சனி - ஞாயிறுகளில் எங்கெங்கும் பயிற்சிப் பட்டறைகள் நடக்கட்டும்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

சென்னையில் இளம் பேச்சாளர்களுக்குப் பயிற்சிப் பட்டறை  - ஒகேனக்கல்லில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

திராவிடத்தால் எழுந்தோம் என்று உணர்ச்சி கொண்டு கலந்துகொண்ட இளைஞர்களைப் பார்த்து இளமையானேன்!

சனி - ஞாயிறுகளில் எங்கெங்கும்

பயிற்சிப் பட்டறைகள் நடக்கட்டும்- நானும் பங்கேற்பேன்!

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை சனி, ஞாயிறுகளில் எங்கெங்கும் நடக்கட்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட்டுள்ள  அறிக்கை வருமாறு:

சென்னை பெரியார் திடலில் - கடந்த 23, 24, 25 ஆகிய மூன்று நாள்களிலும் நடைபெற்ற திராவிடர் கழகப் பேச்சாளர் பயிற்சிப் பட்டறையில், பழைய தலைமைக் கழகப் பேச்சாளர்களுடன், புதிய வரவுகளாக வந்து கலந்துகொண்டு பயிற்சியும், பக்குவமும் பெற்றவர்களின் மூன்றாம் நாள் வகுப்பு நிறைவின்போது,

சந்தேகங்களைக் கேள்விகள்மூலம் கேட்டு அனைவரும் நம்மிடம் தீர்த்துக் கொண்டார்கள்!

அதில் கலந்து பயிற்சி பெற்ற இருபால் இளைஞர்கள், இயக்கத்திற்கு நல்ல வண்ணம் பயன்படுவார்கள் என்ற நம்பிக்கை நமக்கு ஏற்பட்டது!

தருமபுரி ஒகேனக்கல்லில்...

நேற்று (30.12.2016) தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் இவ்வாண்டு மூன்றாவது தொடர் ஆண்டாக - கழக இளைஞர்கள், மாணவர்களின் பயிற்சிப் பட்டறைக்கு வந்து கலந்துகொண்டு பயன் பெற்றவர்கள் பக்குவமடைந்து, எதிர்காலத்தில் நல்ல கொள்கைப் பரப்புவோராக உயருவர் என்பது திண்ணம்.

எல்லாம் புது வரவுகள் - என்னைக்கூட நேரில் சந்தித்திராத இளைஞர்கள்; என்றாலும் தந்தை பெரியாரின் சமூக சமத்துவம், சுயமரியாதை, இனமானம், பெண்ணடிமை ஒழிப்பு - இவைகளால் ஈர்க்கப்பட்டு வந்துள்ளார்கள்!

அதுவும் திரைப்படமாயை - சின்னத்திரை, பெரிய திரை, அரசியல் பதவியாசை மயக்கம், பல்வேறு வகைப் போதைகள் - இவைகளுக்குப் பலியாகிடாமல் இங்கே வந்துள்ளார்கள்!

திராவிடமா? தமிழா? என்றெல்லாம், திசை திருப்பிவிட பார்ப்பனக் கைக்கூலிகளின் முகவர்களாகி விட்டவர்களின் குழப்பங்களுக்குப் பலியாகாமல், பெரியார் மண்ணில் விதைக்கப்பட்ட பொறுக்கு விதைகளாக இராணுவக் கட்டுப்பாட்டுடன் அந்த முகாம்களில் கலந்துகொண்டனர்.  இருபாலரிடம் எந்த சிறு சலனமும் இன்றி நட்புறவோடு - மரியாதை குறையாத நட்புறவோடு நடந்துகொண்டனர் என்பதை பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மகளிரான தோழியர்களே வெளிப்படையாக பெருமையுடன் கூறியது கேட்டு நம்மனம் எல்லையற்ற உவகையை அடைந்ததோடு, உற்சாகத்தில் மகிழ்ந்தோம் -  நாங்கள் அனைவரும்!

நேற்று 80 இருபால் இளைஞர்கள், மாணவர்கள் பயிற்சிக்காக வந்தனர் - பயின்றனர் - சென்றனர் - என்பதில் பட்டதாரிகளும், மேல்பட்டதாரிகளும், பட்டயதாரிகளும், தொழில்நுட்பக் கல்வி பயின்றோரும் எவ்வளவு என்பதைக் கீழே காணும் பட்டியலைப் பாருங்கள்; வியப்படைவீர்கள் என்பது உண்மையே!

மொத்த பயிற்சியாளர்கள் 80; அதில் பட்டதாரிகள் விவரம் வருமாறு:

எம்.எஸ்சி., பி.எட். -              3                 எம்.ஏ., பி.எட்.              -              1

எம்.ஏ.                -              2                        எம்.எஸ்சி     -              1

எம்.காம்          -              4                            எம்.பி.ஏ.                          -              1

பி.இ.   -              3                                       பி.ஏ.பி.எட்     -              1

பி.எஸ்சி. பி.எட்.       -              1                பி.எஸ்சி (அக்ரி)       -              1

பி.ஏ. (எல்.எல்.பி.)    -              1                பி.ஏ.                    -              10

பி.காம்              -              11                     பி.பி.ஏ.                              -              6

பி.எஸ்சி.,       -              5                             டிப்ளோமா   -              1

அய்.டி.அய்   -              1                             பிளஸ் டூ                        -              4

இவர்கள் அனைவரும் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் - ஓரிருவரைத் தவிர!

திராவிடத்தால்தான் எழுந்தோம்!

திராவிடத்தால் வீழ்ந்தோமா? எழுந்தோமா? என்பதற்கு அங்கு கண்கூடாகக் கண்ட - கிடைத்த விடை இது!

படிப்பறிவைப் பெற்றால் மட்டும் போதுமா? பகுத்தறிவு அல்லவா அடிப்படையாக அமையவேண்டும். அதை எங்கே பெறுவது? எப்படிப் பெறுவது? என்பதற்கு விடைதான் நமது மாணவர் - இளைஞர் பயிற்சிப் பட்டறைகள்.

பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்ட எல்லோருடைய மின்னஞ்சல் முகவரி, கைப்பேசி எண்,  இருப்பிட முகவரி பெற்றுள்ள நிலையில், அவர்களை இடையறாது தொடர்பு கொண்டு நமது மாணவ, இளைஞர் பொறுப்பாளர்கள் புதுப்பித்து பலமாக்கிட வேண்டும்.

எனக்கு அயர்வு, சோர்வு, மருத்துவ சிகிச்சையினால் ஏற்பட்ட களைப்பு - இவையெல்லாம் இந்த இருபால் இளைஞர்கள் பட்டாளத்தைக் கண்ட பிறகு, ‘எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்’ என்று புரட்சிக்கவிஞர் பாடியதுபோல, எங்கோ மறைந்துவிட்டன!

தமிழ்நாட்டின் முதல் பேராசிரியர் பெரியாரின்

மாலை நேர வகுப்புகள்

தமிழ்நாட்டின் முதல் பேராசிரியரான தந்தை பெரியாரின் மாலை நேரத்தில், மணிக்கணக்கில் ஆற்றிய சொற்பொழிவு - வகுப்புகள்தான் நம்மை மனிதராக, சுயமரியாதை வீரர் - வீராங்கனையாக - மான உணர்வுடன் எழுச்சி பெற்ற அடிமைத்தளையறுத்த அறிவுள்ள மனிதம் பொங்கும் மனிதர்களாக மாற்றியவையாகும்.

சனி - ஞாயிறுகளில் பயிற்சிப் பட்டறை

எனவே, 2017 இல் மாவட்டந்தோறும் குறைந்தது இரண்டு நாள் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படல் வேண்டும் (நானும் பெரிதும் கலந்துகொண்டு என்னை இளமையாக்கிக் கொள்ள - மேலும் உழைக்கப் பக்குவப்படுத்திக் கொள்வேன் என்று உறுதி கூறுகின்றேன்).

கழகப் பொறுப்பாளர்கள் கவனமாக இதற்கு ஆவன செய்து திட்டமிடல் வேண்டும்.

 

கி.வீரமணி
தலைவர்,    திராவிடர் கழகம்.


சென்னை
31.12.2016.
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner