மாநில அரசின் அனுமதியின்றி தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா? - கி.வீரமணி கேள்வி

எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மாநில அரசின் அனுமதியின்றி தலைமைச் செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா?

இது அச்சுறுத்தல், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனத்துக்கு என்ன பதில்?

தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பும் வினா

மாநில அரசின் அனுமதியின்றி தமிழக அரசின் தலைமை செயலகத்துக்குள் துணை ராணுவம் நுழையலாமா? இது அச்சுறுத்தல் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற விமர்சனத்துக்கு என்ன பதில்? என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் கடந்த காலங்களில் குறிப்பாக 2016இல்கூட பல தொழிலதிபர்கள், கல்வி நிறுவன முதலாளிகள், சினிமாத்துறையினர் - இப்படி பலபேரிடம் வருமான வரித்துறை 'ரெய்டுகள்' நடந்துள்ளன!

ஆனால், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் சென்னை அண்ணா நகரிலும், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள தமிழக அரசின் தலைமைச் செயலர் அறையிலும் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனையும், அதில் பின்பற்ற வேண்டிய நடைமுறையும் பொதுவான பலரின் கேள்விக்கும், விமர்சனத்திற்கும் ஆளாகியுள்ளன!

அரசியல் அச்சுறுத்தல்

இதில் அரசியல் அச்சுறுத்தல் என்ற உள்நோக்கம்  இருக்குமோ என்றெல்லாம் செய்தி ஊடகங்களிலும், தொலைக்காட்சிகளிலும் விவாதங்களும், ஆய்வுக் கட்டுரைகளும் வந்த வண்ணம் உள்ளன! தேவையா இது?

சந்தேகப்படும்படியாக ஏதேனும் தகவலோ, செய்திகளோ, வருமான வரித்துறை பெரிய அதிகாரிகளுக்குக் கிடைத்தால், அவர்கள் அந்த நபர்கள் வீட்டில் சோதனை நடத்திடுவதை யாரும் குறைகூறவோ, தவறு என்றோ, அரசியல் சார்ந்த நடவடிக்கை என்றோ கூறிடுவதில்லை; கூறிடவும் முடியாது!

அதற்கென கடமையாற்றும் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தனிப்பட்ட விருப்பு வெறுப்போ, குரோதங்களோ இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் எழுவதில்லை.

ஆனால், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக இருந்த திரு.ராமமோகனராவ் அவர்கள் வீட்டில் நடைபெற்ற வருமான வரி ரெய்டும், அதன் தொடர்ச்சியாக சென்னை தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளரின் அறைக்குள் நுழைந்து - அதுவும் மத்திய அரசின் துணை ராணுவத்தின் பாதுகாப்போடு நடந்தது என்பதுதான்  இப்போது பொதுவானவர்களையும் நியாயமான கேள்விகளைக் கேட்க வைத்துள்ளது.

திரு. ராமமோகனராவின் ஆத்திரம் பொங்கிய பேட்டியில் அவர் கூறியதை ஏற்காதவர்கள் ("நான் புரட்சித்தலைவியால் பயிற்சி கொடுக்கப்பட்டவன், இன்னமும் நான்தான் தலைமைச் செயலாளராக இருக்கின்றவன்" என்பது போன்ற அதீதப் பேச்சுகள்- தேவையற்றவையாகும்) பலரும்கூட, அவர் எழுப்பிய சில சட்டபூர்வமான கேள்விகளைப் புறந்தள்ள முடியாததினால்தான், மிக மூத்த, பல ஆண்டுகளுக்கு முன்பே இந்திய ஆட்சிப்பணியிலிருந்து ஓய்வு பெற்ற 90ஆண்டு நீண்ட வாழ்வில் உள்ள மரியாதைக்குரிய திரு. பி.எஸ்.இராகவன் அவர்கள் தூய எண்ணத்துடன் இன்று ‘தமிழ் இந்து’ நாளேட்டில் எழுப்பியுள்ள சட்டபூர்வமான - அனுபவமிக்க பக்குவத்தோடு எழுதியுள்ள கட்டுரையில் கேட்டுள்ள சில கேள்விகளுக்கு வருமான வரித்துறை - நிதித்துறை - மத்திய அரசு மூலம் சரியான பதில் கிடைக்க வேண்டும்.

"ராம மோகனராவின் மூன்று வாதங்கள் நியாயமானவை என்று எனக்குப்படுகிறது. முதலாவது, சோதனை அனுமதிக் கடிதத்தில் தன் பெயரில்லை. தன்னுடைய மகனின் பெயர்தான் இருந்தது என்றும், வருமான வரித்துறை  சோதனைக்கு வந்தவர்கள் துணை ராணுவப்படையினருடன் தன் வீட்டிற்குள் நுழைந்து சோதனையிட்டது பலாத்காரமான செயல்" என்று அவர் கூறியுள்ளார்.

ராமமோகனராவ் மகன் (விவேக்) வேறு முகவரியில் உள்ளபோது, ராமமோகனராவ் வீட்டுக்கு வலுக்கட்டாயமாகச் சென்றது சரியில்லை என்ற கருத்தை திரு பி.எஸ்.ராகவன் கூறுவது நியாயமானது-அனுபவபூர்வமாக அதை விளக்கியுள்ளார்கள்.

இரண்டாவது, ராமமோகனராவ் வீட்டில் ரூபாய் 30 லட்சம் புது நோட்டுகள், 100க்கும் அதிகமாக கிலோ கணக்கில் தங்க, வெள்ளிப் பொருள்களையும் கைப்பற்றியதுபோன்ற தோற்றமுள்ள தகவல்கள் ஊடகங்களில்,  வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக வெளியாயின.

ஆனால்,  ராமமோகனராவோ, ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் ரொக்கம், மனைவி, மகளின் 40, 50 சவரன்கள், விநாயகன், லட்சுமி, வெங்கடேசுவரா உள்பட 20-25 கிலோ எடையுள்ள வெள்ளிப் பொருள்கள்தான் கைப்பற்றப்பட்டன என்கிறார்.

எனவே, “சோதனையின் அடிப்படையே சந்தேகத்துக்கு உரியதாகி விடுகின்றது’’ என்கிறார் திரு. ராகவன் அவர்கள்.

மூன்றாவது, தலைமைச் செயலகத்துக்குள்ளே நுழைந்து தலைமைச்செயலாளர் அறையில் அதுவும் துணை ராணுவத்துடன் (உள்ளூர் போலீஸ் பெரிய அதிகாரிகளின் அனுமதிகூட பெறாமல்) சென்றது எல்லை மீறிய செயல் என்றும், தலைமைச் செயலாளர் அறையில் எத்தனையோ ரகசிய கோப்புகள் இருக்கும்; அதனை மூன்றாவது நபர் பார்க்க, படிக்கச் செய்ததில் அரசின் ரகசியத்தைப் பார்த்த குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை அந்த நபர்களுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார் திரு. பி.எஸ். ராகவன்.

அரசியல் சட்ட விதிகள் மீறல்

இது வெறும் ராமமோகனராவுக்கும், வருமான வரித்துறைக்கும் இடையே நடக்கும் பிரச்சினை என்ற பரிமாணத்தைத் தாண்டி,  மாநில அரசின் உரிமைகளை, அரசியல் சட்ட விதிகளை மத்திய அரசு மீறிடும் அளவுக்கு மிக அசாதாரணப் பிரச்சினையாக மாறியுள்ளதே!

மத்திய, மாநில அரசுகளின் உரிமைகள் அரசமைப்புச் சட்டப்படி வரையறுக்கப்பட்டவை.

மாநில அரசின் அனுமதியின்றி, துணை ராணுவம் நுழையலாமா?

இது அச்சுறுத்தல், அரசியல் உள்நோக்கம் கொண்டது என்ற கடும் விமர்சனத்துக்கும் இடம் தருவதாகாதா?

மத்தியில் உள்ள மோடி அரசு தமிழ்நாட்டு அரசினை இப்படி தங்களது ஆதிக்க, அதிகார வளையத்தில் நெருக்குவதா என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளனவே!

இது பெரியார் மண்

உறவுக்குக் கைகொடுக்கவும், உரிமைக்குக் குரல்  கொடுக்கவும்தான் நம் மாநில  அரசு, குறிப்பாக திராவிடர் இயக்க ஆட்சிகள் நடைபெற்றிட வேண்டும் என்பதே தமிழ்நாட்டு  மக்களின் கருத்து. அதனால் கடந்த 50 ஆண்டுகளாக வேறு கட்சி ஆட்சிகள் வர முடியாத நிலை!

இது பெரியார் மண். உரிமைக்குரலை நசுக்கி, ஆதிக்கம் செலுத்த ஒத்திகைகள் இனி வேண்டாம்.

 

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்


சென்னை    
29-12-2016  .
 

தொடர்புடைய செய்திகள்:
இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner