திருந்த அனைவரையும் கழக பொதுச்செயலாளர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்றுப் பேசினார்.

அடுத்து பெரியார் பெருந்தொண்டர் சுயமரி யாதைச் சுடரொளி பேராசிரியர் மு.நீ.சிவ ராசன் அவர்களுடைய படத்தை திரவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி திறந்து வைத்தார்.

மு.நீ.சிவராசன் அவர்களுடைய தந்தையார் செங்காடு மு.நீலகண்டனார் நினைவு அறக் கட்டளை சார்பில் பள்ளி மாணவிகளுக்கு நடத்திய பேச்சுமற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சான்றிதழ், மற்றும் பரிசினை அனை வருடைய கரவொலிக்கிடையே வழங்கினார்.

பரிசு வழங்கும் நிகழ்ச்சியினை சென்னை மாவட்ட ப.க. செயலாளர் சி.செங்குட்டுவன், இறைவி தொகுத்து வழங்கினர்.

மு.நீ.சிவராசன் அவர்களுடைய தம்பி தமிழ்நாடு கால்நடைத்துறை ஓய்வு பெற்ற இணை இயக்குநர் டாக்டர் மாணிக்க வாசகம், மு.நீ.சிவராசன் அவர்களின் சக ஆசிரியர் ஒன்றாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நண்பர் தேவதாஸ், குரோம்பேட்டை கமலக்கண்ணன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன், பகுத்தறி வாளர் கழகத்தின் மாநில செயலாளர் வீ.குமரேசன், வரியியல் அறிஞர் ச.ராஜரத்தினம், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக துணைவேந்தர் நல்.ராமச்சந்திரன், கழக பொதுச்செயலாளர் சு.அறிவுக்கரசு, திராவிடர் கழக பொருளாளர் வழக்குரைஞர் கோ.சாமிதுரை ஆகியோர் மு.நீ. சிவராசன் அவர்களுடைய கொள்கை உணர்வினை பொதுநலத்தொண்டை எடுத்துக்காட்டாய் எப்படி எல்லாம் வாழ்ந்தார் என்பதை விளக்கினர்.

நிறைவாக தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் நினைவு போற்றி உரையாற்றினார்.

இறுதியாக மு.நீ.சிவராசன் மகள், மீனாட்சி நன்றி கூறினார். வந்திருந்தவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யப்பட்டு உபசரிக்கப்பட்டது.

தமிழர் தலைவர் உரை

திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தமது இரங்கலுரையில் குறிப்பிட்டதாவது:

மிகுந்த துன்பத்திற்கும், துயரத்திற்கும் இடையே சுயமரியாதைச் சுடரொளி மு.நீ.சிவராசன் அவர் களுக்கு வீரவணக்கம் செலுத்துகின்ற கூட்டமாக இந்தப் படத்திறப்பு நிகழ்ச்சியை நடத்துகின்றோம்.

குடும்பத்திற்கு பலமடங்கு இழப்பு

மு.நீ.சிவராசன் அவர்களை இழந்தது நமக்கு இழப்பு என்பதைவிட அதைவிட பல மடங்கு நேரடியான இழப்பிற்கு அவருடைய குடும்பத்தினர் ஆளாகியிருக்கிறார்கள்.

சிவராசன் அவர்களிடம் உரிமை எடுத்துக் கொண்டு பேசக்கூடியவர்கள் நாங்கள். நான் வந்த வுடன் அவர் வந்துவிட்டாரா என்றுதான் கேட் பேன்.

ஒரு பெரிய போர்க்களத்தில் ஒரு தளபதியை இழந்தால் அல்லது ஒரு பெரிய போர்க்கருவியை இழந்தால் படையை நடத்துகிறவருக்கு படையின ருக்கு எவ்வளவு பெரிய சோகம், துயரம், இழப்பு ஏற்படுமோ அத்தகைய துயர நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

புலவர் ராமநாதன்

புலவர் இராமநாதன் அவர்கள் பெரியார் திடலில் தான் தங்கி இருந்து எங்களுக்கு உதவியாக இருந்தார்கள். புரட்சிகவிஞர் அவர்களைப் பற்றி கேட்க வேண்டுமனால்அவரிடம் தான் கேட்க வேண்டும். நாங்கள் எல்லாம் பெரியாருடன் நேரடியாக பழகிய தொண்டர்கள் என்றாலும், பெரியார் அவர்களைப் பற்றி புலவர் ராமநாதன் கூறிய கருத்துகள், செய்திகள் எங்களுக்குகே வியப்பாக இருக்கும்.

இனநலம் - இறையன்

அதே போல இனநலம் இறையனார் அவர் களிடமும் நான் உரிமை எடுத்துக்கொண்டு அன்பு பாராட்டக்கூடியவன். அதே நேரத்திலே கண்டிப் புடன் இருந்தவனும் கூட. இறையனார் அவர்கள் தான் மு.நீ.சிவராசன் அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். சிவராசன் அவர்கள் நல்ல ஆசிரியராக, தலைமையாசிரியராக கல்வி அதிகாரி யாக இருந்தவர் என்பதைக் கேள்விப்பட்டி ருக்கின்றேன். குன்றத்தூர் பள்ளியில் அவர் தலைமை ஆசிரியராக இருந்தபொழுது எங்களை அழைத் திருந்தார். அங்கு சென்று பேசினோம்.

கு.வெ.கி.ஆசான்

அதுபோலவே கு.வெ.கி.ஆசான் அவர்களும் இங்கேயே வந்து தங்கி எங்களுக்கெல்லாம் பொதுப் பணியில் உதவியாக இருந்தார். குருகுலம், குருகுலம் என்று சொல்லுகிறார்கள். அந்த குருகுலத்தில் மாணவர்கள் தான் இருந்தார்கள். ஆனால் பெரியார் திடலில் உள்ள குருகுலத்தில் வயதான அறிவில், ஆற்றலில், பொதுத்தொண்டில், இயக்க வளர்ச்சியில் ஆர்வமுள்ளவர்களே இருந்து வந்தார்கள். இருந்தும் வருகிறார்கள்.

உலகத்திலேயே இப்படிப்பட்ட ஒரு இயக்கத் தைக் காண முடியாது. என்னைப் பார்க்கும் பொழுதும், நான் சில நேரங்களில் வெளிநாட் டிற்குச் செல்லும்பொழுது விமானநிலையத்திற்கு வழியனுப்ப வரும் பொழுது நான் படிப்பதற்கு ஏற்ற நல்ல நூல்களை - ஆங்கில நூல்களை வாங்கித் தருவார். அதுவும் ஓடி, ஓடி, தேடிப் போய் வாங்கி வந்து தருவார். இப்படி நீங்கள் விமான நிலையத்திற்கு எதற்காக வரவேண்டும் என்று கொஞ்சம் கடுமையாக சொன்னபொழுது தான் குறைத்துக்கொண்டார். உங்களுடைய உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள் அதுதான் முக்கியம் என்று கூறுவார்.

இவ்வளவுதானா பணம்?

சிவராசன் அவர்கள் பெரியார் பயிலரங்கத்தை பெரியார் திடலில் நடத்திக்கொண்டு வரும் பொழுது எங்களை வந்து சந்திப்பார். அய்யா ரூ.50,000 பெரியார் பயிலரங்கம் நடத்தி மிச்சமாகி யிருக்கிறது தருகிறோம் என்று சொல்லுவார்.

இவ்வளவுதானா? என்று நாங்கள் கேட்போம். இல்லையா இன்னும் எவ்வளவு தரமுடியுமோ அவ்வளவு முயற்சி பண்ணுகிறேன் என்று சொல்லு வார். இந்த கோர்ஸ் நடத்த வேண்டும். அந்த கோர்ஸ் நடத்த வேண்டும் என்று கேட்பார். தாராளமாக நடத்துங்கள் என்று சொல்லுவோம்.

கு.வெ.கி.ஆசான் இறந்தபொழுது எங்களுக்கு ஆறுதல் சொன்னார். என்ன செய்வது என்று துயரத்தில் இருந்தோம். அப்பொழுது சொன்னார். எனக்குப் பெரியார் பயிலரங்க வேலை எல்லாம் வேண்டாம். அதற்கு வேறு யாரையாவது போடுங் கள். எனக்கு குடிஅரசில் பெரியாருடைய கருத் துக்களைப் படிக்கப் படிக்க இதிலேயே லயித்துப் போய்விட்டேன் என்று சொன்னார். ரொம்ப மகிழ்ச்சி அப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொன்னோம்.

நாங்கள் கீதையைப் பற்றி எழுதி நூலாக வெளியிட்டோம் உபநிடதத்தைப் பற்றி அடுத்து ஒரு பெரிய நூல் வரவேண்டும் என்று சொன்ன நிலையிலே அந்த நூல் தொகுப்பிற்கு உதவியாகவும் இருந்து வந்தார்.

இறுதி மூச்சு அடங்குகின்ற வரை

பெரியாருடைய கருத்துக்கு நீங்கள் அத்தாரிட்டி மாதிரி. எனக்கு ஏதாவது ரெபரென்ஸ் தேவை என்றால் நீங்கள் உதவுங்கள் என்று சொன்னோம். அதே மாதிரி அவரது இறுதி மூச்சு அடங்குகிறவரை கடைசிவரை இருந்தார்.

மானுமென்ட்டல் ஒர்க் என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள் பாருங்கள். வரலாற்றில் மறக்க முடியாதது அதுதான் குடிஅரசு - பெரியார் களஞ் சியங்கள் தொகுப்புப் பணிகள்.

குடிஅரசு பெரியார் களஞ்சியங்கள் தொகுக் கின்ற வேலை சாதாரண வேலை அல்ல. லேட்டஸ்ட் டாக வந்திருக்கின்ற புத்தகங்களை எல்லாம் எங்களுக்கு வாங்கிக்கொடுப்பார்.

இப்படி எல்லாம் பயன்படக்கூடியவராக இருந்து இன்றைக்கு அவர் இல்லை என்று சொல்லும்பொழுது எவ்வளவு பெரிய சங்கடத் திற்கு ஆளாகியிருக்கிறோம் என்பதை நம்மாலே உணர முடிகிறது.

வெற்றிடம்தான்....!

வரியியல் அறிஞர் ராஜரத்தினம் அவர்கள் பேசும் பொழுது ஒரு வெற்றிடம் ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னார். இப்படி ஒவ்வொரு தளபதியை ஒவ்வொரு நேரத்தில் இழந்து கொண்டு வருகிறோம் என்பதை எண்ணிப் பார்க்கும்பொழுது அந்த வேதனையிலிருந்து வெளியே வரவில்லை.

இருந்தாலும் எதை தவிர்க்க முடியாதோ அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அது இயற்கை நியதி. அந்த அடிப்படையில் அவருக்கு வீர வணக்கம் செலுத்துகின்றோம்.

இறுதி முறிச்சீட்டுப்படி

எல்லோரும் அவரவர்களுடைய உணர்வுகளை எடுத்துச்சொல்லயிருக்கின்றார்கள். ஒன்றே ஒன்றைச் சொல்லுகிறேன். மு.நீ.சிவராசன் அவர்களுடைய குடும்பத்தார் பெரியாருடைய கொள்கைகளை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொண்டவர்களா? எங்களுக்குத் தெரியாது. ஆனால் அவருடைய பணிக்கு குறுக்கே நிற்க வில்லை.

ஆனால் மு.நீ.சிவராசன் அவர்களுடைய இறுதிப் பயணம் இருக்கிறது பாருங்கள். அதாவது அவரது இயற்கை முறிச்சீட்டு அதிலே என்ன அவர்கள் எழுதி வைத்தார்களோ. அதை இயக்கத்தவர்களே செய்யக்கூடிய அளவுக்கு ஏற்பாடு செய்துவிட்டுச் சென்றார் பாருங்கள். அதற்காக இயக்கத்தின் சார்பில் மனமுவந்த நன்றியை இந்தக் குடும்பத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டி ருக்கிறேன்.

பல குடும்பங்களில் கடைசி நேரத்தில் ஒன்றும் செய்ய மாட்டார்கள். அதற்காக நாங்கள் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கின்றோம்.

விடுமுறை கேட்பார்

அவர் ஒரு பெரிய டிசிபிளினேரியன் அவரைப் பற்றி நினைக்க நினைக்க எவ்வளவோ செய்திகள் வருகிறது. என்னிடம் வந்து தயங்கி நிற்பார்.

அவர் ஒரு பணியாளர் மாதிரி. தன்னை குறுக்கிக் கொண்டு அவ்வளவு எளிமை. அவ்வளவு அடக்கத் தோடு வந்து நிற்பார். என்னங்கய்யா என்று கேட்டால் ஒரு மூன்று நாள், நான்கு நாள் லீவு வேண்டும் என்று கேட்பார்.

அரசு பொறுப்பில் இருப்பதாக இன்னமும் உங்களுக்கு ஞாபகமா? என்ன விசயம் சொல்லுங்கள் என்று கேட்டால் பேரப்பிள்ளைகளுடன் வடக்கே சுற்றுலா போகிறோம் என்று சொல்லுவார்.

ஆண்டுக்கு ஒரு முறை எல்லோரையும் அழைத்துக்கொண்டு செல்வார். வந்தவுடனே எல்லாவற்றையும் சொல்லுவார். பேரப்பிள்ளைகள் இதைப் பற்றி கேட்டார்கள். பேரப்பிள்ளைகளுக்கு அதைப் பற்றி சொல்லியிருக்கிறேன் என்று பேரப் பிள்ளைகள் மீது எவ்வளவு பற்று இருக்கிறது என்பதை அந்த பற்றோடு சொல்லுவார்.

நான் அகர்தலா என்ற பகுதிக்கு சென்ற பொழுது விமானநிலையத்திற்கு அவரது மருமகள் மற்றவர் கள் எல்லாம் வந்து எனக்குப் பெரும் உதவியாக இருந்தார்கள். இதை எல்லாம் சொல்லும்பொழுது அவருக்குப் பெரிய பெருமை. இதை ஒரு வாய்ப் பாகக் கருதுவார்கள்.

தொண்டறச் செம்மல்

ஆகவே ஒரு நல்ல தொண்டறச் செம்மலாக அவர்கள் வாழ்ந்தார்கள். நிறை வாழ்வு வாழ்ந் தார்கள்.

ஒரு விஞ்ஞானி இறந்தால் அதற்கு மாற்று சுலபமாகத் தேட முடியாது. ஒரு சுயமரியாதைக் காரன் என்று சொன்னால் சுயமரியாதை வாழ்க்கை முறையை கடைபிடித்தவர்கள். அதுவும் சமுதாயத் திற்குப் பயன்பட்டவர்கள் என்று சொல்லும் பொழுது ரொம்ப உருக்கமாக இதைப் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் பல பேருக்கு இரங்கல் எழுதியிருக் கின்றார். அன்னை நாகம்மையார் அவர்களுக்கு எழுதியதெல்லாம் இரங்கல் இலக்கியம் மாதிரி. ஆனால் சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் அவர்கள் மறைந்து விபத்து ஏற்பட்ட நிலையிலே அய்யா எழுதினார்.

தளபதி பன்னீர்செல்வம் மறைவு

தளபதி பன்னீர்செல்வம் மறைந்த பொழுது அய்யா எழுதினார். என்னுடைய குடும்பத்தில் எனது தாயார் இறந்திருக்கிறார். எனது துணை வியார் இறந்திருக்கிறார். என்னுடைய அண்ணார் மகன் இலண்டன் சென்றுவிட்டு குறைந்த வயதிலே இயற்கை எய்திவிட்டார். இந்த இழப்பெல்லாம் கூட சாதாரண இழப்பாக நான் நினைக்கிறேன்.

ஆனால் இந்த இழப்பு இதெல்லாம் என்னைப் பொறுத்தவரையிலே எனக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது. ஆனால் சர்.ஏ.டி. பன்னீர்செல்வத்தினுடைய இழப்பு என்பது அந்த குடும்பத்திற்கு மட்டுமல்ல. சமுதாயத்திற்கே இழப்பு. அது மாதிரி அய்யா சிவராசன் அவர்களுடைய இழப்பு என்பது குடும் பத்திற்கு மட்டுமல்ல. எங்களுக்குத் தனிப்பட்ட முறையிலே நட்புக்குரியவர் என்பதற்காக மட்டு மல்ல.  இயக்கத்திற்கு இழப்பு. அவருடைய தொண் டும், சிறப்பும் சாதாரணமானதல்ல.

கடைசியில் கூட சொன்னார்....!

நடுவில் இரண்டு முறை தொலைபேசியில் பேசினோம். கடைசியாகக் கூட என்னிடம் என்ன சொன்னார் என்றால் இல்லையா இந்தத் தேதிக்கு நான் வந்துவிடுவேன். மறுபடியும் திடலில் வந்து சந்திப்பேன் என்று நம்பிக்கையோடுதான் பேசினார்.

அதை நம்பிக்கொண்டுதான் நாம் இருந்தோம். என்றாலும் பெரியார் அவர்கள் சொன்னமாதிரி இயற்கையின் கோணல் புத்தி என்று சொல்லு வார்கள்.

எப்படியோ அவர்கள் நிறைவாழ்வு வாழ்ந் தார்கள். அவருடைய வழியிலே அவருடைய நினைவைப் போற்ற வேண்டும். சிவராசன் மறையவில்லை

சிவராசன் அவர்கள் எப்பொழுதும் திடலில் தான் இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக பெரியார் திடலில் இயங்கும் பெரியார் ஆராய்ச்சி நூலகத்தில் சிவராசன் படம் வைக்கப்படும்.

பெரியார் திடலில் தொண்டு புரிந்தவர்களின் படங்களை ஒரே மாதிரி நூலகத்தில் வைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். அதே போல புலவர் இராமநாதன், இறையனார், கு.வெ.கி.ஆசான் அந்த வரிசையிலே மு.நீ.சிவராசன் அவர்களுடைய படமும் வைக்கப்படும்.

படமாக இருப்பார் நமக்கு முன்னாலே படமாகவும் இருக்கிறார்கள். நமக்குப் பாடமாகவும் இருக்கிறார்கள். அவரு டைய நினைவைப் போற்றுகின்ற வகையில் திராவிடர் கழகத்தின் சார்பிலோ, பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பிலோ நினைவுசொற்பொழிவுகள் உருவாக்கப்படும்.

ஆண்டு தவறாமல் நடத்தப்படும். அவர் பெரியா ருடைய தத்துவங்களை எப்படி ஆராய்ந்தாரோ அதைஒட்டி சிறப்பாக அந்த உரைகள் இதே அரங்கத்திலே நடைபெறும்.

அதே போல வெளியிலும் தேவைப்படும் பொழுது நடத்தலாம். ஒவ்வொரு முறையும் சிவராசன் அவர்களுடைய பெயரிலே, சுயமரி யாதைச் சுடரொளிகள் பெயரிலே எல்லாம் இணைந்து நடத்தப்படும்.

அவர்கள் மறையவில்லை. வாழ்ந்து கொண்டி ருக்கிறார்கள் என்று காட்டக்கூடிய வகையிலே நடத்துவோம் என்று கூறி நமது துயரத்தில், துன்பத்தில் பங்கு கொண்ட அனைவர்க்கும் எங்களது உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
-இவ்வாறு தமிழர்தலைவர் உரையாற்றினார்..
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner