வீரமணி, விஜயபாரதத்தை மட்டுமல்ல - உங்கள் கீதையையும் கற்றுத் தேர்ந்தவர்தான்!
எழுத்துரு அளவு Larger Font Smaller Font

மூகாம்பிகையை மறந்தது ஏனோ?

"அன்புடையீர், வணக்கம்.

விஜயபாரதம் 14.10.2016 இதழ் அட்டைப் படத்தில் எம்.ஜி.ஆர்., கிருபானந்த வாரியார் படத்துடன் எம்.ஜி.ஆர். ஹிந்துத்வ ஆதரவு முதல்வராக விளங்கினார் என்று கட்டுரை வெளியாகியிருந்தது.

திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி அவர்கள் விஜயபாரதத்தின் நீண்ட நாள் சந்தாதாரர். எம்.ஜி.ஆர். ஹிந்துத்வ ஆதரவு முதல்வராக இருந்தார் என்பதை ஏற்றுக் கொள்ள அவரால் முடியவில்லை. எனவே விஜயபாரதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர்களின் மாதமிருமுறை இதழான 'உண்மை' பத்திரிக்கையில் (16.10.2016) கி. வீரமணியே கட்டுரை எழுதியுள்ளார்.

விஜயபாரதத்தில் எம்.ஜி.ஆர். மூகாம்பிகை அம்மன் கோயில் சென்று நேர்த்திக் கடனாக தங்கவாள் செலுத்தி வழிபட்டு, மூகாம்பிக்கை அம்மன் உருவத்தில் என் தாயைப் பார்க்கிறேன் என்று வந்த செய்திக்கு மட்டும் கி. வீரமணியால் பதில் கொடுக்க முடியவில்லை. எது எப்படியிருப்பினும் கி. வீரமணி நமது வாசகர் என்பதில் நமக்குப் பெருமிதம் தான். ஓயாத அவரது சுற்றுப் பயணத்திற்கு இடையிலும் நேரம் கொடுத்து விஜயபாரதம் படிக்கும் அவரது பண்புக்கு ஒரு சபாஷ் போடலாமே!"

ம. வீரபாகு, ஆசிரியர்

- 'விஜயபாரதம்' 11.11.2016

'விஜயபாரதம்' ஒன்றை ஒப்புக் கொண்டு விட்டது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் எதிரிகளின் நூல்களைப் படித்து விட்டுத் தான் பேசுகிறார்; எதிர்க்க வேண்டும் என்பதற்காக கண் மூடித்தனமாகப் பேசக் கூடியவரல்லர் வீரமணி என்பதை 'விஜயபாரதம்' ஒப்புக் கொண்டு விட்ட தற்காக 'விஜயபாரதத்தை'ப் பாராட்டத் தோன்றுகிறது.

திராவிடர் கழகத் தலைவர் எழுதிய "கீதையின் மறுபக்கம்" நூலையும் 'விஜயபாரதம்' வகையறாக்கள் படித்துப் பார்க்கட்டும்; அதில் கூறப்பட்டுள்ள ஒவ்வொன்றுக்கும் கீதையிலேயிருந்தே ஆதாரத்தை எடுத்துக் காட்டியுள்ளார்.

இது வரை ஒருவரியைக்கூட மறுக்க முடிந்ததா இந்துத்துவா கம்பெனிக்காரர்களால்!

இந்து முன்னணி அமைப்பாளர் இராம. கோபாலன் கலைஞரைச் சந்தித்து கீதையைக் கொடுத்துப் படிக்கச் சொன்ன பொழுது மானமிகு கலைஞர் அவர்கள் தயாராக வைத்திருந்த, கலைஞர் அவர்களின் இளவல் வீரமணி அவர்களால் எழுதப்பட்டிருந்த அந்தக் "கீதையின் மறுபக்கம் நூலை" எடுத்துக் கொடுத்து இதையும் படியுங்கள் என்று சொன்னாரே நினைவிருக்கிறதா?

அனேகமாக திருவாளர் இராம. கோபாலன் படித்திருப்பார் - ஒரு வரி, மறுப்பு வரவில்லையே - ஏன்?  மறுக்க முடியாது என்பதுதான் உண்மை.

தந்தை பெரியார் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள் என்ற நூல் இதுவரை இலட்சக்கணக்கில் விற்றுத் தீர்ந்தனவே.

அந்நூல் "Ramayana a true reading" என்று ஆங்கிலத்திலும், 'சச்சு இராமாயண்' என்று இந்தியிலும் வெளி வந்துள்ளனவே.

அண்மையில், இந்தியில் வெளிவந்த தந்தை பெரியாருடைய அந்த நூலை டில்லி பல்கலைக் கழக மாணவர்கள் - மாணவர்கள் மத்தியிலே பரப்பினார்களே! இந்த வரலாறு எல்லாம் தெரியுமா 'விஜயபாரதம்' வகையறாக்களுக்கு?

தந்தை பெரியார் அவர்களின் "இராமாயணப் பாத்திரங்கள்" என்ற நூலைப் படித்துப் பார்த்தால் தெரியும் - இராமாயணத்தின் ஒவ்வொரு பாத்திரத்தை யும் எப்படி எல்லாம் நுட்பமாக ஆய்வு செய்துள்ளார் என்பது புரியும்.

எம்.ஜி.ஆர். இந்து முதல்வராக இருந்தார் என்கிறது "விஜயபாரதம்." இறந்தவரை சாட்சிக்கழைப்பது ஒரு அநாகரிகமான செய்தி.

அதே நேரத்தில் என்ன மதம் என்று கேட்டபோது, "திராவிட மதம்" என்று சொன்னவர் எம்.ஜி.ஆர். என்பதை 'விஜயபாரதமே' ஏன் மறைக்கிறாய்?

ஓ, 'மறை'தானே உங்கள் வேதம்!

 

- கருஞ்சட்டை.
 

இப்பிரிவில் அண்மைச் செய்திகள்:
இப்பிரிவில் முந்தையச் செய்திகள்:

தமிழில் கருத்துக்களை தெரிவிக்க -  


Security code
Refresh

Banner
Banner